அனைவரும் காலில் பம்பரம் கட்டிக்கொண்டு சுழலும் காலை வேளை. ஆராதனா சமையலறைக்கும் டைனிங் ஹாலுக்கும்  இடையே ஒரு பாலம் இருந்திருக்க கூடாதா என்று எண்ணிக்கொண்டே சமையல் செய்து கொண்டு இருந்த அம்மாவை பார்த்துக் கொண்டு இருந்தாள். (பின்னே அவளே செய்வாள் என்று நினைத்தீர்களா? என்னுடைய கதையில் வரும் கதாநாயகி கூட வீட்டில்  வேலை எதுவும் செய்ய மாட்டாள் என்று நீங்கள் ஊகித்து இருந்திருக்க வேண்டாமா?)

அம்மாவின் குரல் வேகமாய் ஒலித்தது – “ஹெய் ஆரு, டிபன் பாக்ஸை கழுவக் கூட போடாமல் அப்படி என்னதான் செய்யறீயோ? மரியாதையா கொண்டு வந்து சிங்க் ல போடு…”

“இதோ போடறேன் அம்மா…” சொல்லிக்கொண்டே வந்த ஆராதனா டிபன் பாக்ஸை கண்ணால் துழாவினாள். முதல் பார்வையிலே படும் டப்பா, என்ன கண்ணாம்பூச்சி காட்டுகின்றது என்று எண்ணிக் கொண்டே டைனிங் ரூம்மிற்க்கு சென்றாள் முந்தைய நாள் நிகழ்ச்சிகளை அசைப் போட்டுக் கொண்டே…

சாயங்காலம் எப்போதும் போல கணினியை லாக் செய்து விட்டு எழுந்தேன். கைப்பையோடு டிபன் பேக்கையும் எடுத்தாகத்தான் நினைவு… போய் போன் பில் கட்டினேன்… அங்கே விட்டு விட்டேனோ? இல்லையே, வெறும் போன் மட்டும்தானே எடுத்து பேலன்ஸ் பார்த்தேன்…

“என்னடி? டப்பா கொண்டு போட இவ்வளவு நேரமா? என்னடி பண்ணிகிட்டு இருக்கே?…” அடுத்த அலாரம்..

பசித்தாற்ப் போல் இருக்கவே  அருகில் இருக்கும் ஜூஸ் கடையில் ஒரு சாத்துக்குடி ஜூஸ் குடித்தேனே, அங்கே வைத்தேனோ? இல்லையே, அப்போதெல்லாம் கையில் இருந்த ஞாபகம் இருக்கின்றதே… அப்புறம் பஸ்ஸில் ஏறினேன்… பக்கதில் யாரும் வந்து உட்காராததால், அங்கே வைத்தேன். திருவான்மையூர் வந்து எடுத்துக் கொண்டு இறங்கினேனே…

“ஆரூ…”

“ஏம்மா அலறரே? அதைத்தானே தேடிக்கிட்டு இருக்கேன்… ”

“அடிப்பாவி ஆபீஸ்ல விட்டு வந்திட்டியா?…”

“இல்லைம்மா எடுத்துகிட்டுதான் வந்தேன்…”

“அப்போ வழில எங்காவது விட்டுட்டியா?”

“அதைத்தான் யோசிச்சிக் கிட்டு இருக்கேன். இங்கேதான் வந்து சோபால வைச்சேன்.”

“சோபால வைச்சது எங்கேயாவது கால் முளச்சா ஓடிடும்? உன் ரூம்ல பார்த்தியா? டைனிங் டேபில்ல? ஒரு பொருளை பத்திரமா வைச்சுக்க தெரியலை, நீ எல்லாம் என்னத்தை வேலை செய்து கிழிக்கிறியோ..”

பதில் ஏதும் சொன்னாலும் கூட இந்த வசை மழை ஆரம்பித்தால் நிறுத்த முடியாது என்று நன்றாக தெரிந்து இருந்ததால், இன்னும் மும்மரமாக தேட ஆரம்பித்தாள் ஆராதனா.

சே இந்த டிபன் பாக்ஸ் எங்கே ஒளிந்து கொண்டு உயிரை வாங்கிறது. நன்றாக நினைவு இருக்கின்றது எடுத்து வந்தது… வீட்டிற்க்குள்ளும் கொண்டு வந்தேனே. சரி தொலைகிறது சனியன் என்று பார்த்தாலும், நல்ல டப்பர்வேர் செட், திரும்ப வாங்க வேண்டும் என்றால் எப்படியும் ஒரு 800 ரூபாய் ஆகும். இந்த அம்மாவேறு ஆயிரம் தரம் சொல்லிக் காட்டி உயிரை வாங்குவாள். இந்த வார அடையார் டைம்ஸ் வரும் அளவிற்க்கு ஒரு பெரிய நியூஸ் ஆக்குவாள்.

“அம்மா எங்கேயோ வைச்சுட்டேன் என்று தான் நினைக்கிறேன், கண்ணுல படலை, அப்புறமா தேடிப்பாரு கிடைக்கும், ஆனால் கண்டிப்பான வீட்டில தான் இருக்கு… ”

“எங்கே இருக்கபோகுது, சரி இந்த மாசம் ஒரு தண்ட செலவு என்று எழுதி வைக்கிறேன்… இப்போதைக்கு இதுல கட்டி எடுத்துகிட்டு போய் தொலை”

சரி, தான் முழிச்ச முகம்தான் சரியில்லை போல என்ற எண்ணத்துடன் கிளம்பிய ஆராதனா பஸ் பிடித்து வியர்த்து விறு விறுத்து அலுவலத்திற்க்கு வந்து சேர்ந்த ஆராதனாவின் டேபிளில் சிரித்துக் கொண்டு இருந்தது அவளது லன்ச் பாக்ஸ் பேக்.

அடக்கடவுளே, காலையில யோசிச்ச போது ஒவ்வொரு சீன்லயும் கையில் இருந்த லன்ச் பாக்ஸ், எப்படிடா டேபிள்ல இருக்கு? நடந்ததை நினைக்காமல், நினைத்ததை நடந்ததாக பார்த்தோமோ?

வீட்டுக்கு போன் செய்ய மொபைலை எடுத்தாள் ஆராதனா, அம்மாவிடம் திட்டின திட்டுகளை வாபஸ் வாங்க சொல்ல.

ஜெயா.

பின்குறிப்பு: என்னுடைய முதல் கதை அட்டெம்ப்ட். சுமாராக வந்து இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்…