குழந்தைகள் வீட்டில் இருப்பதால் நமக்கு என்ன திறமை வளருதோ இல்லையோ, அந்த நிமிஷத்தில் கொடுத்த வார்த்தையை பற்றி கதை சுத்துகின்ற திறமை நாமே வியக்குமளவிற்க்கு அதிகமாகி இருக்கும்.

இன்றைக்கு அப்படித்தான், அகிலை மதியானம் தூங்க வைக்க லஞ்சமாக சாயங்காலம் பீச்சுக்கு அழைத்துக் கொண்டு போய் கட்லெட் வாங்கிதருகிறேன் என்று சொன்னேன். அதை கேட்டவுடன், அம்மா கட்லெட் கதை சொல்லேன் என்று ஆரம்பித்தது வம்பை. சரி அப்படியே கட்டில் மேல வந்து படு சொல்லுகிறேன் என்று கோழி அமுக்குகிறார்ப் போல் அமுக்கி எடுத்துவிட்ட கதை இது:

“ஒரு ஊர்ல கட் என்று பையன் இருந்தானாம், லெட் என்று ஒரு பொண்ணு இருந்தாளாம், இரண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ். ஆனால் ரெண்டு பேரும் எப்போவும் சண்டை போட்டுப்பாங்க, இவ புக் அவன் எடுத்துடுவான், அப்புறம்ம அவனோட பேனா இவ எடுத்துடுவா… அவங்க கிளாஸ் மிஸ் சொல்லி சொல்லிப் பார்த்தாங்க, கேட்கலை, கடைசியில ரெண்டு பேர் குடுமியையும் சேர்த்து முடிச்சு போட்டுவிட்டுடாங்க.. அதில இருந்து அவங்க ரெண்டு பேரும் எங்கே போனாலும் ஒன்னாத்தான் போக வேண்டி இருந்தது, எப்போவும் ஒத்துமையா இருக்க வேண்டி வந்தது. பார்க்கறவங்க எல்லாரும் அவங்களை அப்போத்திலிருந்து கட்லெட் போகுது, கட்லெட் வருது என்று சொன்னாங்க, அதில இருந்து அவஙக் கட்லெட் ஆகிட்டாங்க…”

கதை ரொம்ப கன்வின்ஸிங்கா வந்ததாலோ என்னமோ அகிலிடம் சத்தம் காணோம்… அகிலைவிட கேட்டுக்கொண்டு இருந்த என் அக்கா ரொம்ப இம்ப்ரஸ் ஆனாங்க நம்ம இன்ஸ்டட் கதை கேட்டு.

ஜெயா.