கடை இன்றைக்கு(ம்) லீவ்…

8 Comments

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கின்றது ஹாஸ்பிட்டலில் சேர்வதற்க்கு – அடுத்த வாரம் இந்நேரம் ஹாஸ்பிட்டல் வாசம் ஆரம்பித்து இருக்கும்.  இருந்தாலும் பரவாயில்லை என்று நேற்று எல்லா சாமான்களும் வாங்கி வைத்துவிட்டோம், ஆனால் கடைசியில் பார்டனருக்கு வேறு வேலை வந்து விட, என்னுடைய அக்காவிற்க்கும் வேறு வேலை இருக்க, சரி  இந்த வாரம் கடை போடுவது ரொம்ப டூ மச் என்று எனக்கும் ஒரு மூளையின் ஒரு ஓரத்தில் சொல்லிக் கொண்டு இருக்கும் குரல் கேட்க, இன்று(27-09-09) எங்கள் கடைக்கு லீவ் விட்டு விட்டோம். உண்மையில் இன்று இரண்டு எக்ஸ்ட்ரா ஐட்டம் வேறு போடுவதாக இருந்தோம் – என்ன என்பது அட- திரும்பவும் “சர்ப்ரைஸ்” தாங்க.

கடையை தேடிவரும் நண்பர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் கூடிய விரைவில் திரும்பவும் ஸ்பார்க்களர்ஸ் கடை கொட்டிவாக்கம் பீச்சில் வெற்றிநடை போட ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் 🙂

ஜெயா.

பின்குறிப்பு -1: உண்மையாக நான் இதை ஞாயிற்றுக்கிழமை கடை திறக்கும் நேரத்துக்கு முன்னாடியே எழுதி போஸ்ட்டும் பண்ணி விட்டேன். அடுத்த நாள் செக் பண்ணும் போது காணவில்லை… வேர்ட்பிரஸ்ஸை ஜல்லடை போட்டு தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை… சரி கை தவறி நானே டெலிட் செய்து விட்டேன் பொல என்று எண்ணிக் கொண்டு இருந்த போது -காலையில் தோன்றியது –  ஒரே வின்டோவில் இரண்டு போஸ்ட் எழுதியதில் ஏதாவது சொதப்பிக் கொண்டு இருக்குமோ என்று புதிய ஆறு போஸ்ட்டின் ஆட்டோ சேவ் ஹிஸ்டரியில் போய் தேடிப் பார்த்ததில் – முதல் இரண்டு வெர்ஷன் இந்த போஸ்டாகவும், அடுத்த வெர்ஷன்களி அதற்க்காக டைப் செய்த வெர்ஷன்கள் இருந்தன… வாழ்க வேர்ட்பிரஸ்! கம்பேர் ரெவிஷன்ஸ் பட்டன் சூப்பராக வேலை செய்து என்னை திரும்ப டைப் அடிக்க வைக்க வில்லை 🙂

பின்குறிப்பு – 2: நாங்கள் கடை போட வேண்டாம் என்று ஒரு பன்னிரண்டு மணிக்கு முடிவு செய்த போது வானம் வெளுத்துத்தான் இருந்தது – ஒரு ஐந்து மணிக்கு கொட்டும் மழை … அடடா கடை மட்டும் போட்டு இருந்திருந்தால் அடாத மழையிலும் விடாமல் ஜூஸ் விற்று வரலாற்றில் நிலை பெற்று இருந்திருக்கவேண்டும் அல்லது காற்றடிக்கும் போது மாவு விற்க போனேன் என்று பாட்டை பாடிக் கொண்டு அள்ளி தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் 🙂

பின்குறிப்பு -3 : இந்த மழையிலும் பீச்சுக்கு வந்து எங்கள் கடையை தேடி – எனக்கு போன் செய்து “என்ன ஜெயா.. கடையை காணோம் .. உங்க ஜூஸை குடிக்கலாம் என்று மழையிலும் பீச்சுக்கு வந்து இருக்கின்றோம், கடை எங்கே” என்று கேட்கிற பாசக்(நக்கல்)கார தம்பிகளை என்ன சொல்லுவது?

காலை நேரம்… வெயில் வரும் நேரம்….

3 Comments

ஒரு பத்து நாட்களாக அகிலை காலையில் எழுப்பி விடுகின்றேன் – சாதாரணமாக் எழுந்திருக்கும் நேரம் ஏழு அல்லது ஏழரை – இப்போது மாறிய நேரம் ஆறு ஆறேகால்…

முதல் நாள் எழுப்பிய போது அகில் சொன்னது – “என்னதும்மா ரூமே ஒரு மாதிரி இருக்கு… இருட்டா இருக்கு… என்ன ஆச்சு இன்னைக்கு?”

அடேய், இன்னைக்குதான்டா நீ சூரியன் எழுவதற்க்கு முன்னாடி எழுந்து இருக்கின்றாய்… காட்டமான ஏழு மணி வெயிலுக்கு எழுந்து பழகி விட்டு இப்போது என்னடா என்றால் ரூம் மாறி இருக்கு டையலாக் வேற…

ஜெயா.

