ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்த போது, கீழ் வீட்டில் குடியிருந்த வரலாற்று ஆசிரியையிடம் இருந்து கடன் வாங்கி படித்தது  சிவகாமியின் சபதம். மிகவும் ரசித்து படித்த புத்தகம். கண்ணெதிரெ காண்பது போன்ற பிரமையும், நிறைய நாள் அதன் பாதிப்பிலிருந்து வெளியே வர முடியாத படிக்கு இருந்தது. அது படித்து முடித்த கையோடு பொன்னியின் செல்வனும் அவர்கள் வீட்டிலே இருந்து எடுத்து படிக்க முற்ப்பட்ட போது, ஏனோ பிடிக்காமல் போனது. படித்தது என்னமோ ஒரிரு அத்தியாயங்கள் தான்,அதில் முதலில் வரும் சைவ வைணவ கருத்துகள் தான் காரணம் என நினைக்கிறேன். அதற்க்கு பிறகு ஒரு தரம் பார்த்திபன் கனவு படித்தேன், அதிலும் நரசிம்மவர்மரின் குணாதியங்கள் அவ்வளவு அருமையாக இருந்த நினைவு.

அதன் பின்னர், பல்வேறு சூழ்நிலைகளில் பொன்னியின் செல்வன் படித்ததில்லை என்று கூற வேண்டி இருந்த போது எல்லாம், சே அந்த புத்தகத்தை விட்டு வைத்திருக்கின்றோமே, எப்படியாவது படித்தே தீர வேண்டும் என்ற வேட்கை அதிகமாகி கொண்டு இருந்த்து.  ஜனவரி மாதம் என்றால் எல்லா வாசகர்களையும் பிடித்து ஆட்டும் புத்தக கண்காட்சி என்னையும் ஆட்க்கொண்டு, வானதி பதிப்பகத்தின் பொன்னியின் செல்வனை வாங்கியே தீர வைத்தது.

இவ்வளவு நாளாக நம் கண்களில் இருந்து தப்பி இருந்த புத்தகத்தை படித்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ஆரம்பித்தேன். முன்பு போல இல்லாமல், இப்போது குடும்பம், குட்டி, ஆபிஸ் என கால் கட்டுகள் அதிகமாகி விட்ட படியால் எடுத்த கையுடன் முடிக்க முடிய வில்லை, ஆயினும் பஸ் பிரயாணங்களில், எங்கள் வீட்டு தெருவில் இருந்து மெயின் ரோடு வரையில், ஷேர் ஆட்டோவின் குலுக்கலில், பஸ் நிலையத்தில் இருந்து என் சீட் வரை, அலுவலக ஜிம்மின் டிரட்மில் என கிடைத்த கேப்பில் எல்லாம் படித்து கொண்டு இருந்தேன்.

வெற்றி கரமாக நேற்றோடு ஐந்து பாகங்களையும் முடித்தேன். ஆகா என்ன அருமையான புத்தகம். சும்மாவே காவிரியை பார்த்தால் எனக்கு பாசம் பிய்த்துக் கொள்ளும். எனக்கு காவிரியின் அருகே பிறக்கும் பயனோ அல்லது வளரும் பயனோ இல்லாது இருந்தாலும், என் வீட்டுகாரருக்கு இருந்து இருக்கிறது. அவர் வீட்டுக்கு செல்லும் போது எல்லாம், அந்நதியை பார்த்தால் கொள்ளை ஆசையாக இருக்கும். இளங்கோ அடிகள் பாடிய, நடந்தாய் வாழி காவேரி செய்யுள் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். எவவளவு ஆயிரம் ஆண்டுகளாக இந்நதி இப்படி ஓடிக்கொண்டு இருக்கின்றது, எத்தனை விதமான மக்களை, நாகரீகங்களை பார்த்திருக்கும். எத்தனை பேர் இதனால் பயனைடைந்து இருப்பார்கள், எவ்வளவு பேர் வாழ்க்கைக்கு இது உதவியாக இருந்து இருக்கும். இதற்கு வாய் இருந்தால் என்னிடம் என்ன பேசும் என கற்பனையில் ஆழ்வேன். அந்நதியை சூழ்ந்து இருக்கும் அமைதி அப்படியே நம் உள்ளத்திலும் நிறைந்து வழியும். இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது அது இன்னும் ஒரு நூறு மடங்கு அதிகமாகி விடும் போல இருக்கிறதே. அடுத்த முறை கும்பகோணம் செல்லும் போது காவிரி பக்கம் ஒரு பாய் எடுத்து கொண்டு போய் அங்கேயே தங்கிவிடுவேன் என நினைக்கிறேன்.

