வெங்கட் ப்ராஜெக்ட் விஷயமாக ஆஸ்டரேலியா செல்ல வேண்டியதானதால் வீடே இரண்டுபட்டு கிடந்தது –  எடுத்து வைக்க வேண்டிய சாமான்கள். துணிமணிகள், முக்கியமான பேப்பர்கள்… அகிலும் சாதாரணமாக விளையாடிக்கொண்டு இருந்தது. இதற்க்கு முன்னும் வெங்கட் வெளிநாடு சென்றிருக்கின்றார் – அகிலை பொறுத்த வரை, அப்பா வெளிநாடு சென்றால் அவரை கம்ப்யயூட்டரில் பார்க்கலாம், பேசலாம், வாங்கி வைத்து இருக்கும் சொப்பு சாமான்களை காட்டுவார், வரும் போது நிறைய கிப்ட் கொண்டு வருவார் விளையாடி மகிழலாம் – அவ்வளவு தான்.   அதுவுமில்லாமல் எங்கள் வீடு கூட்டுக் குடும்பமாக இருப்பதால் ஒருவர் இல்லாமல் போவது எப்போதுமே பெரிய இழப்பாக தெரிவதில்லை.

சரி நம்மை போல தான் இருக்கின்றான் என்று நானும் கண்டு கொள்ளவில்லை ;). இந்த தரம் விமானம் அகால நேரமில்லை – இரவு 9 மணிக்கு விமான நிலையத்தி இருந்தால் போதும். சரி எல்லோருமாக போய் வழி அனுப்பி விட்டு வரலாம் என்று கிளம்பினோம். ஆரம்பத்திலியே அகில்  “நான் வரலை மா, பெரியம்மா கூடவே விளையாடிக்கொண்டு இருக்கிறேனே” என்று சொல்ல ஆரம்பித்து. நான்தான் சும்மா இல்லாமல், டேய், அப்பா போனால் வருவதற்க்கு ரொம்ப நாள் ஆகும்டா, விமான நிலையம் வரை போய் வரலாம்… அதுவும் இல்லாமல் அங்கே நிறைய ப்ளேன் காட்டறேன்” என்றேன்…  ஒரு மாதிரி தயக்கத்துடன்தான் காரில் ஏறினான்.

காரில் ஏறிய உடனேயே தூக்கம் வருகிறது என்று சொல்ல ஆரம்பித்தான்… தூங்கிவிட்டால் அங்கே எழுந்து கொள்ளும் போது அழுவாயே என்று சொல்லி கஷ்டப்பட்டு கதைகள் சொல்லி, விளையாட்டு காட்டி விழிக்க வைத்து இருந்தேன். ஏர்போட்டில் இறங்கும் போது முகம் சின்னதான மாதிரி இருந்தது, ஆனால் அங்கே இருந்த கூட்டம், மற்றும் பல காட்சிகள் மனதை திசை திருப்பி விட்டது போலும், அப்பாவின் சின்ன சூட்கேஸை இழுத்துக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது பார்க்க ரொம்ப அழகாக இருந்தது.

உள்ளே போய், அப்பா போய்ட்டு வரேன் அகில் என்று சொன்னது தான் தாமதம் – அகில் கண்ணில் கண்ணீரி குளம் கட்டிக் கொண்டது. அப்போதும், அப்பாவை நேராக பார்க்காமல், வேறு எங்கோ பார்ப்பது போல வேறு பாவனை நடு நடுவில்… அவன் கண்ணில் கண்ணீரை கண்டவுடன் வெங்கட் உணர்ச்சி வசப்பட்டு, அழுவாதே “அகில் அப்பா சீக்கிரம் வந்துடுவேன்” என்று கண் கலங்க – அவர் அழுவதை பார்த்தவுடன் வெங்கட்டின் அம்மா கண்ணில் கண்ணீர் திரள… அவரை பார்த்து அவர் கணவர் அழ… அப்படியே ஒரு விக்கிரமன் படத்து சென்டிமென்ட் காட்சி கெட்டது போங்க. இவங்க எல்லாரும் அழ நாம அழலை என்றால் என்ன ஒரு கல்நெஞ்சக்காரி என்று என் மனசாட்டியே என்னை குத்தி குதறி எடுக்கும் போல… ஆனால் நிஜமாகவே அகில் அழும் என  நான் எதிர்ப்பார்க்கவில்லை.. அவன் கண்ணில் கண்ணீரையும் அது சமாளிக்கும் விதத்தை பார்த்த போது எனக்கே உருகிவிட்டது… சரி என்று சமாதானப்படுத்தி, அங்கே இருந்த ஒரு கடையில் ஒரு ஜூஸ், ஒரு சாக்லேட் (ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாயாம்…)  வாங்கி கொடுத்து சமாதானம் செய்து வைத்தேன். பேக்கேஜ் எல்லாம் செக்கின் செய்து முடித்து திரும்ப வெங்கட் வந்த போதும் குழந்தை முழுவதும் தெளிய வில்லை… ஏனடா கூட்டிவந்தோம் என்று ஆகிவிட்டது எனக்கு… அப்புறம் சரி என்று சின்னதாக ஒரு பை சொல்லிவிட்டு கிளம்பினோம் வீட்டுக்கு.

காரில் திரும்ப வரும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாதானம் செய்து கொண்டு இருந்தேன். ஒருதரம் கூட, “அட இப்படி அழுவாங்களா, அப்பா இங்கேதானெ போறார்” என்றோ, அல்லது வேறு மாதிரி கேலி செய்யாமல் மிக கவனமாக வந்தேன். அவனுடைய துக்கத்தில் எவ்வளாவு தூரம் பங்கு கொள்ள முடியுமோ அவ்வளவு கரிசனமாக பேசினேன். “எனக்கும் கஷ்டம் அகில் அப்பா போயிட்டதால… உனக்கும் கஷ்டமாக இருக்கா?” என்ற ரீதியில்.. மடியிலேயே தூங்கிவிட்டது… அப்படியே கட்டிலில் தூக்கி போட்டு தூக்கத்தை தொடர வைத்தேன். அடுத்த நாள் காலையில் சரியாகி விட்டது, எல்லோருடனும் விளையாட ஆரம்பித்து விட்டது…

ஆனாலும் நான் கற்றுக்கொண்ட பாடம் – குழந்தைகள் மேலோக்க பார்க்கும் போது மிகவும் வீட்டேற்றியாக இருந்தாலும் கூட மிகவும் சென்சிட்டிவானவர்கள். நம்மிடம் எல்லா உணர்ச்சிகளை கொட்டி காண்பிக்காவிட்டாலும் கூட தங்களுள்ளே அனைத்தையும் உணர்கின்றவர்கள் என…

எப்படியோ அன்றைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தவர்கள் – எங்களை பார்த்தவர்கள் – அடடா இப்படி ஒரு பாசக்கார குடும்பமா என்று ஆச்சர்யப்படாமல் போயிருக்க மாட்டார்கள்…

ஜெயா.