அகிலுக்கு வாழ்க்கையில எவ்வளவுக்கெவ்வளவு வித்தியாசமான அனுபவங்கள் அனுபவிக்க முடியுமோ, அதற்க்கெல்லாம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. சும்மா ஒரு பள்ளிக்கு செல்வதாலும், புத்தகங்கள் படிப்பதாலும் குழந்தை புத்திசாலி ஆகிவிடுவான்,  காலேஜ் போய் புத்தங்களை மனப்பாடம் செய்து, பரிட்சையில் ஒப்பித்து, ஏனோதானோ என்று ஒரு வேலையை வாங்கினால் போதும் என்ற எண்ணம் சுத்தமாக கிடையாது. முடிந்த வரை அது வாழ்க்கையை என்ஜாய்அ செய்ய வேண்டும், நிறைய நண்பர்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், நிறைய புத்தகங்கள் படிக்கவேண்டும், பலதரப்பட்ட மக்களை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும், ஒரு வட்டத்திற்க்குள் அடைந்துவிட கூடாது என்று எனக்கு ஆசை.  அதற்க்காகவே, நாங்கள் பல இடங்களுக்கு சென்று இருக்கின்றோம், சும்மா இதை செய்யாதே, அதை தொடாதே என்று கட்டுப்பாடுகள் நிறைய கிடையாது – கடலில் விளையாடுவது, பைப்பில் தண்ணிர் அடித்து விளையாடுவது, அருவிகளில் குளிப்பது, வெளியூர் பிரயாணங்கள், ரயில் பயணங்கள், சினிமா கண்டிப்பாக குழந்தைகள் படம் மட்டுமே, விக்ரம் – கந்தசாமி குழந்தைகள் படம் என்று சொல்லுவதை எல்லாம் நாங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. எத்தனை முடியுமோ அத்தனை அட்வென்சர்கள் பண்ணுவோம். சின்னதோ பெரிதோ ஏதாவது முடிந்த வரை செய்வது வழக்கம்.பீச்சில் அகிலுக்கு ஒரு ஃபேன் க்ளப்பே உண்டு. இவன் விளையாடுவதை நான் ஜாலியாக பார்த்துக் கொண்டு இருந்தாலும், வேடிக்கை பார்ப்பவர்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள், கடலில் மற்றும் மண்ணில் விளையாடவே விடாமல், பீச்சுக்கு குழந்தையை அழைத்து வந்து கூட்டிப்போவதை என்ன என்று சொல்லுவது?

ரொம்ப நாளாக பென்டிங் அட்வென்ச்சர் – கொட்டிவாக்கம் பீச்சில் கடை போடுவது… ஒரு நாள் சும்மா நானும் அகிலும் பீச் சென்று திரும்பிவரும் போது பேசிக் கொண்டு இருந்த போது வந்த டாபிக் அது – நான் தான் ஆரம்பித்தேன் – அகில் நாம பீச்சில கடை போடலாமா என்று குழந்தையும் ஆர்வமாக – ஓ போடலாம் அம்மா, ஜாலியாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டுவந்தான். ஜோஹோ  கார்ப்பரேஷனில் (zoho corporation) ஒரு ஆறேரு வருஷமாக குப்பை கொட்டியதில – அதன் சீ.ஈ.ஓ திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களின் பதிவுகள் ஒரு பத்து படித்தால் போதும் – கல்லூரி படிப்பைப் போல நேரம் மற்றும் பண விரயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது, பிஸினஸ் செய்வது என்பது சின்ன வயதிலேயே கொண்டு வருவது மிக நன்று, எந்த வேலை செய்வதிலும் அவமானமோ அசிங்கமோ இல்லை, குழந்தைகளின் பிஸினெஸ் சென்ஸை தூண்டிவிடுவதின் மூலமும்  நாம் அவர்களின் எதிர்காலத்திற்க்கு பெரிய உபகாரம் செய்தவர்கள் ஆவோம் என்ற என்ற பல உயர்ந்த கருத்துகள் நம்மை அறியாமலே ஆழ வேருன்றி விடும். இதனாலேயே வேளச்சேரியில் இருக்கும் எங்கள் ஆபிஸில் பலர் தலைக்கு மேல ஒரு ஒளிவட்டத்துடன் அலைவதை பார்க்கலாம்.

எனக்கும் அகில் ஒரு நல்ல பிஸினஸ் மேனாக வருவான் என்ற எண்ணம் உண்டு – அழகாக பேரம் பேசுவது, அனைவரையும் வேலை வாங்குவது, தட்டிக் கொடுத்து பாராட்டுவது (நான் அவனை பாராட்டுவதை விட அவன் என்னை பாராட்டுவதே அதிகமாக இருக்கும், “இன்னைக்கு டிபன் நல்லா பண்ணி இருக்கியே, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு, சீக்கிரம் வந்துட்டியே” இது போல பல), நல்ல ஹுமர் சென்ஸ் என பல சொல்லலாம். அவனுக்கு இப்போதிலிருந்தே நல்ல எக்ஸ்போஷர் கொடுக்க வேண்டும் என்றும் ஆசை.