புதிய ஆறு

6 Comments

அகில் இப்போது ஹெட்ஸ்டார்ட் பள்ளியில் எல்.கே.ஜி படித்துக் கொண்டு இருக்கின்றது. நான் மிகவும் ஆராய்ச்சி செய்து அகிலை சேர்த்த பள்ளி இது. பிள்ளைகளை மிகவும் நன்றாக ஹேன்டில் செய்யுமிடம் – செயல்முறை கல்வி, பரிட்சைகள் இல்லாத பள்ளி, நல்ல அணுகுமுறை – (குழந்தைகள் ஆசிரியர்களை ஆன்ட்டி என்றே அழைக்கின்றனர்), குழந்தை வளர்ப்புமுறை மற்றும் கல்விதுறையில் நடக்கும் விஷயங்களை கண்காணித்துக் கொண்டு இருப்பவர்கள், பள்ளி என்றால் வெறும் ஒரு புத்தகத்தில் எழுதி இருப்பதை சொல்லிக் கொடுப்பது என எண்ணாமல் பல வகையில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்ளுவதே என்பது எல்லாம் என்னை இம்பிரஸ் செய்த விஷயங்கள் சில.

எல்.கே.ஜி யில் அகிலுக்குகான சிலபஸ் – a – z மற்றும் 1 – 10 வரைதான். அதையே வேறு வெறு வகையில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இப்போதுதான் எழுதுவது ஆரம்பித்து இருக்கின்றது. எல்.கே.ஜியிலேயே போர்ஷன்ஸ் கொடுத்து டெஸ்ட் வைக்கும் பள்ளிகளுக்களுள் இது கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறைதான்.

எண்களை அடையாளம் சொல்ல தெரிந்தாலும், சொல்லத் தெரிந்தாலும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறான் அகில். இன்றைக்கு சாக்பீஸ் வைத்து எழுதிக் கொண்டு இருந்த போது ஆறு எண் மட்டும் வேறு மாதிரி எழுதினான்…

என் அம்மா: ஹேய் அகில் – என்னடா ஆறு மாத்திரம் வேறு மாதிரி எழுதி இருக்கின்றாய்?

அகில்: ஒரு வினாடி யோசித்துவிட்டு – இதுதான் அம்மம்மா புது ஆறு.

என் அம்மா: ??????????

ஜெயா.

கழுவினா போயிடுமா?

2 Comments

அகில்: அம்மா, பச்சை மிளகாயை தொட்டா கை எரியுமா?

அம்மா: ஆமாண்டா அகில்

அகில்: காம்பை பிடிச்சா கூட எரியுமா?

அம்மா: ஆமாம் அகில், ஆனா தொட்டுட்டு கையை கழுவிட்டா எரியாது… கண்ணில் வைச்சா கூட எரியாது.. அதனால கையை கழுவிடு என்ன?

அகில்: அப்போ பச்சை மிளகாயை கழுவிட்டா அது எரியாதா??

அம்மாவாகிய நானேதான்: ??????

ஜெயா.

புதிய ஜோக்…

8 Comments

அகிலுக்கு எப்போதும ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். வார புத்தங்களில் வரும் ஜோக்குகளில் அவனுக்கு புரிகிற மாதிரி இருக்கின்ற ஜோக்குகளை அவனுக்கு கதைகளாக சொல்லுவேன். இப்போதைய ஜோக் :

ஒரு ராஜா இருந்தாராம், அவர் ரொம்ப சோகமாக இருந்தாராம். ஒரு ராணி இன்னொரு ராணி கிட்டே கேட்டாங்களாம் ராஜா ஏன் சோகமா இருக்கிறார் என்று. அதுக்கு இன்னொரு ராணி சொன்னாங்களாம் – புதுசா வந்து இருக்கிற ராணி மன்னரை ‘மன்னா’ என்று கூப்பிடறதக்கு பதிலா ‘அண்ணா’ கூப்பிட்டாங்களாம் …

சொன்னவுடன் அகிலுக்கு ரொம்ப சிரிப்பு வந்தது… தினமும் ஒரு முறையாவது இதை சொல்லி சிரிப்போம். புரியாமல் சிரித்தது என்று நான் மனசை தேற்றிக் கொண்டு இருக்கின்றேன்…

ஜெயா.

