அலுவலகத்தில் ஒரு நண்பர் தன்னுடைய தம்பிக்காக அரிசி மண்டி வைத்திருப்பதாகவும் அதை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டு இருந்தார். எல்லாம் சேட் வின்டோவில்தான். மாததிற்க்கு 10 டன் விற்பனை ஆகிறது எனவும், 50 டன்னுக்கு டார்கெட் வைத்திருப்பதாகவும், அதை அடைவதற்க்கு வழிகளையும் டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தோம்… மும்மரமாக பேசிக் கொண்டு இருந்த போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது –  ஒரு டன்னுக்கு எத்தனை கிலோ என்று. என்னை ஒரு பெரிய மனுஷியாக நினைத்து பேசிக் கொண்டு இருப்பவரிடம் எப்படி இப்படி ஒரு சில்லறைதனமான கேள்வி கேட்பது? சரி என்று எதிரில் இருந்த இன்னொரு நண்பரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். ஆயிரம் கிலோவாம், யாருக்கு தெரியும் இந்த கன்றாவி எல்லாம்…. கேட்ட நண்பர் கொஞ்சம் புத்திசாலிதனமாக, அரிசிக்கார நண்பருடன் தான் சேட் செய்து கொண்டு இருக்கின்றேன் என்று கண்டுபிடித்து விட்டார். அவரும் இவரும் வாக்கிங் நண்பர்கள் என்பதால் தான், மித்தபடி அவருக்கு அறிவு நம்மளவு இல்லை 🙂

சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பவதற்க்கு முன்னால், அரிசிக்கார நண்பரிடம் இருந்து ஒரு சேட் மெஸெஜ் – “ஒரு டன்னுக்கு எத்தனை கிலோ என்று நீங்கள் என்னையே கேட்டு இருந்து இருக்கலாம்….”

என் பதில் – “ஹி ஹி ஹி”… வேறு என்னத்தை சொல்ல.

எதிரில் இருந்த நண்பர் எனக்கு நெற்றிக் கண் இருந்தால் எரிந்தே போய் இருப்பார்…

——————————————————————————————————————–

எங்கள் கூட்டு குடும்பம் மொத்தம் வாரக்கடைசியின் கொண்டாட்டமாக சிட்டி சென்டருக்கு செல்லுவது வழக்கம். பல முறை அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களில் சில: அகில் சிட்டி சென்டரின் எஸ்கலேட்டர் மற்றும் விளையாட்டு இடத்தை பார்த்தால் பயங்கர எக்ஸைட் ஆகிவிடும், சொல்வதை கேட்க வைப்பது ரொம்ப கஷ்டம், மேலும் அது அட்டஹாசம் பண்ணும் போது வெங்கட் பிரஷர் கன்னா பின்னா என்று ஏறி விடும், அவரை சமாதானம் பண்ணுவதா இவனை சமாதான்ம் பண்ணுவதா என்று நாம் தலையை பிய்த்துக் கொள்ளவேண்டும், இதில் கொசுறாக என் அம்மா வேறு… இவர்கள் அனைவரையும் ஒரு இடத்திற்க்கு கூட்டிசென்று வருவதற்க்குள் நம்ம தாவு தீர்ந்துவிடும்.

அகிலையும் என் அம்மாவையும் மேலே விளையாட அனுப்பிவிட்டு,  ஏதோ விசாரிப்பதற்க்காக நானும் என் அக்காவும் அடிடாஸ் ஷோ ரூம்மிற்க்கு சென்றோம்.  நான் என் அக்காவிடம் ” நாம இன்றைக்கு ஒரு சச்சரவும் இல்லாமல் வீட்டுக்கு போக வேண்டும் என்றால், அம்மா, அகில், வெங்கட் மூன்று பேரையும் எவ்வளவு தூரமாக வைத்திருக்க முடியுதோ, அப்படி வைச்சிருக்கனும்…”

பின்னால் இருந்து வெங்கட்டின் குரல்: “இதைத் தவிர வேற என்ன திட்டம் போட்டு இருக்கீங்க, அதையும் சொல்லிடுங்க, தெரிஞ்சு நடந்துக்கறேன்…”

நான்: “ஹி ஹி ஹி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே…” அடடா நம்ம ராணுவ ரகசியம் வெளியே தெரிஞ்சுடுச்சே… இனிமேல ஜாக்கரதையா இருக்கனும்…

ஜெயா.