எப்போதுமே எனக்கு நண்பர்கள் ராசி உண்டு, எங்கே சென்றாலும் நல்ல நண்பர்கள் கிடைத்து விடுவார்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் அப்படி ஒரு கொடுப்பினை. கல்லூரியில் என்னிடம் மாட்டியவன் கிறிஸ்டோபர் – முதல் செமெஸ்டரில் financial accounting பேப்பரில் ஃபெயில் ஆகிவிட்டு, நான் சொல்லிக் கொடுதத்தனால் இரண்டாவது செமெஸ்டெரில் பாஸ் ஆனவன், ஆனால் அவனை கேட்டால் அப்படியே மாற்றி சொல்லுவான் 🙂 ஏழு பேர் கொண்ட எங்கள் கல்லூரி கேங்கில் ஒவ்வொருவம் ஒரு விதம், நாங்கள் அடித்த கொட்டங்களை எழுத வேண்டுமென்றால் வோர்ட்பிரஸ் தாங்காது.

இப்போது எல்லோருக்கும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோடு வெளிநாடு, உள்நாடு, உள்ளூர் என ஒவ்வொரு இடத்தில் இருந்தாலும் தொடர்பு அறவே அற்றுப் போகாமல் ஒரு மாததிற்க்கு ஒரு போன் அல்லது மெயில் என நிலையில் நின்று கொண்டு இருக்கின்றது. இதில் கிற்ஸ்டோபர் இருப்பது குடும்பத்துடன் இருப்பது மவுண்ட்டில் – ஒரே பெண் குழந்தை ஜேன் – அகிலை விட ஆறு மாதம் சின்னவள் – மூன்றரை வயது – கன்னத்தில் இரண்டு பெரிய கூழாங்கல்லை வைத்தது போல ஒரு முக லக்ஷனம். இதற்கு முன்னாடியே அகிலும் ஜேனும் அகிலின் பிறந்த நாள் மற்றும் சில சமயங்களில் சந்தித்திருந்தாலும், அவை எல்லாம் வரலாற்றில் முக்கியத்துவம் பெருவதற்க்கு ஏற்றாற் போல அமையவில்லை 🙂

சென்ற வாரம் சனிக்கிழமை குடும்பத்துடன் கிற்ஸ்டோ எங்கவீட்டுக்கு வந்திருந்தான்.  ஜேனும் அகிலும் சங்கோஜங்கள் தீர்ந்து பேசி பழகுவதற்க்கு ஒரு அரை மணி நேரம் ஆகி விட்டது. எங்கள் வீட்டு சமையலுடன் கொஞ்சம் பிரியாணியும் கலந்து பரிமாறவும் இருவரும் அழகாக தங்கள் தட்டுகளில் வைத்திருந்ததை சாப்பிட்டனர். எங்கள் குழந்தை அவளை பார்த்துதான் சாப்பிடது என்று சொல்ல வேண்டும் – அந்தம்மா பக்கா நான் வெஜிடேரியன் – வெஜிடபிள் பிரியாணியில் ஏன் கறி இல்லை என்ற ஜி.கே கேள்வி எல்லாம் சர்வ சாதாரணம் போல. கிளம்புவதற்க்கு மனம் இல்லாமல் இரண்டு மணி நேரம் கழித்து தனது வீட்டுக்கு கிளம்பிச் சென்றது.

அடுத்த நாள் நாங்கள் அந்தப் பக்கம் போக வேண்டி இருக்க, அகிலிடம் சொன்னவுடன், நாம் ஜேன் வீட்டுக்கு போகலாம் அம்மா என்பது அகில் கோரிக்கை, சரி அழைத்துப் போகலாம் என்று நானும் கூட்டி சென்றேன். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தவுடன் ஓரே சந்தோஷம், விளையாட்டு சாமான்களை கடை பரப்பி விளையாட ஆரம்பித்தனர். ஜேனுக்கு தமிழில் பாதி எழுத்துகள் வேறு வரவில்லை – ஏதோ ஒரு குத்துமதிப்பாக அகில் பேசியிருக்க வேண்டும்.