கொட்டிவாக்கம் பீச் கடை – முடிவுகள்

11 Comments

முதலில் படிக்க: கொட்டிவாக்கம் பீச்சில் கடை

முக்கால் வாசி சாமான்கள் சனிக்கிழமையே வாங்கி வைத்துவிட்டு இருந்தாலும் சில ஞாயிற்றுக் கிழமையன்று வாங்கி கொள்வது போல நேர்ந்தது. அந்த சாமான்களை வாங்கிக் கொண்டு, சொல்லி வைத்த இடத்திலிருந்து ஐஸ் வாங்கி அதை உடைத்து, சோடாவை அதில் போட்டு, மற்ற சாமான்களையும் காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு கொட்டிவாக்கம் பீச்சுக்கு சென்று சேர்ந்த போதே மணி ஐந்தரை. ஜங்கஷனில் போலிஸ்காரர் வேறு நின்று கொண்டு இருந்தார். அதுவரை இருந்த தைரியம் அப்படியே கொஞ்சம் காணாமல் போவது போல இருந்தது…  எப்படிடா இறக்குவது என்று கால்கள் வேறு பின்னடித்தது. எந்த இடத்தில் வைப்பது என்று வேறு குழப்பம். ஏற்க்கனவே இருந்த கடைகளின் நடுவில் வைத்து விடுவதா இல்லை தனியாக ஒரு இடத்தில் வைப்பதா? புதிதாக நாம் போய் அவர்கள் நடுவில் வைத்தால் ஏதாவது சொல்லுவார்களா, தனியாக வைப்பதால் கூட்டம் வருமா என்று வேறு யோசனை.

தந்தியடித்து இருந்த எங்களுக்கு துணையாக என் அக்கா வந்தார்கள் – ஏற்க்கனவே அவர்கள் பிஸினெஸ் லைனில் இருப்பதால் தைரியமாக தடாலடியாக நிலைமையை கையில் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த இளநீர் கடைக்காரை கரெக்ட் செய்து அவர் பக்கத்தில் இடம் பிடித்தார். அவர் மூலமாகவே போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் கூட விஷயத்தை சொல்ல வைத்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் நேரடியாக கேட்கவில்லை என்றாலும், அவரிடம் இன்றைக்கு ஒருநாள் மட்டும்ம் தானா? அப்படிஎன்றால் பரவாயில்லை, தினமும் என்றால் – ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் பேச வேண்டும் (ஓ அப்ப நீங்க இன்ஸ்பெக்டர் இல்லையா? )என்று சொன்னார். கண்டும் காணாமல் நாங்கள் டிக்கியில் இருந்து சாமான்களை இறக்கி வேலையை ஆரம்பித்தோம்.

முதலில் டேபிளை ஃபிக்ஸ் செய்து, சாமான்களை எல்லாம் எடுத்து வைத்து அடுக்கி ஜுஸ் கடை என்று ஆரம்பித்தோம். போகிறவர்கள் அனைவரும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனார்களே தவிர யாரும் கிட்டே கூட வரவில்லை – பின்னே ஒரு நிறைமாத கர்ப்பினிப் பெண், ஒரு நாலு வயசு குழந்தை, ஜீன்ஸ் பேன்ட் சகிதமாக இன்னொரு பெண், ஒரு சாஃப்ட்வேர் கெட் அப் பையன் – முன்னாடி ஒரு டேபிள் அதிலே ஒரு தெர்மாகோல் டப்பா, ஜூஸ் டம்பளர்கள், நாலு டப்பர்வேர் டப்பாக்கள், சோடா பாட்டில்கள் சகிதமாக நின்றால் மக்கள் என்னதான் நினைக்க கூடும்?

தைரியமாக ஒருவர் வந்து நீங்கள் என்ன பண்ணிக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்பதற்க்கே பத்து நிமிடம் ஆகியது – நாங்கள் ஒரு ஜூஸ் விற்கிறோம் – பெயர் ஸ்பார்க்களர்ஸ் – புதினா மற்றும் எலுமிச்சம் சேர்த்த ஒரு புதிய வகை சோடா கூல் டிரிங்க்ஸ்  – விலை இருபது ரூபாய் என கூறி முதல் போனியை செய்தோம். அதன் பின்னர் ஒன்றிரண்டாக மக்கள் வந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்… அகில் கையில் ஒரு  மாட்டிக்கொண்டு இப்படி அப்படி ஓடிக் கொண்டு இருந்தது. எல்லோருக்கும் மூடி போட்டு ஸ்ட்ரா போட்டு டிஷ்யு பேப்பர் வைத்து தந்தான். ஆனால் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வில்லை – கொஞ்சம் சங்கோஜமாக தான் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தான். நடுவில் அதுவே இரண்டு ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்தது. போலிஸ் காரருக்கும், இளநீர் கடைக்காரருக்கும் ஒரு ஜூஸ் இலவசமாக (காக்காய் பிடிப்பதற்க்காக என்று படிக்காதீர்கள்) கொடுத்தோம்.

