சென்னை சங்கமம் சென்று இருந்த போது அகிலுக்காக ஒரு மண் உண்டியல் வாங்கி இருந்தேன். குழந்தைக்கு சேமிப்பு, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு நல்ல விளையாட்டாகவும் அமையும் என்பதற்க்காக,  அதை அவனிடம் கொடுத்து, “தினம் இதில் காசு போட்டு வை, ஃபுல்லானதும் உடைத்து காசுகளை வெளியே எடுத்து உனக்கு சிட்டி சென்டரில் ஒரு சொப்பு சாமான் வாங்கிதருகிறேன்” என்று சொல்லி அதில் போட வேண்டிய முதல் காசையும் கொடுத்தேன். என்னுடைய சிறு வயதில் நான் வைத்து இருந்த உண்டியல்கள் வேறு ப்ளாஷ் பேக்கில் வந்து சென்று கொண்டு இருந்தன.

இரண்டு நாட்கள் கழித்து பணி முடிந்து வீட்டுக்குள் சென்றால், ஹால் முழுவதும் மண் உண்டியலின் துண்டுகள்.

“அடடா, என்னடா இது இப்படி பண்ணீட்டே உண்டியலை ஏன் உடைச்சே?” நான் அதிர்ச்சியின் விளிம்பில்…

“அதில இருந்து காசு எடுக்க முடியலை அம்மா… அதனால தான் உடைச்சோம்” அகிலின் பதில்.

“என்னடா கண்ணா, காசு அதில ரொம்பியவுடனே தானே அதை உடைக்கனும்… இப்போவே ஏன்பா உடைச்சே…” இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வர முடியாமல்…

“காசு ஃபுல்லான பிறகு தாம்மா உடைச்சோம்…”

“எப்படி டா காசு ஃபுல்லாச்சு?”

உள்ளே இருந்து என் அம்மாவின் குரல் – “அப்பா வைச்சு இருந்த எல்லா சில்லறை காசுகளையும் போட்டு, உண்டியலை ரொப்பியாச்சு…” எங்கள் வீட்டில் கிட்டதட்ட ஒரு ஆயிரம் ருபாய்க்கு சில்லறைகளை ஒரு கவரில் போட்டு வைத்து இருப்போம், யாராவது பஸ்ஸுக்கு மற்றும் வேறு சில்லறை தேவைகளுக்கு எடுத்து உபயோகபடுத்திக்கொள்ளுவதற்க்காக.

அகில் ஒடிவந்து என் மடியில் இழைந்து கொண்டு, “காசு ஃபுல்லானதற்க்கு அப்புறம் தான் உடைச்சோம் இல்ல..” என்று சொன்னது. நானும் அதற்க்குள் சுதாரித்துக் கொண்டு “பரவாயில்லைடா கண்ணா… ” என்று சொல்லி சமாளித்தேன்  (வேறு என்னத்தை சொல்ல). ஆனாலும் என்னுடைய நீண்ட கால சேமிப்பு மற்றும் விளையாட்டு ப்ளான்  இப்படி ஒரே நாளில் பிசுபிசுத்து போகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை…

ஜெயா.