அகிலுக்கு பள்ளிக்கு செல்வது இன்னும் கஷ்டமாகவே உள்ளது.  காலையில் எழுந்துக் கொள்ளும் போதே “வயித்து வலிக்குது, கால வலிக்குது” என்ற பக்கா நடிப்புடன் எழுந்து கொள்ளுவது, ஒவ்வொரு விஷயத்திற்க்கும் பள்ளிக்கு போக மாட்டேன் என்று பிளாக் மெயில் பண்ணுவது, ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கின்ற பையன் என்னை அடிக்கறான் என்று கதை பண்ணுவது,  என்று தினம் ஒரு காட்சி அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது.

நேற்று இரவு அகிலுக்கு எப்போதும் போல தூங்க வைக்கும் போது அதே பாட்டு, அம்மா ஸ்கூலுக்கு போகமாட்டேன்… நான் சரி என்று சொல்லிவிட்டு, அகில் உனக்கு ஒரு கதை சொல்லுகிறேன் பாரேன் என்று கதை சொல்ல ஆரம்பித்தேன்.

“ஒரு ஊர்ல இரண்டு பையன்கள் இருந்தான்களாம். ஒருத்தன் ராமுவாம், இன்னொருத்தன் சோமுவாம். ராமு எப்போதும் ஒழுங்கா ஸ்கூலுக்கு போவானாம்… டீச்சர் சொல்லறதை எல்லாம் கேட்டு நடப்பானாம். சோமு வந்து ஸ்கூலுக்கு போக தினமும் அழுவானாம்… ”

அகில் இடையே புகுந்து – “அம்மா இது என்னோட கதை.. எனக்கு வேண்டாம், வேற கதை சொல்லு…”

பொங்கி வந்த சிரிப்பில் “இல்லைடா.. இது அகில் கதையில்ல, சோமு கதை”  என்று சொல்லி, ராமு பெரிய ஆபிஸராகி, தினமும் சிட்டி சென்டரும் மாயாஜாலுமாய் சென்று வந்தான், சோமு வந்து நான்கு மாடுகள் வாங்கி மேய்த்து, பண்ணை வைத்து பணம் சேர்த்தான் என்று சொல்லி முடித்தேன்.

படிக்காவிட்டால் உலகமே இருண்டு போய் விடும் என்று எதற்க்கு குழந்தையை l.k.g யிலே பயமுறுத்த வேண்டும்?

ஜெயா.