இப்படி அப்படியாக கடை திறந்த ஒரு மணி நேரத்தில் ஒரு 15 கப் விற்றி இருப்போம். அதற்க்குப்பறம் நான் போய் உட்கார்ந்து கொண்டேன் பார்ப்பவர்களின் பரிதாபப்பார்வையே காரணம் 🙂 என் அக்காவின் கை ஜாலத்தால் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது. இன்னும் ஒரு அரை மணி நேரம் முடிந்த போது ஒரு 440 ரூபாய்க்கு விற்றிருந்தோம் – 500 ரூபாயை தொட்டவுடன் கடையை ஏறக்கட்டி விடலாம் என்று பார்த்தால் – யாரும் வாங்குகிறா மாதிரியே காணோம்…  ஒரு 20 நிமிஷம் காத்திருந்திருப்போம், பொறுமை போய்க் கொண்டு இருந்தது, திடீரென்று நிறைய பேர் வந்துவிட்டனர் – ஒரு கும்பல் எட்டு பேர் கொண்டது, அப்புறம் ஒரு 4 பேர் என திரண்டு வந்து விட்டனர்.  ஒரு கட்டத்தில் கொண்டு போன புதினா தீர்ந்து போய் விட்டது – அத்தோடு கடையை ஏறக்கட்ட வேண்டிய நிலைமை தானாக ஏற்ப்பட்டு விட்டது. அப்படியும் வந்து கேட்டவர்கள் இருவருக்கு புதினா இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொடுத்து விட்டோம். அதன் பின்னரும் கூட வந்து கேட்டவர்களுக்கு முடிந்து விட்டது என்று சொல்லும் படி ஆகிவிட்டது. குடித்தவர்களிடம் எப்படி இருந்தது என்று கேட்டதற்க்கு, நன்றாக் இருந்தது என்று தான் பதில் வந்தது – சும்மாகாட்டிக்கா இல்லை நிஜமாகவே சொன்னார்களா என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

நிறைய கற்றுக் கொண்டோம் – நிறைய இடத்தில் சொதப்பினோம் – மார்கெட்டிங்கும் பிரண்டேஷனும் ரொம்பவே இம்புரூவ் பண்ண வேண்டி இருக்கின்றது என்று தெரிந்து கொண்டோம், காரை கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். காரிலேயே அகிலை பாராட்டிக் கொண்டு வந்தோம். “அகில் உன்னுடைய முதல் சம்பாத்தியம், வீட்டுக்கு போனவுடன் உன் பங்கை தந்து விடுகிறோம் – நீ சிட்டி சென்டரில் உனக்கு பிடித்த பொம்மையை நீயே வாங்கிக் கொள்ளலாம், சூப்பர்மா நல்லா பிஸினெஸ் பண்ணிட்டியே” என அவனை அவனுடைய வெற்றியை கொண்டாட வைத்தோம். பின்னே குழந்தை இரண்டு மணி நேரம் கால் கடுக்க (ஒரு சேர் அல்லது ஸ்டூல் கூட கொண்டு செல்லவில்லை நாங்கள்) நின்று வேலை செய்திருக்கின்றது, இது கூட சொல்லவில்லை என்றால் எப்படி. வீட்டுக்கு வந்ததும், சும்மா சேர்ந்த காசை அவனிடமே எண்ண விட்டு, அவனுக்கு என்று 200 ரூபாய் கொடுத்து விட்டோம்.

ஹைலைட்ஸ் என்ன என்றால் – கும்பல் அதிகமாக இருந்த போது அக்காவே எல்லா வேலையும் செய்து கொண்டு இருக்க, அகில் ரொம்ப சத்தமாக ” பெரியம்மா – நீங்களே எல்லா வொர்க்கும் பண்ணிடறீங்க, என்னையை பண்ணவே விட மாட்டேங்கறீங்க” என்று கம்பெளைன்ட் பண்ணினது. இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

நல்ல அனுபவம், போட்ட காசில் பாதியை திரும்ப எடுத்து விட்டோம், இன்னும் இரண்டு வாரம் சென்றால் மீதியையும் எடுத்துவிடலாம். அகில் இன்று காலை எழுந்ததில் இருந்து அம்மா இன்னைக்கு கடை போடலாமா என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றது, இல்லைடா சன்டே மட்டும் தான் என்றால், இல்லம்மா இன்னைக்கும் போடலாம் என்று என்னை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணிக் கொண்டு இருந்தது.

கொட்டிவாக்கம் பீச் ஹிஸ்ரியில் ஸ்பார்களர்ஸ் விற்று அழியா இடம் பெற்று விட்டோம், அதிலும் லேன்சரில் சென்று ஜூஸ் விற்றவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் 🙂 வந்து எங்கள் ஜூஸ் கடையில் வந்து ஜூஸ் குடித்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, இந்த வாரம் முடியாதவர்கள் அடுத்த வாரம் வந்து உங்கள் ஆதரவை தருவீர்களாக.

ஜெயா.