அடுத்ததாக என் மனதில் எப்போதுமே இருக்கும் ஆசை, காலம் அப்ப்டியே பின்னால் சென்று விடக்கூடாதா.. பார் வியக்க ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்களின் காலங்களில் மக்கள் இப்படி இருந்தனர் அப்படி இருந்தனர் என்ற செய்யுள்களும் பாடல்களும் எவ்வளவோ படித்து இருக்கிறோமே அந்த காலத்தில் நாமும் வாழ்ந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும்… தமிழ் செய்யுள்களை மற்றும் வரலாற்றை ஆர்வமுடன் படித்தவர் அனைவருக்குமே அப்படி ஒரு எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன். பெண்ணாய் பிறந்தவர்கள், பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தும் பொருந்தியவர்களாய், வீட்டில் இருந்து மேற்ப்பார்வை பார்ப்பவர்களாய், வயல் வேலை செய்து கொண்டும் ஆண்களை பராமரித்து கொண்டும் காலம் தள்ளியிருப்பர்.  பதிமூண்று வயதில் கல்யாணம் செய்து கொண்டு பதினைந்து வயது கணவனோடு குடித்தனம் நடத்துபவரா இருந்திருப்பர். பள்ளிக்கூடம், கல்லூரி படிப்பு, டியுஷன், மதிப்பெண்கள், பின்னர் வேலை, கல்யாணம், இருவர் சம்பாத்தியம், housing loan, சிசேரியன், பிள்ளைகளின் கான்வென்ட் படிப்பு, டி.வி., மெகாசிரியல் என இயந்திரத்துவமாக இல்லாமல் வாழ்க்கையை எப்படி அனுபவத்து இருந்திருப்பர். ஆண்களாக இருந்தால் இன்னும் குஷி. அழகாக ஒரு வாளும் வேளும் எடுத்துகொண்டு போருக்கு கிளம்பி விடலாம். அதிர்ஷ்டம் இருந்தால் திரும்ப உயிரோடு வரலாம், இல்லை யென்றால் வீர மரணம் அடைந்தான் என பெருமை படலாம். இல்லை யென்றால் இருக்கிறது பைந்தமிழ் – அதில் ஒரு புலவராகி மொழிச்சேவை செய்து சத்திரம் சாவடி என வாழ்க்கை கழிந்து விடாதா?  கம்ப்யூட்டடாவது கோடிங்காவது மண்ணாங்கட்டியாவது? அதிலும் நாம் சைக்கிள்கேப்பில் அப்போதைக்கு செல்வாக்காக உள்ள அரச குடும்பத்தில் பிறந்து விட்டால் சொல்லவும் வேண்டுமோ? வாழ்க்கை ராஜ போகத்தில் இருந்திடாதோ? நிஜமாகவே முத்தால் வேய்ந்த மணி மண்டபங்களும், பொன்னால் ஆன மாளிகைகளும், வைர வைடூர்யங்களால் இழைத்த மணி மகுடங்களும் இருந்திருக்க கூடுமோ? சந்திர குப்த மௌரியரும், மாவீரர் அசோகரும், நரசிம்ம வர்ம பல்லவரும், கிள்ளிவளவனும், வல்வில் ஓரியும், மனுநிதி சோழனும்,  பொன்னியின் செல்வரும் எப்படித்தான் இருந்திருப்பரோ?

