என்னடா தங்க அட்டிகை வாங்க எங்க கிட்ட வாங்க என்று விளம்பரத்தில வர பெண் மாதிரி டையலாக் விட போறேன் என்றோ அல்லது அதை வாங்க என்ன பண்ணனும் என்று டிப்ஸ் கொடுக்க போறேன் என்று நினைக்கறீங்க? அது என்ன பெரிய விஷயமா? கடைக்கு போகனும், காசு கொடுத்து வாங்கனும் தானே இதுல என்ன கம்ப சூஸ்திரம் இருக்கு  என்று நீங்க கேட்கலாம்… தப்பில்ல கேட்டுகிட்டே மேல படிங்க…

“வெங்கட்.. நீங்க ஒரு ஆர்டிஸ்ட் தானே?” முன்னுரை பின்னுரை எதுவும் இல்லாத இந்த கேள்வியிலேயே என் கணவர் உஷாராகி இருக்க வேண்டும் என்ன செய்வது, அவருக்கு அது கொஞ்சம் கம்மிதான் என்று தான் தெரியுமே…

“ஆமா.. ஏன் திடீரீன்னு கேட்கற?” அடப்பாவி மனுஷா, நீங்க இவ்வளவு நல்லவரா

“நம்ம கல்யாணம் வேற காதல் கல்யாணம் வேற இல்ல…” கடுப்பில் இருக்கும் பெண்களை தவிர வேற யாராலயாவது இப்படி சம்மந்தமே இல்லாத கேள்விகளை அடுத்தடுத்து கேட்கமுடியுமா?

“ஆமா, ஏன் இதை எல்லாம் கேட்கற? என்ன ஆச்சு உனக்கு?” எனக்கு ஒன்னும் ஆகலை உங்களுக்குத்தான் ஆகப்போகுது…

“இன்னைக்கு ஒரு கதை படிச்சுக்கிட்டு இருந்தேன், அதில வர ஹீரோ வந்து ஒரு பிஸினஸ்மேன்.. ஹீ ஃபால்ஸ் இன் லவ். அதுக்கு அந்த பொண்ணுக்கு ஒவ்வொரு பேஜ்லயேயும் ஒரு கிஃப்ட் தரான்… அதில பாதி அவளை வரைஞ்ச படங்கள்… நீங்க என்னடா என்றால் ஒரு ப்ரொஃப்ஷனல் ஆர்டிஸ்ட் என்று சொல்லிக்கீறீங்க… கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி, என்னை ஒரு படமாவது வரைஞ்சு கொடுத்து இருக்கீங்களா? இந்த அழகில ஒரு பையன் வேற நமக்கு.. ”

முன்கதை சுருக்கமாக – வெங்கட் ஒரு மாடர்ன் ஆர்டிஸ்ட், கலைக்கல்லூரியில் பெயின்டிங் எடுத்து படித்து விட்டு அவ்வப்போது ஒரு பத்து பிரஷ்களையும் ஆயில் கலர்களையும் எடுத்து படம் வரைகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர் யாருக்கும் புரியாத வகையில், எதையாவது வரைந்து ஊரை ஏமாற்றித்திரியும் ஓவியர். ஆனால் சென்னையிலும் வெளியூரிலும் நிறைய இடங்களில் அவர் பீலாக்களை நம்பி, அவர் ஓவியங்களை வாங்கி தொங்க விட்டு இருக்கும் ஏமாளிகளும் இருக்கின்றனர்…(பின்னே நமக்கு புரியாதஒன்று அடுத்தவருக்கு புரிந்தால் நம் நிலைமை…?)

சத்தியமாக அவருக்கு மனிதர்களை வரைய தெரியுமா என்பது சந்தேகமே, எதையாவது வரைந்து கொடுத்துவிட்டு உன் முகத்தை நீயே கண்டுபிடித்துக் கொள் என்று சொல்லி கூட எஸ்கேப் ஆகி விடக் கூடிய சான்ஸ் நிறைய..

“இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ் விட்டுட்டாங்களா என்ன?” புத்திசாலியாம் இவரு, ஆபிஸ்ல எப்படி இதை படிச்சா என்று கேட்கிறாராம்… அப்படியே பேச்சை மாத்தறராம்…

“ஹெலோ… ஒரு கதை படிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அச்சுபிச்சு என்று பேசறதை  விட்டுட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. ”

“சரி ஒரு படம் தானே, வரைஞ்சு கொடுத்தா போச்சு…” விஷயம் இவ்வளவு சின்னதா முடியுமா? நாள் ஃபுல்லா யோசிச்சு வைச்சு இருக்கேன் என்ன எல்லாம் கேள்வி கேட்கறது என்று..

