அகில் வயிற்றில் இருந்த போது நான் கேட்காத சாமி பாடல்கள் கிடையாது, பாடாத பஜனைகள் கிடையாது, சொல்லாத மந்திரங்கள் கிடையாது. அது ஒரு கனாக்காலம் போல அது ஒரு பக்திக்காலம். ஒரு பத்து வருடம் என் வாழ்க்கையில பகவான், ஹோமம், பஜனை, பூஜை, மந்திரம், யாகம் என ஓடியது. அப்படி இருந்து விட்டு, திடீரென நடந்த ஒரு சில சம்பவங்களால் அந்த இயககத்துடன் உள்ள தொடர்பு முழுவதுமாக அறுந்த பின்னர் வாழ்க்கையின் முறை மாறியது என்று தான் சொல்ல வேண்டும். ஆக அகில் வாழ்க்கையில் இப்போது பக்தி, கடவுள் நம்பிக்கை எல்லாம் ரொம்ப குறைவுதான். ஏதோ பண்டிகையின் போது சாமி கும்பிடுவதுதோடு சரி, எனக்கே கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டதால் நானும் பெருசாக கண்டு கொள்ளுவதில்லை.
ஆனாலும் என் அம்மா சொல்லிக் கொண்டே இருந்தார்கள், சாமி கும்பிடற பழக்கத்தை கொண்டு வரணும் என்று, அதையும் நான் காதில் போட்டுக் கொள்ள வில்லை. ஒருநாள், என் அக்கா ஒடிசியில் முன்பு அகில் கேட்டிருந்த சொப்பு சாமானை வாங்கி வந்த போது அகில் வீட்டில் இல்லை. அவன் வந்த உடனே என் அம்மா, மிகவும் புத்திசாலித்தனமாக ” அகில் நீ இந்த சொப்பு சாமான் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு இருந்தாய் இல்ல, அதை வந்து இப்போ சாமி வந்து நம்ம வீட்டில குடுத்துட்டு போனார், அகிலுக்கு கொடுங்க என்று… பாரேன்” என்று கதை கட்டினார்கள்.
அகில் பயங்கர கூலாக, “அம்மா இது சாமி எல்லாம் குடுக்கல, ஒடிசிலதான் விக்குது. யாரோ ஒடிசில இருந்து வாங்கி வந்து கொடுத்து இருக்காங்க அம்மம்மா.”
இந்த பதிலை சத்தியமாக எதிர்பார்க்காத என் அம்மா, பதில் சொல்லத்தெரியாமல் முழித்ததை பார்த்து நானும் என் அக்காவும் அட்டஹாசமாக சிரித்து வேறு அவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டோம் என்று சொல்லனுமா என்ன?
ஜெயா.
Leave a Reply