ஷெல்ஃபில் வைத்திருந்த பால் பாட்டிலை பார்த்தவுடன் என் கண்கள் விரிந்தன…

“டேய், உன் பொண்ணு இன்னும் பால் பாட்டிலல்லயா குடிக்கிறா?”

“ஆமாம் மாலினி, அந்த கதையை ஏன் கேக்கற? நாங்களும் என்னன்னவோ சொல்லி பார்த்துட்டோம், அந்த பழக்கத்தை விட மாட்டேங்கறா… ” (என் முழு பெயர் – ஜெயமாலினியாக இருந்தாலும், வீட்டில் உறவினர்கள் ஜெயா என்றும் காலேஜ் மற்றும் பல் வேறு இடங்களில் மாலினி என்றே வழங்கப்பட்டு வருகிறது)

“அவ கண்ணு முன்னாடியே தூக்கி போட்டுடா, அப்போ தெரிஞ்சுப்பா இப்போதான் பெரிய பொண்ணாகிட்டாளே”

“நீ வேற தூக்கி போட்டா கடையில போய் திரும்பி வாங்கிடலாம் என்ற அளவிற்க்கு தெரிஞ்சு வைச்சு இருக்கா மாலினி”

இதில் அவன் மனைவி வேற துணைப்பாட்டு – “போகிற இடம் எல்லாம் அசிங்கமா இருக்கு மாலினி எல்லாரும் இன்னுமா பால் பாட்டில்லயா குடிக்கிறா என்று கேட்கும் போது”

ஆஹா இப்படி ஒரு பிரச்சனையா இவன் இன்பமான குடும்ப வாழ்க்கையில்? நம்முடைய இயல்பான இரக்க குணமும், பிறர் பிரச்சனையை தன் பிரச்சனையாக பார்க்கும்  பரோபகாரமும் அலை கடலென பெருகி வர (இந்த இரக்க குணத்தை பார்த்து என் கல்லூரி கேங்க் எனக்கு வைத்த பட்டப் பெயர் – குள்ள கவுண்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) சரிடா நாங்கள் இருக்கிறோம் என்று அபயக் கரம் நீட்டி அவனை ஆறுதல் படுத்தினோம்.

முதல் முயற்சியாக : “ஜேன், குட்டிப்பாப்பாங்க தான் பாட்டில்ல குடிக்கும், நீதான் பெரிய பொண்ணாகிட்டியே, பால் எல்லாம் டம்ப்ளரில் தான் குடிக்கனும், எங்க அகில் கூட முதல்ல பாட்டில்ல குடிச்சான், அப்புறம் அவனே பெரிய பையனாகி விட்ட வுடனே தூக்கி போட்டுட்டான்.. நீ கூட தூக்கி போட்டுட்டு டம்பளரிலிலே குடி என்ன?”

என்னடா இவ்வளவு நேரம் அன்பா பேசிக் கிட்டு இருந்த ஆன்ட்டி ஆப்பு வைக்க பார்க்கறாங்களே என்ற பயம் ஜேன் கண்ணில்…

அடுத்ததாக, “ஜேன், எங்கள் வீட்டுக்கு ஒரு குட்டிப் பாப்பா வரப் போகுது, அதற்க்கு ஒரு பால் பாட்டில் வேண்டும் உன்னோடதை கிஃப்ட்டா கொடுத்துடறயா?”

ஒரு பத்து நிமிஷ கேப்பில் – “நீ என்ன பண்ணு  ஜேன், உன்னோட பால் பாட்டிலை எடுத்து தலையை சுத்தி, மங்கலம் பாடி சாமி கும்பிட்டு சாக்கடையில தூக்கி போட்டுடு என்ன?”

பட்டென வந்தது பதில் – “நான் சாமி கும்பிட மாட்டேன் ஆன்ட்டி, ஏசப்பாவைதான் கும்பிடுவேன்.. ”

அடியே, நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன், நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே?