இத்தனை நாள் தோணுச்சா உங்களுக்கு? கல்யாணமானதில் இருந்து எத்தனை கிஃப்ட் வாங்கி கொடுத்து இருப்பீங்க என்று விரல் விட்டு எண்ணிடலாம். சரி காசு செலவு பண்ணித்தான் வாங்கிதர மனசு வரலை என்றாலும் ஒரு படம் கூட வரைஞ்சு கொடுத்ததில்ல, நானும் ஒரு ஆர்டிஸ்ட் என்று ஊரை ஏமாத்திக்கிட்டு அலையறீங்க… என்ன பண்றது ரொமான்டிக்கா யோசிக்கற வீட்டுக்காரர் அமையறதுக்கு கூட கொடுத்து வைச்சு இருக்கனும் போல போன ஜென்மத்தில…”

ஆண்களுக்கு ஞாபக சக்தி கம்மிதான் போல, இப்போ தானே கனடாவில இருந்து அவ்வளவு கிஃப்ட் வாங்கி வந்து தந்தேன் என்ற கேள்வயை கேட்பார் என்று பார்த்தால், அதை கேட்கவே இல்லை, யோசிச்சு வைச்ச பதில் இப்போ வேஸ்ட்… சரி போனா போகுது, இப்போதைக்கு காரியம் தான் முக்கியம்.

“அடடா என்ன ரொம்ப ஜாஸ்தியா பேசிக்கிட்டு இருக்கே.. இப்போ என்ன பண்ணனும் படம் தானே வரைஞ்சு கொடுக்கனும்.. அதான் வரைஞ்சு தரேன் என்று சொல்லிட்டேன்.. திரும்ப திரும்ப அதையே பேசிகிட்டு இருந்தா என்ன அர்த்தம்… ” எரிச்சல் எட்டிப்பார்த்தது குரலில். சரி புலி பதுங்கித்தான் காரியத்தை சாதித்து கொள்ளும். ஐந்தறிவு உள்ள புலியே அப்படி என்றால் ஆறறிவு கொண்ட பெண்கள்?

“சரி, சரி, புலம்பி மட்டும் என்ன பிரயஜோனம்? இதெல்லாம் சொல்லி வரக்கூடியதா என்ன?”

ஆனாலும் முகத்தில் எக்ஸ்பிரஷனுக்கு குறைச்சல் இல்லாமல் அதே கடுப்பில் இருப்பதாக நன்றாக தெரியும்படி திரிந்து கொண்டு இருந்தேன். வெளியே தெரியாத கடுப்பு இருந்துதான் என்ன பிரயோஜனம்? எவளோ ஒருத்தி எழுதின கதையால நம்ம திறமை விமர்சிக்க படுவதா என்ற கடுப்பில் அவரும்.

சரி இரண்டு நாள் போனது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் காட்டாமல் போனால் அப்புறம் கதை படித்ததற்க்கு என்னதான அர்த்தம். பள்ளி துவங்கும் நேரம் ஆகிவிட்டதால் அகிலுக்கு புது பேக், டிரஸ் எல்லாம் எடுப்பதற்க்காக டி.நகர் செல்ல வேண்டி இருந்தது(சிட்டிசென்டர் லைஃப்ஸ்டைல் எல்லாம் கட்டுபடியாகலீங்கோ…) ஜனசமுத்திரத்துக்குள்ளே நீந்தி காரை பார்க் செய்து விட்டு செல்லும் போது வீட்டுக்காரர் “சரி முதல்ல தங்கமாளிகை போகலாம், எதுவுமே வாங்கிதரலை என்ற புலம்பலை நிறுத்தவாவது ஏதாவது வாங்கிக்கோ…”

அடடா விட்ட டையலாக் எல்லாம் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலவே… சரி இருக்கட்டும்… “சே அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நீங்க மூக்கால அழுது ஒன்னு வாங்கி கொடுத்துட்டு அதை முன்னூறு தரம் வேற சொல்லி காமிப்பீங்க… ”

“ஆமா, நீங்க வாங்கி தரலை என்று சொல்லிக்காட்டறதை விடவா?”

சரி இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு இறங்கி வருவோம்.. “வாங்கும் போது தெரியாது வெங்கட், அப்புறம் பேங்க் பேலன்ஸ்ல ஒரு பெரிய ஓட்டை தெரியும் போது தான் ஃபீல் பண்ணிவீங்க…”

“அடடா அதெல்லாம் ஒண்ணும் ஃபீல் பண்ண மாட்டேன். உள்ளே போய் ஏதாவது பார்க்கலாம்”

“சரி என்ன பட்ஜெட்?”