கொட்டிவாக்கம் பீச்சில் கடை…

18 Comments

அகிலுக்கு வாழ்க்கையில எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமான அனுபவங்கள் அனுபவிக்க முடியுமோ, அதற்க்கெல்லாம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. சும்மா ஒரு பள்ளிக்கு செல்வதாலும், புத்தகங்கள் படிப்பதாலும் குழந்தை புத்திசாலி ஆகிவிடுவான்,  காலேஜ் போய் புத்தங்களை மனப்பாடம் செய்து, பரிட்சையில் ஒப்பித்து, ஏனோதானோ என்று ஒரு வேலையை வாங்கினால் போதும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது. முடிந்த வரை அது வாழ்க்கையை என்ஜாய்அ செய்ய வேண்டும், நிறைய நண்பர்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், நிறைய புத்தகங்கள் படிக்கவேண்டும், பலதரப்பட்ட மக்களை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும், ஒரு வட்டத்திற்க்குள் அடைந்துவிட கூடாது என்று எனக்கு ஆசை.  அதற்க்காகவே, நாங்கள் பல இடங்களுக்கு சென்று இருக்கின்றோம், சும்மா இதை செய்யாதே, அதை தொடாதே என்று கட்டுப்பாடுகள் நிறைய கிடையாது – கடலில் விளையாடுவது, பைப்பில் தண்ணிர் அடித்து விளையாடுவது, அருவிகளில் குளிப்பது, வெளியூர் பிரயாணங்கள், ரயில் பயணங்கள், சினிமா கண்டிப்பாக குழந்தைகள் படம் மட்டுமே, விக்ரம் – கந்தசாமி குழந்தைகள் படம் என்று சொல்லுவதை எல்லாம் நாங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. எத்தனை முடியுமோ அத்தனை அட்வென்சர்கள் பண்ணுவோம். சின்னதோ பெரிதோ ஏதாவது முடிந்த வரை செய்வது வழக்கம்.பீச்சில் அகிலுக்கு ஒரு ஃபேன் க்ளப்பே உண்டு. இவன் விளையாடுவதை நான் ஜாலியாக பார்த்துக் கொண்டு இருந்தாலும், வேடிக்கை பார்ப்பவர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள், கடலில் மற்றும் மண்ணில் விளையாடவே விடாமல், பீச்சுக்கு குழந்தையை அழைத்து வந்து கூட்டிப்போவதை என்ன என்று சொல்லுவது?

ரொம்ப நாளாக பென்டிங் அட்வென்ச்சர் – கொட்டிவாக்கம் பீச்சில் கடை போடுவது… ஒரு நாள் சும்மா நானும் அகிலும் பீச் சென்று திரும்பிவரும் போது பேசிக் கொண்டு இருந்த போது வந்த டாபிக் அது – நான் தான் ஆரம்பித்தேன் – அகில் நாம பீச்சில கடை போடலாமா என்று குழந்தையும் ஆர்வமாக – ஓ போடலாம் அம்மா, ஜாலியாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டுவந்தான். ஜோஹோ  கார்ப்பரேஷனில் (zoho corporation) ஒரு ஆறேரு வருஷமாக குப்பை கொட்டியதில – அதன் சீ.ஈ.ஓ திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களின் பதிவுகள் ஒரு பத்து படித்தால் போதும் – கல்லூரி படிப்பைப் போல நேரம் மற்றும் பண விரயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது, பிஸினஸ் செய்வது என்பது சின்ன வயதிலேயே கொண்டு வருவது மிக நன்று, எந்த வேலை செய்வதிலும் அவமானமோ அசிங்கமோ இல்லை, குழந்தைகளின் பிஸினெஸ் சென்ஸை தூண்டிவிடுவதின் மூலமும்  நாம் அவர்களின் எதிர்காலத்திற்க்கு பெரிய உபகாரம் செய்தவர்கள் ஆவோம் என்ற என்ற பல உயர்ந்த கருத்துகள் நம்மை அறியாமலே ஆழ வேருன்றி விடும். இதனாலேயே வேளச்சேரியில் இருக்கும் எங்கள் ஆபிஸில் பலர் தலைக்கு மேல ஒரு ஒளிவட்டத்துடன் அலைவதை பார்க்கலாம்.

எனக்கும் அகில் ஒரு நல்ல பிஸினஸ் மேனாக வருவான் என்ற எண்ணம் உண்டு – அழகாக பேரம் பேசுவது, அனைவரையும் வேலை வாங்குவது, தட்டிக் கொடுத்து பாராட்டுவது (நான் அவனை பாராட்டுவதை விட அவன் என்னை பாராட்டுவதே அதிகமாக இருக்கும், “இன்னைக்கு டிபன் நல்லா பண்ணி இருக்கியே, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு, சீக்கிரம் வந்துட்டியே” இது போல பல), நல்ல ஹுமர் சென்ஸ் என பல சொல்லலாம். அவனுக்கு இப்போதிலிருந்தே நல்ல எக்ஸ்போஷர் கொடுக்க வேண்டும் என்றும் ஆசை.

