நேற்று சாயங்காலம் டி.வியில் ஓடிக்கொண்டு இருந்த தாம் தூம் படத்தை பார்த்துக் கொண்டே துணி மடித்து வைத்துக் கொண்டு இருந்தேன். ஏழு மணிக்கு வேறு ஒரு சேனலில் ஜோதாஅக்பர் படம் என்று விளம்பரம் பார்த்து அதை வேறு பார்க்கவேண்டும் என்று வெங்கட் ரொம்ப ஆர்வமாக இருந்தார், நானும் தான், ஹிரித்திக் ரோஷனையும் ஐஷ்வர்யாராயையும் எத்தனை தரம் பார்த்து ஜொள்ளு விட்டாலும் திருப்தியாகுமா என்ன?

ஆறு மணி வாக்கில் டமால் என்று ஒரு சத்தம் – அகில் அவன் பொம்மை போனை எடுக்கிறேன் பேர்வழி என, செட்டாப் பாக்ஸை தள்ளிவிட்டான் கீழே. விழுந்த அடுத்த நிமிடம் டிவியில் படம் வரவில்லை. கார்ட் இன்சர்ட் செய்யுங்கள் என ஒரே செய்தி திரும்ப திரும்ப எந்த சேனலை வைத்தாலும் வந்து கொண்டே இருந்தது… வெங்கட் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது, அய்யோ பார்க்க நினைத்த படத்தை கடைசியில் பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று அல்லாட்டம் வேறு. என்னன்னவோ  செய்து பார்த்துக் கொண்டு இருந்தார், ரிமோட்டை சரி செய்தார், வைர் கனெக்ஷென் எல்லாம் சரி பார்த்தார், அப்போதும் படம் வந்த பாடில்லை… கடைசியில் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற உணர்ச்சியுடன் நோண்டுதலை விட்டு போய் அமர்ந்து கொண்டார்.

சரி நம் திறமையை சோதித்து பார்க்கலாம், என்று நான் சென்று ஒரு முறை கனெக்ஷென் சரி பார்த்துவிட்டு, செட்டாப் பாக்ஸை தலை கீழாக திருப்பினேன், என்ன மாயமோ, படம் திரும்ப வந்து விட்டது. என் பெருமையை கேட்க வேண்டுமோ, நேராக வெங்கடிடம் போய் நின்று, “தொட்டால் துலங்கிற கை இது… சொன்னால் நம்ப மாட்டீர்கள், இப்போதாவது பார்த்து என் பெருமையை தெரிந்து கொள்ளுங்கள். கையை கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்க” என்று ஸ்டைலாக டையலாக் விட்டு ஒற்றிக் கொள்ள வைத்தால் தப்பா என்ன?

ஜெயா.