“அதெல்லாம் உனக்கெதுக்கு? என்ன பிடிக்குது என்று பாரு, அப்புறம் பட்ஜெட் எல்லாம் பார்த்துப்பே…” அடடா மனுஷர் சொல்லக்கூடாத டையலாக் எல்லாம் விடறாரே…

“ஓகே போய் பார்க்கலாம். சவரன் விக்கற விலையில எல்லாம் நிறைய வாங்க முடியாது வெங்கட், சோ ஒரு கம்மல் ஏதாவது ஒரு சவரன்ல வாங்கிடலாம், பத்தாயிரத்தில முடிஞ்சுடும்”

முதலில் கம்மல் பார்த்து எதுவும் அவ்வளவாக பிடிக்காமல், பின்னர் சின்ன செயின்கள் பார்த்து அதுவும் ஒன்னும் ஒத்துவராமல், சரி ஏதாவது அட்டிகை பார்க்கலாம் என்று மேலே போய், என்னிடம் இல்லாதது கல் வைத்த அட்டிகை தான் என்று அறிந்து, அங்கே போய், ஒரு நாலு பவுனில் ஒரு அட்டிகை ரொம்பவே நன்றாக இருந்தாற் போல இருக்கவும், வெங்கட்டை கூப்பிட்டு அதை காண்பித்தேன்.

மனுஷர் ஜென்டில்மேன், சொன்ன சொல்லை காப்பாற்றி, “விலை பற்றி எல்லாம் கவலைப் படாதே, பிடிச்சு இருந்தா வாங்கிக்கோ, நாம என்ன தினம்தினமா வந்து வாங்கறோம், எப்பவோ ஒருதரம் தானே..” அடடா இது நாம சொல்ல வேண்டிய டையலாக் ஆச்சே மாற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாரே

எவ்வளவு ஆயிற்று என்றால் ஒரு நாற்பதிற்க்கும் ஐம்பதிற்க்கும் நடுவில் கொஞ்சம் சொச்சமாக வந்தது… அட ஆயிரங்களில்தாங்க…

பில்லை போட்டு, பணத்தை கொடுத்து அவன் கொடுத்த ஜூஸையும் குடித்து விட்டு வெளியே வந்தோம். அப்படியே போய் அகில் சாமான்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாளே அதை ஆபீஸுக்கு போட்டுக்கொண்டு போய் விட்டு, போகிற வறவங்களுக்கு எல்லாம் காண்பித்துக் கொண்டு இருந்தேன்.  அந்த கதை ஆசிரியருக்கு ஒரு நன்றி என்று  பிளாக் கமென்ட் போடலாமா என்று யோசித்தேன்.. சரி அது கொஞ்சம் டூ மச்சாக தெரியவும் விட்டுவிட்டேன். அவங்க வாழ்க்கையில நடக்கனும் என்று நினைச்சதை எல்லாம் அந்தம்மா ஒரு கதையாக எழுதி அவங்க ஆசையை நிறைவேற்றிக்கொள்ளறாங்க… அதை நாம வேற எதுக்கு ஏத்தி விடுவானேன், அப்புறம் அவங்க இன்னும் ஒரு ஃபார்ம்ல போய் இன்னும் – ஹனிமூனுக்கு நிலாவிற்க்கு டிரிப் கூட்டிகிட்டு போனான், பிறந்தநாளை அன்டார்டிக்காவில் ஐஸ் பர்க் வெட்டி கொண்டாடினான் என்று எழுதுவாங்க, அப்புறம் பாவம் இந்த வீட்டுகாரங்க நிலைமை… ஒரு அட்டிகைக்குத் தான் வெங்கட் தாங்குவார், மிச்சதெல்லாம் நமக்கே கொஞ்சம் டூமச் தான் என்ற சுய அலசலும் ஒரு காரணம்.

படம் வரைவதைப் பற்றி மறந்தாற்ப்போல நடந்து கொண்டார், சரி அதுவும் நல்லதற்க்குதான், வேற எப்பவாவது யூஸ் பண்ணிக்கலாம், என்ன சொல்லறீங்க? எல்லா அஸ்திரத்தையும் ஒரே தரம் பிரயோகபடுத்திட்டால் அப்புறம் நாட்டு நிலைமை மற்றும் வீட்டு நிலைமை என்னாவது?

ஜெயா.