இரண்டு நாட்களாக பீச் கடை ஐடியாவை நன்றாக யோசித்து கொண்டு இருந்தோம். எதையாவது சமைத்து எடுத்துக் கொண்டு போய் விற்பது ரூல்ட் அவுட். விஜயின் பன்ச் டையலாகை போல – ஒரு தரம் சமைச்சுட்டேன் என்றால் என் சமையலை நானே சாப்பிட முடியாது, இதுல எங்கே இருந்து வேறு ஒருவருக்கு விற்பது? ஏதாவது சாமான்களை விற்பது – அதில் பெரிய திரில் ஒன்றும் இருக்க முடியாது நாம் செய்தோம் என்று கொண்டாட முடியாது… காத்தாடி போல ஏதாவது நாமே செய்து விற்கலாம் –  அகிலினால் பெரியதாக அதில் ஒன்றும் உதவி செய்ய முடியாது இன்னும் கிராப்ட்ஸ் செய்ய வயது வரவில்லை அதற்க்கு – அவனை இதை செய்யாதே, அதை செய்யாதே டார்ச்சர் செய்வது போலதான் ஆகிவிடும்… (அதில் ரொம்ப உடம்பு வணங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொல்லுவேன் என்று நினைத்தீர்களா என்ன?)

கடைசியாக ஒரு ஜூஸ் கடை போடலாம் – சாதா ஜூஸ் இல்லாமல் – ஒரு ஸ்பெஷல் ரெசிபி கண்டு பிடித்து செய்தால் என்ன? ரொம்ப வேலையும் வாங்காது, விற்பனையும் சுலபமாக இருக்கும்…  மிக்சிங் வேலைதான், ஐஸ் மற்றும் தேவையான பிற பொருட்களை ஏற்பாடு செய்தால் போதுமானது. நல்ல குவாலிட்டியுடன் சுவையானாதாக அமைந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, கொஞ்சம் மூளைபுயல் (அட பிரயின் ஸ்ட்ராம் தாங்க) செய்து ஒருவாறு ஏற்ப்பாடு பண்ணி இருக்கின்றோம். சேம்பிள் டெஸ்ட் பண்ணுவதற்க்கு காய்கறி கடைக்கு சென்றால்தான் தெரிகிறது நாட்டின் விலைவாசி நிலைமை- ஒரு அம்பது பைசா சைஸ் கூட இல்லை அந்த எலுமிச்சம் பழம் 4 ரூபாயாம்… அடப்பாவி இதெல்லாம் வாங்கி பிஸினெஸ் செய்ய முடியாது, ஒன்றை வாங்கி மியூசியத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும் போல இருக்கின்றது… நேற்றைக்கு நாங்கள் செய்த சேம்ப்ளிலில் ஒரு மாதிரி ஜூஸ் டேஸ்ட் வந்து விட்டது. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்தால், ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்ற ரேஞ்சுக்கு போய்விடுவது உறுதி. நாங்கள் செய்ய போகும் ஜூஸின் பெயர் — சர்ப்ரைஸாக வைக்கலாம் என்று வைத்து இருக்கின்றோம் 🙂

ரெசிபி ரெடி, மூன்று வேலையாட்கள்,முதலாளிகள், பார்ட்னர்கள்- அகில், ஒரு நண்பன், நான் (நீங்க 9 பேர் என்று நினைச்சீங்களா என்ன?) ரெடி,  இன்னும் செய்முறை சாமான்கள் உஷார் செய்ய வேண்டும், பிளாஸ்டிக் கப்ஸ், ஸ்ட்ரா போன்றவை வாங்க வேண்டும், பல வேலைகள் இருந்தாலும் ஜாலியாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.  ஒரு ஐம்பது கப் விற்ப்பதற்க்கான மூலப் பொருட்கள் வாங்கி வைக்கலாம் என்று இருக்கின்றோம். மொத்தம் விற்று தீர்ந்தால் ஷேமம், இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் ஜூஸ் தான் சாப்பாடு ஒரு வாரத்துக்கு 🙂

நீங்கள் அனைவரும் திரளாக திரண்டு, உங்கள் சுற்றம் மற்றும் உறவினரோடு கொட்டிவாக்கம், திருவான்மையூர் – குப்பம் ரோட் பீச்சுக்கு வந்து எங்கள் ஜூஸை காசு கொடுத்து வாங்கி குடித்து (பின்னே நாங்க பிஸினெஸ் பண்ணறோமாக்கும்) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழமாறு கேட்டுக் கொள்ளுகிறோம் 🙂 இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஒரு ஐந்து மணிவாக்கில் பீச்சில் காற்று வாங்கிக் கொண்டே ஜூஸ் குடிக்கற சுகத்தை வார்த்தையில விவரிக்க முடியாதுங்க, அனுபவிச்சுத்தான் பார்க்கனும். பீச் ரோட் ரொம்ப சின்னதுதான், எங்க கடையை மிஸ் பண்ணற அளவிற்க்கு அங்கே ஒன்னும் பெரிய டிஸ்ட்ராக்ஷன் கிடையாது – அப்போ அப்போ அள்ளித் தெளித்தாற்ப்போல அங்கே வரும் ஃபஷனபிள், கலர்ஃபுல் மற்றும் அதி நவீன….. கார்களை தவிர. (நீஙக வேற ஏதாவது நினைச்சா நான் பொறுப்பா?)