ஹும்… என்ன செய்வது, பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை எனக்கு. நிஜமாகவே இந்து மதம் சொல்லுகின்ற மறுபிறவிக்கதையும், நாம் எத்தனையோ ஆயிரம் பிறவிக்ள் எடுத்து இருக்கிறோம் என்பது உண்மையானால் ஏதோ ஒரு ஜன்மத்தில் இவர்கள் காலத்தில் வாழ்ந்து இருக்க் மாட்டோமா? முக்கிய காரியங்களில் உடனிருந்திருக்க மாட்டோமா என்ற ஏக்கத்தை மறைக்க முடிவதில்லை.

பொன்னியின் செல்வன் – எளிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் அருமையான புத்தகம். மிக சிறந்த கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான நிகழ்வுகள், அழகான வர்ணனைகள் என இரண்டாயிரம் பக்கங்கள் போவதே தெரியாமல் நம்மையும் சோழ காலத்திற்க்கே கொண்டு செல்லும் அற்புத படைப்பு.

மந்தாகினி தேவியார் இறந்து போகும் தருணத்தை கடற்க்கரையில் வெங்கட் மற்றும் அகில் கடலில் விளையாடிக்கொண்டு இருந்த போது படித்துக் கொண்டு இருந்தேன். சற்று நேரம் கழித்து என்னை திரும்பி பார்த்த வெங்கட் அதிர்ந்து போய் கரைக்கு வந்தார். என் கண்கள் இரண்டிலிம் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அடிப்பாவி எவனோ இரண்டு அடி போட்டு விட்டு போனதை போல உட்கார்ந்து அழுதுகொண்டு இருக்கிறாயே என்ன ஆயிற்று என்று. கதையில் வரும் ஒருவர் இறந்து விட்டார் என்று கூறவும் அவர் விட்ட ஒரு பார்வை இருக்கின்றதே….

அருள்மொழி வர்மரின் முதற் தோற்றமும், வல்லவரையனும் ஆழ்வார்க்கடியானும் சம்பாஷித்து (வார்த்தை பிரயோகத்தை கவனிக்கவும்) கொள்ளும் காட்சிகளும், பெரிய பழுவேட்டரையர் இறக்கும் தருவாயும், பூங்குழலியின் கற்பனைகளும் சமயோசித புத்தியும், இளைய பிராட்டி மற்றும் வானதியின் நட்பும், நந்தினியின் அழகும் சூழ்ச்சிகளும், தஞ்சை, பழையாறை, இலங்கை ஊர்களி வனப்பும் வர்னணையும் அடடா எதை பாராட்டுவது, எதை விடுவது? கண்டிப்பாக இன்னும் நான்கைந்து முறை படித்தாலும் அலுக்காது என நினைக்கிறேன். படிக்கும் போது, அனைவருக்கும் உரிய ஒப்பீடும், பொறாமையும் வேறு தலை நீட்டுகிறது, நந்தினி அழகிற்க்கு நாம் இருந்தால் எப்படி இருக்கும்? பூங்குழலி அளவிற்கு தைரிய சாலியாகவும், பிரயோஜனபடுபவளாக நாம் இருந்திருப்போமா? இளைய பிராட்டியைபோல அன்பில் சிறந்தவளாகவும், அனைவரும் அடி பணியும் செல்வாக்கும் கையக படுத்தி இருந்திருப்போமா? வானதியை போல அதிர்ஷ்ட சாலியாக அருள்மொழி வர்மரை கல்யாணம் செய்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து இருந்து இருக்குமா என கேள்விகள் குடைந்து கொண்டு இருக்கின்றன மனதினுள்…

அருள்மொழிவர்மர் – அப்பா!! எல்லா நல்ல குணங்களின் உறைகடல் என சொன்னால் மிகையாகாது என நினைக்கிறேன். அவருடன் சேர்ந்த வல்லவரையன் அவர் நற்குணங்களை பார்த்து வியந்து அவரை போல் ஆவது, மற்றும் பேசுவது எல்லாம் ரசிப்பிற்குரியன. சே, அப்படி எல்லாம்  பிறப்பதற்க்கு நிச்சயம் பாக்கியம் செய்து இருக்க வேண்டும்… ஆதித்த கரிகாலன் இறப்பது, அதில் சூழ்ந்துள்ள மர்மம் எல்லாம் ஒரு திரில்லர் கதையை போல் அல்லவா இருக்கிறது. பழுவேட்டரையரும் கரிகாலனை கொல்ல வில்லை, நந்தினியும் கொல்ல வில்லை என்றால் யார்தான் கொன்றது?