அப்புறம் லஞ்சம் ஆஃபர்: “நாங்க அடுத்த தரம் வரும் போது உனக்கு ஒரு பெரிய கிஃப்ட் வாங்கி தரோம், தூக்கி போட்டுட்டியானால்…”

கொஞ்ச நேரத்தில் – “ஜேன் – பூரி சொல்லு” எனக்கு தெரியும் அதற்க்கு  ர எழுத்து வருவதில்லை என்று.

“பூடி”

“அத்தை சொல்லு” – த வும் வருவதில்லை

“அக்கா”

“பார்த்தியா பால் பாட்டில்ல குடிக்கறதால தான் பாதி எழுத்து உனக்கு வர மாட்டேங்குது.. இது மாதிரி பேசினியானால் யாருக்கும் நீ பேசறது புரியாது, அப்புறம் யாரும் உன் கூட பேச மாட்டாங்க…”

ஆஹா, ஜெயா நீ மட்டும் வக்கீலுக்கு படிச்சு இருந்தா ராம் ஜெத்மலானி கூட முன்னால் நின்னு இருக்க முடியாது…

அடிக்க அடிக்க அம்மிகல்லும் நகராதா… ஜேன் வாயில் சொல்ல ஆரம்பித்தது, “சரி ஆன்ட்டி நான் இனிமேல் பாட்டில்ல குடிக்கலை.. தூக்கி போட்டுடறேன்…”

வெற்றிப்புன்னைகையோடு நான் திரும்ப ஜேன் அம்மா, “இப்போ இப்படித்தான் சொல்லுவா மாலினி , ராத்திரி ஆச்சு என்றால் அழுது அடம் பண்ணுவா, இந்த நிமிஷமே பால் பாட்டில் வேண்டும் என்று அட்டஹாசம் பண்ணுவா…”

என் சுருதி கொஞ்சம் குறைந்தாலும், எவ்வளவோ பார்த்துட்டோம், இந்த குட்டிப் பொண்ணு எம்மாத்திரம்…

“ஜேன், நீ போய் கடையில ஒரு பால் பாட்டில் வாங்க கேட்டே என்று வைச்சுக்கோயேன் – கடைக்காரர் தர மாட்டார், ஏன் தெரியுமா?…”

“ஏன் ஆன்ட்டி?”

“ஏன்னா அவர் சொல்லுவார், பால் பாட்டில் எல்லாம் நாங்க சின்ன குழந்தைக்குத்தான் விற்ப்போம், உன்னை மாதிரி பெரிய பொண்ணு எல்லாம் ஸ்ட்ரா டம்பிளர் இல்லை, நல்ல டம்ப்ளர்ல தான் குடிக்கனும் என்று திருப்பி அனுப்பிடுவார் உன்னை…”

யோசனை குழந்தை முகத்தில்..

“இன்னொன்னு தெரியுமா, உன் பல் இப்போவே கொஞ்சம் கருப்பாகிடுச்சு, இன்னும் பாட்டில்லயே குடிச்சா, எல்லா பல்லும் ஃபுல்லா கருப்பாகி கிழ விழுந்து விடும், அப்புறம் அகில் உன்னை ஜேன் பாட்டி என்றுதான் கூப்பிடுவான்… எங்கே அகில் ஜேன் பாட்டி என்று கூப்பிடு பார்க்கலாம்…”

எங்க குழந்தை பத்து ரூபாய்க்கு நடி என்றால் நூறு ருபாய்க்கு நடிக்குமே… அழகாக ஜேன் பாட்டி என்று கூப்பிட்டு தன் பங்கிற்க்கு வெறுப்பேற்றியது. கூடவே எங்க புது பாப்பாவிற்க்கு உன் பாட்டிலை கொடுத்துவிடு என்று டையலாக்.  நான் விட்டு விட்டேனே என்ற பெருமை வேறு.

இப்படி அப்படியாக் ஒரு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை பால் பாட்டிலை இழுத்துக் கொண்டு இருந்தோம். ஜேன் கண்ணுக்கு நான் யம கிங்கரணியாக தெரிந்து இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன… கிளம்பும் நேரம் வந்தவுடன், சொன்னதெல்லாம் எக்ஸாம் ரிவிஷன் போல ஒருதரம் சொல்லிவிட்டு கிளம்பினோம். அகிலுக்கு ஓரே சந்தோஷம் அவங்க வீட்டில் விளையாடியது, வெளியே சென்றது, புது ஃப்ரண்ட் கிடைத்தது எல்லாம்.

