கம்ப்யூட்டரில் ஒரு அன்டூ இருப்பது போல வாழ்க்கையிலும் ஒரு அன்டூ ஆப்ஷன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சில சமயங்களில் நிஜமாகவே நான் ஏங்குவது செய்து விட்ட ஒரு செயலை எப்படி திருத்திக் கொள்வது என்பதுதான். செய்யும் போது ஏதோ ஒரு ஆர்வகோளாறிலும் பின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் செய்து விட்டு பின்னர் வருந்துவது போல ஒரு கொடுமை எதுவும் இல்லை. அதிலும் நாம் எதிர்பார்ப்பிற்க்கு ஏறுமாறாக இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.. நிமிஷ சந்தோஷம் கூட கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படுவதில்லை… இந்த மூளை சந்தோஷத்தை விட துக்கத்தில் நன்றாக வேலை செய்யும் என்று யாராவது கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றனறா என்று தெரியவில்லை, ஆனால் என்னுடைய மூளையானது கண்டிப்பாக துக்கத்தில் தான் பிரமாதமாக வேலை செய்கிறது. குற்ற உணர்ச்சியில் குளிக்க வைத்து, என்னைப் போல ஒரு ராக்ஷசி இதுவரை பூமியில் பிறந்ததே இல்லை என்ற ஒரு பில்ட் அப் கொடுத்து, இது வரை இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் நினைவிற்க்கு கொண்டு வந்து வறுத்து எடுத்து விடுவதை என்ன என்று சொல்லுவது?

எனக்கு தெரிந்து அடுத்தவரிடம் மன்னிப்பு கேட்பது மிகவும் சுலபம், நம்மை நாமே மன்னித்துக் கொள்ளுவது தான் மிகவும் கஷ்டம். அவராவது, இதற்கு எதற்க்கு கஷ்டபடுகிறாய் நான் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடக் கூடும், ஆனால் நம்முடைய மனசாட்சி? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? செய்யும் போது செய்து விட்டு இப்போது ஏதோ தியாகி மாதிரி பீல் பண்ணிக் கொண்டு சீன் போட்டுக் கொண்டு திரிகிறாயே என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திடாதோ… அவ்வப்போது எல்லோரும் நம்மை போல எருமை மாட்டு தோலால் ஆனவர்கள் அல்ல என்று ஏன் என் மரமண்டைக்கு உரைப்பதில்லை?

எதிரிக்கு ஏதாவது ப்ளான் செய்து சக்ஸஸ் ஆவதை விட தோழிக்காக ஏதாவது செய்துவிட்டு அது இருமுனை கத்தியாக வந்து நம்மையே தாக்குவது தான் ரொம்பவும் அநியாயம். நமக்கு பெரிதாக தெரியாத விஷயம் அடுத்தவருக்கு மிகவும் பெரியதாகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்துவாக தெரியும் போது, சே நாமும் ஒரு ஜென்மமா என்று கேள்வி நாலா பக்கத்தில் இருந்து எதிரொலிப்பதை என்ன என்று சொல்லுவது… எப்போதும் விளையாட்டும் சிரிப்புமாக இருக்கும் குணம் மாறி ஒரு நத்தையாக உள்ளுக்குள் சுருட்டிக் கொள்ளுவதை விட வேறு என்ன செய்ய முடியும் இதைப் போன்ற தருணங்களில்…

செய்தது தவறு என்பதை விட அடுத்தவருக்கு மனக்கஷ்டம் என்பதே ஜீரணிக்க முடியாததாக தூக்கதில் வரும் கனவிலும் வந்து மிரட்டும் போல. செய்யும் போது தவறு என்று தெரியாமல் செய்வதாலெயே தவறு தவறில்லை என்று ஆகிவிடுமா என்ன? கண்டிப்பாக அர்த்த ராத்திரியிலும் கூட இப்படி புலம்பத்தான் வைக்கும். சே செய்த ஒரு காரியத்தை திரும்ப மாற்றிக் கொள்ளும் வழி ஒன்று இருந்தால் உலகம் இன்னும் நல்ல இடமாக இருக்குமோ வாழ்வதற்க்கு? குறைந்த பட்சம் எனக்கு?

இப்போது வலிக்க விழுந்திருக்கும் ஒரு குட்டினால் திருந்தியது போல இருக்கும் மனது திரும்ப பழைய குருடி கதவை திறடி என செல்வதற்க்கு எத்தனை நாள் ஆகுமோ? ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது – ஒரு முறை ஒரு முனிவர் தவறுதலாக எறும்பு புற்றினை மிதித்து மிகவும் விசனப்பட்டு எறும்பிடம் மன்னிப்பு கேட்பதற்க்காக முயலும் போது அசரீரி குரல் சொல்லுமாம் – “உன்னால் என்ன முயன்றாலும் எறும்பிற்க்கு உன் கருத்தை புரியவைக்க முடியாது, நீ எறும்பாக மாறாத வரை” என்று. என்ன செய்தால் நம்முடைய எண்ணங்களை அப்படியே அடுத்தவரை உணர வைக்க முடியும்? எதை எதையோ கண்டு பிடிக்கும் விஞ்சானிகள் இது போல விஷயங்களை விட்டு விடுகின்றனர்?

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மனது இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை எதிர் கொள்ளுவதற்க்கு சேர்த்து வைக்கும் தைரியத்திற்க்கு பதிலாக பேசாமல் எப்போதும் வாயை திறக்காமல், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நல்ல பிள்ளைகளை போல ஆகிவிடலாமோ? நாம் குறும்புத்தனம் செய்யவில்லை என்று யார் அழுதார்கள் நாட்டில்? அப்படியே பூமாதேவி பிளந்து நம்மை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள மாட்டாளா என்ற எண்ணத்தை தவிர்ப்பது எப்படி? என்னதான் சமாதானம் சொன்னாலும் செய்த விஷயத்தின் விளைவுகளை மாற்றிட முடியுமா? எத்தனை பேருக்கு விளக்கம்தான் சொல்லிக்கொண்டு இருக்க முடியும்? விளக்கத்தை எப்படி அடுத்தவர் மனது ஏற்று சமாதானமாகும் ப்டிச சொல்லுவது? எல்லாவற்றிக்கும் மேலாக என்ன நொண்டி சாக்கு சொல்லி நம்முடைய செயலை நியாயப்படுத்துவது? இப்படி ஆகும் என்று நினைக்க வில்லை என்றா? நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்தேன் என்றா? அதை எப்படியம்மா நீ நினைத்துக் கொள்ள முடியும் என்று கேட்டால் முகத்தை கொண்டு போய் எங்கே வைத்துக் கொள்ளுவது…

கடவுளே, எனக்கு ஆள் வளர்ந்த அளவிற்க்கு அறிவையும் வளர வைக்ககூடாதா? இன்னுமொரு தரம் இது போல ஒரு சங்கடமான சூழ்நிலையில் சிக்காமல் இருப்பதற்க்கு என்னுடைய ஒரு உறுப்பை கேட்டாலும் கொடுத்திட மாட்டேனா? செய்த செயலின் விளைவுகளும், சொல்லும் சொல்லின் தாக்கமும் ஒரு அணு ஆயுதத்தை விட சக்திவாய்ந்தது என்று புரிந்து கொண்டால் மட்டும் போதுமா, திரும்ப இதையே செய்யாமல் இருக்கவும் அடிக்கடி இந்த பதிவினை படித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்…

ஜெயா.