ஜெயா.

ஹி ஹி வழிசல்கள் – III

2 Comments

இதில் என்னுடைய பர்சனல் வழிசல் இல்லை என்றாலும் மிகவும் சுவாரசியமாக எங்கள் வீட்டில் நடந்தது.

என் அப்பா கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே உடம்பு சரியில்லாதவர். குளிர்காலம் என்றால் டேன்ஜர் லைட்தான். ஒரு வாரத்துக்கு முன்னால், காலையில் பேயடித்தாற் போல் உட்கார்ந்து இருந்ததை பார்த்து, “என்னப்பா ஆச்சு, ரொம்ப உடம்பு சரியில்லையா” என்று கேட்க,

“அப்படி ஒன்றும் இல்லை, ஆனால் ராத்திரி ஒரு நாய் அழுது கொண்டே இருந்தது… சாதாரணமாக நாய் அழுவக் கூடாது என்பார்கள்… அப்படி அழுதால் யாராவது செத்துப் போய்விடுவாங்க… எங்கே எனக்கு தான் யமன் வந்துவிட்டானோ என்று பயமாகி போய்விட்டது” என்று புலம்பிக் கொண்டு இருந்தார்.

நாங்கள் அனைவரும் அவரை தேற்றிக் கொண்டு இருந்தோம், “யாராவது நாய் அழுவதால் செத்துப்  போவார்களா? அதிலும் இந்த தெருவில் ஒரு நூறு பேராவது இருப்பார்கள். அதில் யார் சாவார்கள் என்று அந்த நாய் அழும்… உன்னை விட மோசமான நிலையில் இருப்பவருக்காக கூட அந்த நாய் அழுது இருக்கலாம்… இதெல்லாம் பலிக்காதுப்பா, எல்லாம் மூடநம்பிக்கைதான்…”

அப்பாவோ, ” இல்லம்மா உங்களுக்கு தெரியாது, முப்பது வருஷத்திற்க்கு முன்னாடி நம்ம ஊருல தெருவில இருந்த நாய் அழுது, ஒருத்தன் செத்துப் போயிட்டான், எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… பொழுது விடிஞ்சதும் தான் உயிர் வந்தது எனக்கு.. ”

நான், “இல்லப்பா, பக்கத்துவீட்டில புது நாய் வாங்கி இருப்பாங்க, அது புது இடம் பழக்கம் இல்லாம அழுது இருக்கும், அதுக்கு போய் இவ்வளவு சீன் போடறியே அப்பா, நாய் அழுது மனுஷன் செத்த காலம் எல்லாம் மலைஏறி போச்சு…”

இரண்டு நாட்கள் கழித்து எங்க அம்மா பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டு இருந்த போது, “என்னங்க, புது நாய் வாங்கி இருக்கீங்களா? ஒரு நாள் ராத்திரி எல்லாம் கத்திகிட்டு இருந்தது?… ”

“இல்லீங்க, அது எங்க பையன் தான், எங்க பேத்திக்கு நாய் மாதிரி குலைச்சு விளையாட்டு காட்டிகிட்டு இருந்தான்… ” பையன் என்று அவங்க செல்லமா சொன்னது சி.டி.ஸ் ல் குப்பை கொட்டிக் கொண்டு இருக்கும் ஒரு சக ஐ. டி தொழிலாளியைத்தான்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, “ஹி ஹி அப்படியா… நிஜ நாய் மாதிரியே சத்தம் இருந்ததா… அதனால புதுசா நாய்தான் வாங்கி இருக்கீங்களோ என்று நினைச்சேன்…”

ஒரு பையனுடைய விளையாட்டு குலைப்பு சத்தத்தை, எங்க அப்பா எமனோட பாசக்கயிறா நினைச்சு ஒரு ராத்திரி முழுக்க பீதில இருந்ததை என்ன என்று சொல்ல…

ஜெயா.

பழைய வழிசல்கள் : ஹி ஹி வழிசல்கள் II, I

ஆண் பெண் – அறிவியல் கண்ணோட்டம்…

16 Comments

விடியற்காலையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தாலும் மனசு வாலை சுருட்டிக்கொண்டு போர்வைக்குள் படுத்து இருக்குமா?

தெரிந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகள் பேட்டர்னை ஆராய்ச்சி செய்த போது –

முதலில் பெண்குழந்தை பெற்றவர்கள் – அடுத்தது ஆண் குழந்தை பிறந்து இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறையவாக இருக்கின்றது – அரவிந்த், ராதை, வரா அக்கா, சங்கீ,

இரண்டுமே பெண்குழந்தையாகவும் சிலர் –  கேரன், ராஜி கோமதி, (நோட்: முதல் குழந்தை பெண், ரோட்டில் டிரஸை கிழித்துக் கொண்டு அலையபோகிறேன் என்று நல்லா தெரியுது..)

