கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சமையல் குறிப்புகளை எழுதும் jayashree govindharajan அவர்களின் பிளாக் படித்துக் கொண்டு இருக்கும் போது, இந்த ரெசிபி கண்ணில் மாட்டியது.  நல்லா இருக்கறா மாதிரி இருக்கே, என்று குறித்து வைத்துக் கொண்டேன், எப்போவாவது நேரம் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும் என்று. எனக்கு என்ன ஞான திருஷ்டியா இருக்கு, அன்னைக்கு சாயங்காலமே அதை செய்து பார்ப்பேன் என முன்கூட்டியே தெரிந்து கொள்ள…

வழக்கம் போல சாயங்காலம் வீட்டுக்கு சென்று ஏதோ செய்து கொண்டு இருந்த போது, வெங்கட் வந்தார். ஆபீஸிலேயே லைட்டாக சாப்பிட்டு விட்டேன் டிபன் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், இருவரும் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருந்தோம். ஏதோ சேனல் மாற்றுவதில் பிரச்சனையா என்ன என்று ஞாபகம் இல்லை, மனுஷர் சுருக்கென்று எதோ சொல்ல, எனக்கும் வந்தது கோபம்… சரி எதுக்கு இங்கே உட்கார்ந்து பேச்சை வளர்த்து கொண்டு இருப்பானேன் என்று எழுந்து உள்ளே சென்று விட்டேன்.

ஏதோ யோசனையில் சரி இவர் வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே, இன்று படித்த கொழுக்கட்டை ரெசிபியாவது செய்வோம், ஒரு மாற்றமாக இருக்கும் என்று செய்ய ஆரம்பித்தேன். நமது சமையலறை திறமை மற்றும் அனுபவங்கள் ஒன்றும் சொல்லி பெருமை படுவதற்க்கு இல்லை என்றாலும் அவ்வப்போது கோதாவில் குதிப்பது ஒரு நல்ல பொழுது போக்குதானே… குறிப்பில் இருந்தவாறே, இடியாப்ப மாவை எடுத்து சொல்லி இருந்த பொருட்களை (எல்லாம் அதிசயமாக வீட்டில் இருந்தன) போட்டு கடாயில் கிளறிக்கொண்டு இருந்தேன். நன்றாக இறுகி வர வேண்டும் என்று எழுதி இருந்தது, ஆனால் அந்த “நன்றாக” என்பது எவ்வளவு நன்றாக என்று எப்படி எனக்கு தெரியும்? சரி இறுகி விட்டது போலும், என்று எண்ணி கீழே இறக்கி, உருண்டைகளாக செய்யலாம் என்று எடுத்தால், கொஞ்சம் ஒட்டினாற் போல இருந்தது, சரி கொழுக்கட்டை இப்படிதான் வரும் போல என்று எல்லா மாவையும் உருட்டி, தாளித்து தட்டில் வைத்து, ஒரு உருண்டையை எடுத்து வாயில் போட்டு பார்த்தால் உப்பும் காரமும் சேர்த்த ஃபெவிகால் உருண்டை போல இருந்தது…

ரொம்ப மோசம் இல்லை, ஆனால் ரொம்பவே சுமாராகதான் இருந்தது, இன்னும் நன்றாக இறுகி இருக்க வேண்டும் போல, கூடவே பெருங்காயம் கொஞ்சமே அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன், கொஞ்சம் வத்தல் கூழ் போலவும் இருந்தது. போட்டோவை விட கொஞ்சம் பெரிய சைஸாக இருந்தது, அப்புறம் கொஞ்சமாக பச்சை கலரிலில் இருந்தது (உபயம் – பச்சைமிளகாய்). அவங்க போட்டோல வெள்ளைகலராதானே இருந்தது…  வாயில் போட்ட உடனே வேறு தெரிந்து விட்டது, வெங்கட்டின் நான்கு முழ நீள நாக்கு இதை உள்ளே தள்ளுவது ரொம்ப கஷ்டம் என்று.

சரி பண்ணிவிட்டோம், குப்பையிலா போட முடியும், இவர் தலையிலேயே கட்டுவோம் என்று ஒரு தட்டில் வைத்து கொண்டு போய் முன்னால் வைத்தேன், கடு கடு என்று தான். எனக்கும் அகிலுக்கும் ஒரு கின்னத்தில் போட்டு எடுத்துக் கொண்டேன்.

பார்த்தவுடனே கேட்டார் “என்ன இது..”

“கொழுக்கட்டை”

“ஏது?”