இரண்டு நாட்களாக பீச் கடை ஐடியாவை நன்றாக யோசித்து கொண்டு இருந்தோம். எதையாவது சமைத்து எடுத்துக் கொண்டு போய் விற்பது ரூல்ட் அவுட். விஜயின் பன்ச் டையலாகை போல – ஒரு தரம் சமைச்சுட்டேன் என்றால் என் சமையலை நானே சாப்பிட முடியாது, இதுல எங்கே இருந்து வேறு ஒருவருக்கு விற்பது? ஏதாவது சாமான்களை விற்பது – அதில் பெரிய திரில் ஒன்றும் இருக்க முடியாது நாம் செய்தோம் என்று கொண்டாட முடியாது… காத்தாடி போல ஏதாவது நாமே செய்து விற்கலாம் –  அகிலினால் பெரியதாக அதில் ஒன்றும் உதவி செய்ய முடியாது இன்னும் கிராப்ட்ஸ் செய்ய வயது வரவில்லை அதற்க்கு – அவனை இதை செய்யாதே, அதை செய்யாதே டார்ச்சர் செய்வது போலதான் ஆகிவிடும்… (அதில் ரொம்ப உடம்பு வணங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொல்லுவேன் என்று நினைத்தீர்களா என்ன?)

கடைசியாக ஒரு ஜூஸ் கடை போடலாம் – சாதா ஜூஸ் இல்லாமல் – ஒரு ஸ்பெஷல் ரெசிபி கண்டு பிடித்து செய்தால் என்ன? ரொம்ப வேலையும் வாங்காது, விற்பனையும் சுலபமாக இருக்கும்…  மிக்சிங் வேலைதான், ஐஸ் மற்றும் தேவையான பிற பொருட்களை ஏற்பாடு செய்தால் போதுமானது. நல்ல குவாலிட்டியுடன் சுவையானாதாக அமைந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, கொஞ்சம் மூளைபுயல் (அட பிரயின் ஸ்ட்ராம் தாங்க) செய்து ஒருவாறு ஏற்ப்பாடு பண்ணி இருக்கின்றோம். சேம்பிள் டெஸ்ட் பண்ணுவதற்க்கு காய்கறி கடைக்கு சென்றால்தான் தெரிகிறது நாட்டின் விலைவாசி நிலைமை- ஒரு அம்பது பைசா சைஸ் கூட இல்லை அந்த எலுமிச்சம் பழம் 4 ரூபாயாம்… அடப்பாவி இதெல்லாம் வாங்கி பிஸினெஸ் செய்ய முடியாது, ஒன்றை வாங்கி மியூசியத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும் போல இருக்கின்றது… நேற்றைக்கு நாங்கள் செய்த சேம்ப்ளிலில் ஒரு மாதிரி ஜூஸ் டேஸ்ட் வந்து விட்டது. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்தால், ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்ற ரேஞ்சுக்கு போய்விடுவது உறுதி. நாங்கள் செய்ய போகும் ஜூஸின் பெயர் — சர்ப்ரைஸாக வைக்கலாம் என்று வைத்து இருக்கின்றோம் 🙂

ரெசிபி ரெடி, மூன்று வேலையாட்கள்,முதலாளிகள், பார்ட்னர்கள்- அகில், ஒரு நண்பன், நான் (நீங்க 9 பேர் என்று நினைச்சீங்களா என்ன?) ரெடி,  இன்னும் செய்முறை சாமான்கள் உஷார் செய்ய வேண்டும், பிளாஸ்டிக் கப்ஸ், ஸ்ட்ரா போன்றவை வாங்க வேண்டும், பல வேலைகள் இருந்தாலும் ஜாலியாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.  ஒரு ஐம்பது கப் விற்ப்பதற்க்கான மூலப் பொருட்கள் வாங்கி வைக்கலாம் என்று இருக்கின்றோம். மொத்தம் விற்று தீர்ந்தால் ஷேமம், இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் ஜூஸ் தான் சாப்பாடு ஒரு வாரத்துக்கு 🙂

நீங்கள் அனைவரும் திரளாக திரண்டு, உங்கள் சுற்றம் மற்றும் உறவினரோடு கொட்டிவாக்கம், திருவான்மையூர் – குப்பம் ரோட் பீச்சுக்கு வந்து எங்கள் ஜூஸை காசு கொடுத்து வாங்கி குடித்து (பின்னே நாங்க பிஸினெஸ் பண்ணறோமாக்கும்) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழமாறு கேட்டுக் கொள்ளுகிறோம் 🙂 இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஒரு ஐந்து மணிவாக்கில் பீச்சில் காற்று வாங்கிக் கொண்டே ஜூஸ் குடிக்கற சுகத்தை வார்த்தையில விவரிக்க முடியாதுங்க, அனுபவிச்சுத்தான் பார்க்கனும். பீச் ரோட் ரொம்ப சின்னதுதான், எங்க கடையை மிஸ் பண்ணற அளவிற்க்கு அங்கே ஒன்னும் பெரிய டிஸ்ட்ராக்ஷன் கிடையாது – அப்போ அப்போ அள்ளித் தெளித்தாற்ப்போல அங்கே வரும் ஃபஷனபிள், கலர்ஃபுல் மற்றும் அதி நவீன….. கார்களை தவிர. (நீஙக வேற ஏதாவது நினைச்சா நான் பொறுப்பா?)

ஜெயா.

Advertisement