நந்தினியின் கையில் மாட்டிக்கொண்டு, காதல் வலையில் சிக்கிக் கொண்டு பின்னர் உயிரையும் இழக்கும் மணிமேகலை எல்லார் மனதிலும் சோக கீதம் மீட்டிக் கொண்டு இருப்பாள் என்பதில் லவகிலேசமும் (மீண்டும் வார்த்தை பிரயோகத்தை கவனிப்பீர்களாக) சந்தேகம் இல்லை.

இவர்கள் மற்றும் அல்லாமல் சிறு கதாபாத்திரத்தில் வரும் அனைவரும் கூட நம் மனதை கொள்ளை கொள்ளும் படியாக கல்கி எழுதி உள்ளார் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. நகைசுவைக்கு பஞ்சமே இல்லாத நாவல் என்று சொன்னால் மிகையாகாது. பஸ்ஸில் பயணித்து கொண்டு இருந்த போது, சட்டென்று சத்தம் போட்டு சிரித்த என்னை கையில் புத்தகத்தை பார்த்து மன்னித்து விட்டார்கள் என்று சொன்னால் அது தவறல்ல. முக்கியமாக குடந்தை சோதிடர், தான் சொல்லும் சோதிடம் பொய்யானால் தன்னுடைய  ஏடுகளை எல்லாம் காவிரியில் எறிந்து விடுகிறேன் என்று சொல்லும் போது, ஆழ்வாருக்கடியான், நக்கலாக, நீர் போட தேவையில்லை, அவளே எடுத்துக் கொண்டாள் என்று காவிரி வெள்ளத்தை காட்டும் காட்சியில் அடக்க முடியாமல் சிரிப்பு பீரிட்டு வந்தது. அருள்மொழிவர்மர் தன் அரியாசனத்தை உத்தம சோழரான சேந்தன் அமுதனுக்கு கொடுத்ததோடு முடியும் கதை, அவர் ராஜராஜ சோழனாக முடிசூட்டிக் கொண்டு சாதித்தவைகளையும் கூறி இருந்தால் கூட ரொம்ப நன்றாக த்தான் இருந்திருக்கும்… இனையத்தின் உதவியோடு பல நாவல்கள் பேர் கிடைத்தாலும் அனைத்திலும் ஒரு வார்னிங் என்னவென்றால் அது பொன்னியின் செல்வனை போல் இராது என்பதுதான்.  இறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரிய சாதனைகள் செய்தவர்களை பற்றி இன்னமும் உலகம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றது. சே நாம் என்ன செய்ய போகிறோம் இந்த உலத்தில் வாழ்ந்து என்ற எண்ணம் வேறு வாட்டி எடுக்கின்றது.  இன்றைய சூழ்நிலையில் ஒரு படிப்பு படித்து, ஒரு அலுவலகத்தில்  குப்பை கொட்டிக்கொண்டு, தன் காலில் நின்று கொண்டு இருப்பதே போதும்  என்று மூளையின் ஒரு பக்கம் கூறினாலும் முழுவதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இப்படியாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வரலாற்று புத்தகத்தை படித்து முடித்த கையோடு அலுவலக நண்பர் வைத்து இருந்த காவிரி மைந்தன் மீது ஆட்டையை போட்டு இருக்கிறேன். அது எப்படி போகிறது என்று பார்க்கலாம். இப்போ வந்து யாராவது பொன்னியின் செல்வன் படித்து இருக்கின்றீர்களா என்று கேளுங்கள், நான்கு நாளைக்கு மூச்சு விடாமல் பேசுவோமில்ல…

ஜெயா.