“இன்னைக்கு ஒரு ரெசிபி படித்தேன், அதை பார்த்து பண்ணினேன்… சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடமாட்டீங்க… ”

ஒன்றை எடுத்து வாயில் போட்ட மனுஷரின் ரியாக்க்ஷனே, சொல்லிவிட்டது பிடிக்கவில்லை என்று. சாதாரண டைமாக இருந்தால் ஏதாவது கேலியாக பேசியாவது இல்லை வேண்டாம் என்று சொல்லியாவது சமாளிக்கலாம், இப்போது அதற்க்கெல்லாம் வழியில்லாததால் பரிதாபமாக முழித்துக் கொண்டு இருந்தார். நானும் கண்டுக்கொள்ளவில்லை…

“எப்படி பண்ணினே இதை… ”

“படிச்சுத்தான்.. ஏன் உள்ளே போக மாட்டேங்குதோ…”

“இல்லை, நல்லாதான் இருக்கு, ஆனா வயிறு ஃபுல்லா இருக்கறதால சாப்பிட முடியலை…” யார்கிட்டே இந்த நொண்டிசாக்கு எல்லாம்…

“அதனால தான் லைட்டா பண்ணினேன், இதை கூட சாப்பிடமுடியாத அளவிற்க்கு உங்க வயிறு ஒன்னும் சுருங்கி போகலை, இதே இட்டிலியும் உங்க அம்மா வச்ச குர்மா என்றால் எட்டு இட்டிலி உள்ள போறதில்லை? மரியாதையா சாப்பிடுங்க.. கஷ்டபட்டு பண்ணி இருக்கேன், நல்லாதான் இருக்கு… ரொம்ப பிகு பண்ணாதீங்க…” பின்னே நாம பண்ணினது எப்படி நல்லா இல்லாம இருக்கும்?

“அகில், அம்மா பண்ணின கொழுக்கட்டை சாப்பிடறயா கண்ணா”

“ஓ சாப்பிடறேன் அம்மா”

கடவுள் புண்ணியமாக அகில் கொடுத்த எல்லா உருண்டையும் பிகு பண்ணாமல், நல்லா இல்லை என்று சொல்லாமல் அழகாக சாப்பிட்டது.. அப்பாடி நாளைக்கு உனக்கு ஒரு பெரிய சாக்கலேட் வாங்கிதரேன்டா கண்ணா.. உங்கப்பா முன்னாடி என் மானத்தை காப்பாதினியே…

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் முழித்துக் கொண்டு இருந்த மனிதரை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை…

“சட்டினி ஏதாவது இருக்கா தொட்டுக்க ?”

“கொழுக்கட்டையை சாப்பிட சட்டினி கேட்ட முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க…”

பதில் இல்லை… ஒரு நாலு உருண்டையை சாப்பிட்டு விட்டு, போதுமே என்று கெஞ்சாத குறையாக சொல்லி, நைசாக நழுவி சிங்க் டேபிளில் வைத்து விட்டார். சரி போனா போகுது, நமக்கே நம்ம கைத்திறமையின் அளவு தெரிந்து இருந்ததால் கண்டும் காணாமல் விட்டு விட்டேன்.

அப்புறம் அகிலை தூங்க வைத்துவிட்டு, படுக்க போனால் மெலிதான குரலில் – “ஏதாவது கோபம் என்றால் பேசியே தீர்த்துக் கொள்ளலாமே, எதுக்கு கொழுக்கட்டையெல்லாம் பண்ணி கஷ்ட படறே ? உனக்கு வேண்டிய சேனலே பார்த்துக்கோ, நான் ஒன்னும் சொல்லலை…  ”

கஷ்டபடறே யா? இல்ல கஷ்டபடுத்தறேயா

ஹா ஹா என்று பொங்கி வநத சிரிப்பில் என்ன பேசுகிறேன் என்றே அவருக்கு தெரியலை… நான் சொன்னேன், “இனிமே கோவப்படுறத்துக்கும், எரிச்சல் படறத்துக்கும் முன்னாடி ஒரு தரம் கொழுக்கட்டையை நினைச்சுக்கோங்க… வர்ர கோவம் தானா அடங்கிடும்…”

“அடிப்பாவி, ஒரு கொழுக்கட்டையில என்னை ஒரு முற்றும் துறந்த முனிவரை போல ஆக்கிடுவே போல இருக்கே?”

“ஆமாம், மூக்கு மேல கோவம் வருது, இதுல இவர் முற்றும் துறந்த முனிவராகராராம்…”

“இனிமேல ஒரு மாசத்துக்கு வராது… இன்னைக்கு சாப்பிடதே ஒரு மாசத்துக்கு தாங்கும்…  ”

என்ன, உங்க வீட்டுக்காரருக்கும் கோவம் அதிகமா வருதா, எடுங்க கொழுக்கட்டையை… பெட்டி பாம்பா அடங்கிடுவாங்க… உண்மை ரெசிபியை விட என் ரெசிபி பாப்புலர் ஆகிடுச்சு என்றால் jeyashree madam கோவிச்சுக்கமாட்டாங்க என்று தான் நினைக்கிறேன்….

ஜெயா.