பலத்த யோசனைகளுக்கு பிறகு இரண்டாவது குழந்தைக்கு முன்னதாக ஒரு கம்பிளீட் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளலாம் – ரேடியோவில் மற்றும் டி.வியில் தான் ரேவதி முதல் பல நட்சத்திரங்கள் – புற்று நோய் முதல் பல்வேறு நோய்களுக்கான வார்னிங் கொடுக்கின்றார்களே, நம்முடைய நிலைமையையும் பார்த்துக் கொள்ளுவோம் என்று மயிலாப்பூரில் உள்ள இ.வி.கல்யாணி மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். எல்லா டெஸ்ட்டும் முடிந்து, தலைமை டாக்டர் கீதா அர்ஜுன் அவர்களை பார்க்கவேண்டிய நேரம். இருந்த இரண்டு மூன்று சந்தேகங்களை கேட்டுக் கொண்டு, கிளம்பும் போது – கடைசி கேள்வியாக –

“டாக்டர், கேட்பது தப்புதான் இருந்தாலும் கேட்கிறேன், பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக பிறப்பதற்க்கு ஏதாவது வழி தெரியுமா உங்களுக்கு?”

“ஓ… இங்கே இருந்து வெளியே போனால், அந்த தெருமுக்கில ஒரு வேப்ப மரம் இருக்கும். எனக்கு நீங்க கேட்பது போல குழந்தை பிறக்க வைக்க தெரிந்து இருந்தால், இந்த கிளிக்கை க்ளோஸ் பண்ணிட்டு, அங்கே குறி சொல்லி உக்கார்ந்து இருந்திருப்பேன்…  அதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க..” சிரித்துக் கொண்டே தான் சொன்னார் நல்லவேளை… அதுவரைக்கும் சரி…

“ஹி ஹி… சாரி, தெரியாமா ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்…”

வேப்பமரம் பற்றி பேச்சு எடுத்தபோதே உஷாராகி இருந்து இருக்கனும்…  மகாஜனங்களே நீங்களே சொல்லுங்க நாட்டில ஒரு பெண் குழந்தை பிறக்க ஆசைப்படரது தப்பா??

——————————————————————————————————————————————————–

தெரிந்த ஒரு நண்பருக்காக முதலியார் மணப்பெண்ணை வலை போட்டு தேடிக் கொண்டு இருந்தேன். தெரிந்தவர் ஒருவர் முதலியார் என்று இன்னொரு நண்பர் மூலமாக தெரிய வர, சரி அவரை விசாரித்துப் பார்ப்போம் அவர்க்கு யாராவது பெண் தெரியுமா கல்யாணத்திற்க்கு என்று இருந்தேன். ரொம்பவும் அறிமுகமில்லாத நண்பர் ஆதலால் இதை எப்படி நேரில் கேட்பது என்று சேட் ரிக்வெஸ்ட் அனுப்பி இருந்தேன். ஏற்றுக் கொண்டு இருந்தார். சரி, ஒருநாள் சும்மா இருக்கும் போது பிங் பண்ணினால் பதில் இல்லை, சரி அவர் இடத்தில் இல்லை போல என்று விட்டு விட்டேன். திரும்ப அவர் ஒருதரம் பிங் பண்ணி இருந்தார். என் கெட்ட நேரம் நான் அப்போது இடத்தில் இல்லை… திரும்ப நான் கேட்டால் அங்கிருந்து பதில் இல்லை… அட்டா, பெண்ணை தேடுவதை விட இது பெரிய விஷயமாக இருக்கும் போலவே என்று நானும் விட்டு விட்டேன்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பார்த்தால் இடத்துக்கு வந்திருந்தார்…

அவரே “என்னங்க இது, நீங்க கூப்பிடும் போது நான் இல்லை, நான் கூப்பிடும் போது நீங்க இல்லை, அதுதான் என்ன என்று நேரிலேயே கேட்டுக்கலாம் என்று வந்தேன்…”

சேட் என்றால் முகம் தெரியாததால் சுலபமாக கேட்டு விடலாம் என்று எண்ணி இருந்த எனக்கு அவரை நேரில் பார்த்ததில் கை கால் தந்தி அடித்தது. முகத்துக்கு நேரே முதலியாரா என்று எப்படி கேட்பது, (ரைமிங் வெறும் வார்த்தையில் மட்டும் தானே) மெதுவாக

“ஒன்னும் பெரிய விஷயமில்லை, நீங்க முதலியார் என்று கேள்விபட்டேன்… தெரிந்த ஒரு பையன் வரன் இருந்தது, ரொம்ப நல்லா தெரிந்தவங்க, நல்ல பையன் கூட, அதுதான் உங்களுக்கு ஏதாவது பெண் தெரியுமா என்று கேட்கலாம் என்றுதான்… ” என்று இழுத்தேன்..

“நாங்க முதலியார் இல்லீங்களே… சோழிய வெள்ளாளர்.. ”

“ஹி ஹி, அப்படியா, ஓ அப்போ தெரியாம கேட்டுட்டேன்… ” தவறான தகவல் தந்த கிராதக நண்பரை கேவலமாக திட்டிக் கொண்டே மனதுக்குள்தான் ..” இல்ல ரொம்ப நல்ல இடம் அதனாலதான் கேட்டு பார்க்கலாம் என்று ”

“சேசே அதில என்ன இருக்குங்க.. எனக்கும் இந்த சாதி இதில்லல்லாம் நம்பிக்கை இல்லீங்க, ஆனா வீட்டில இருக்கற பெரியவங்களை எல்லாம் நம்மால கன்வின்ஸ் பண்ண முடியாது, அதுதாங்க பிரச்சனை…”

“ஆமாங்க, கரெக்ட்டுதான் நீங்க சொல்லறது.. அதிலுயும் ஊர் பக்கம் என்றால் ரொம்பவே கஷ்டம்தான்…” கோவிலில் அடிக்கும் பெரிய ஜிங் ஜாங் ஜால்ரா உங்களுக்கு இப்போது ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு அல்ல…

“கேட்டேன் என்று தப்பா நினைச்சுக்காதீங்க.. ” வேற என்னத்தை சொல்லுவது? இல்ல அவரால தான் தப்பா நினைச்சதை வெளியே சொல்ல முடியுமா, இல்ல நமக்குத்தான் வழிசல்கள் புதுசா?

ஜெயா.

பழைய வழிசல்கள்: ஹி ஹி வழிசல்கள் 1