முதலில் ஆண் குழந்தை பெற்ற அபாக்கியசாலிகளுக்கு அடுத்தது 99% ஆண் குழந்தைகள்தான் பிறந்து இருக்கின்றது – உமா, வித்யா, ஷோபா, வினோத், சைலேஷ், ஷர்மிளா, சாருலதா, சித்ரா, இப்படியாக இந்த லிஸ்டில் தான் அதிகம் பேர்…

முதல் ஆண், பின்னர் பெண் – இந்த லிஸ்ட் இருப்பதிலே சின்னதாக இருப்பது தான் சோகம். .. யோசித்து யோசித்து பார்க்கிறேன் –  சங்கீதா, ராஜி அக்கா, இதற்க்கு மேல் லிஸ்ட் வளர மாட்டேங்குது…

மத்தவங்க எல்லாரும் அநியாயத்திற்க்கு ஒரு குழந்தையோட நிறுத்திவிட்டார்கள்… என்ன பண்ணுவது? சே நம்ம ஆராய்ச்சியை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கிட்டு போக விடமாட்டாங்க போலவே…

இந்த பையன் குழந்தைகள் பிறக்கும் போதே மேல் ஷாவனிசத்தோட பொறக்குதோ, அடுத்ததா ஒரு பொண்ணு வந்தா நம்ம சுகந்திரம், செல்லம், தான் தோன்றித்தனம் எல்லாம் பறி போயிடும் என்று எதோ ஃப்ராடுத்தனம் பண்ணிடுதுங்க என்று நினைக்கிறேன். எப்படியும் பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி நடிச்சாவது, எப்போவும் அப்பா அம்மாகிட்ட நமக்கு திட்டுதான் வாங்கித் தரப்போகுது, அண்ணாவா இருந்து அதை வேற பொறுப்பா பார்த்துக்க சொல்லுவாங்க, படிப்புல வேற நல்ல மார்க் வாங்கி தொலைக்கும், பாரு உன் தங்கச்சியா இருந்தா கூட என்ன மார்க் வாங்கி இருக்கு, நீயும் வாங்கி இருக்கியே அதில பாதி என்று ஒவ்வொரு பரிட்சைக்கும் திட்டு விழும். அதுக்கு பேசாம இன்னொன்னு நம்மளை மாதிரியே பொறந்தா – பண்ற திருட்டுத்தனங்கள்ல்ல கூட்டு களவாணியாவும் சேர்த்துக்கலாம், கைக்கு அடக்கமாகவும் இருக்கும், எதுக்கு எடுத்தாலும் நம்மை பார்த்து படிச்சுக்க சொல்லுவாங்க, ரொம்ப நல்லா படிச்சு நம்மளை பீட் பண்ற சான்ஸும் கம்மி, சோ குழப்பம், கூச்சல், சச்சரவு இல்லை…

இதே பெண் குழந்தைகள் பார்த்தீங்கன்னா, சின்ன வயசிலேயே ரொம்ப நல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்க, ஒரு தம்பி பாப்பா அடுத்தது பொறந்தாலும் அதை வைச்சு மேய்க்கும் அளவிற்க்கு பொறுமைசாலிங்க. அப்படியே விஷயம் கை மீறீ போச்சு என்றாலும் அம்மா கிட்ட சொல்லிடுவேன் என்று ஒரு டையலாக்கில் ஆட்டம் போடற தம்பியை அடக்கி வைக்க தெரிஞ்சவங்க. அதனால தான் நிறைய வீட்டில பொண் குழந்தைக்கு அப்புறமா பையன் குழந்தைகள் பிறந்திருக்கு என்று ஒரு புது அறிவியல் கண்ணோட்டத்தை உங்களுக்கு சொல்லறேன்…

பத்தாவது, பன்னிரண்டாவது, அடங் காலேஜ் பரிட்சைக்கு கூட நான் இப்படி பாயை பிராண்டிக் கொண்டு யோசிச்சு இருக்க மாட்டேன்… இதுல வேற முடிக்காத எம்.சி.ஏ ல புள்ளியியல்ல வேற அரியர், இப்படி இருக்கற நானே இது மாதிர் புள்ளிவிவரங்களில் சேகரிச்சுகிட்டு அலையறேன் என்றால் என் பைத்தியம் எந்த அளவிற்க்கு முத்தி போய் இருக்கு என்று நீங்க சொல்லவே தேவையில்லை… நானே நல்ல டாக்டரா பார்த்து வைத்தியம் பார்த்துக்கறேன்…
ஜெயா.

Life is a countdown

Leave a comment

Akhil and I start our day in the morning with countdowns. Today’s numbers are like this:

Twelve days for Akhil’s school to declare leave for pooja holidays!

Fifteen days for Appa to come to Chennai with all the loads of gifts he has got for Akhil and kutti paappa!!

Twenty days for kutti paappa to come home!!!

Though Akhil does not have a correct idea of how long it is, he just knows that it is some thing like he has sleep as many nights as the count and when gets up the last day morning, things will happen.

Jaya.

Older Entries