வந்து ஜேன் கதைகள் பேசியபடியே தூக்கம். காலையில பார்த்தால் கிறிஸ்டோவின் மிஸ்ஸ்ட் கால் இருந்தது, என்னடா என்று திரும்ப போன் செய்தால் ஜேனின் குரல் – ”  நான் பால் பாட்டிலை தூக்கி சாக்கடையில் போட்டுட்டேன்ஆன்ட்டி,” மேலும் ஏதோ கூட சொல்ல்லியது, அம்மாவின் எழுத்து ஃப்ரொபைல் ரொம்ப ஸ்ட்ராங்க் என்பதால் எனக்கு எதுவும் புரியவில்லை… அவன் வாங்கி – “நிஜமாவே மாலினி.. காலையில என்ன நினைச்சா என்று தெரியவில்ல, மழை பெய்துகொண்டு இருந்த போதே அவ அம்மாவை கூட்டிகிட்டு குடை புடிச்சுகிட்டு, வெளியே போய் சாக்கடையில் தூக்கி போட்டுட்டா… உனக்கு முதல்ல சொல்லனும் என்றுதான் காலையிலேயே ஃபோன் பண்ணினேன் மாலினி… ”

அடடா, நம்முடைய அறிவுரைக்கு இப்படி ஒரு ரிஸல்ட்டா?? அடடா, ” திரும்ப போனை அவ கிட்ட கொடுடா” என்றேன். “ஜேன், ரொம்ப நல்ல பொண்ணாகி இருக்கியே, ஆன்ட்டி சொன்னதை கேட்டே இல்லையா நானும் அகிலும் அடுத்த தரம் வரும் போது உனக்கு பெரிய கிஃப்ட் வாங்கி வரோம் என்ன?”

“சரி ஆன்ட்டி”

கிறிஸ்டோவை காலம் ஃபுல்லா நமக்கு கடன் பட வைச்சுட்டோமே.. இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு இதை சொல்லியே அவனை அழவிடலாம், அரியர் மேட்டரைப் போல… என்க்கு வேறு அட்வைஸ் மாலினி என்று பட்டப் பேர் வேறு ஒன்று உள்ளது – பயங்கரமாக கிண்டல் பண்ணுவார்கள், ஒரு முறை காலேஜில் லவ் பண்ணின என் தோழிக்கு அட்வைஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று நான் பேச, அவள் ஒரு கட்டத்துக்கு மேல் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட, அதிலிருந்து தான் குள்ள கவுண்டர் மற்றும் பல பட்ட பெயர்கள் சூட்டப் பட்டது எனக்கு… இப்போது அவன் குடும்பத்திலேயே என் அட்வைஸ் காரணமாக ஒரு புரட்சி நடந்து இருப்பதால் இன்னும் பல வருடங்களுக்கு அவன் வாயை ஃப்விகால் போட்டு ஒட்டிய நிலைமைதான்…

அகில் ஸ்கூல் விட்டு வந்த பிறகு சொன்னேன், “அகில், ஜேன் பால் பாட்டிலை தூக்கி போட்டுட்டாளாம்டா நாம் சொல்லிட்டு வந்தோம் இல்ல அதனால…”

“அப்போ நம்ம புது பாப்பாவிற்க்கு?” என்ன ஒரு கவலை?

“ஹஹஹா, நாம புதுசு வாங்கிக்கலாம்டா…”

எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடியும், ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று சிட்டுவேஷனுக்கு ஏற்றார் போல இருக்கும் பல பழமொழிகளில் நமக்கு ஒன்னாவது வொர்க் அவுட் ஆகாதா என்ன? இப்படியாக நம் புண்ணியம் கவுண்ட் ஏறிக்கொண்டே இருந்தால் என்ன ஆவது?

ஜெயா.