சாதாரணமாக உங்கள் குழந்தை என்ன ஆகவேண்டும் என்பதை சின்ன வயதிலிருந்தே உட்புகுத்துங்கள், கருவில் இருக்கும் போதே கூட டிரைன் பண்ணலாம் என்று சொல்லுவார்கள். ஏம்பா, கருவில் இருக்கும் குழந்தை நான் இதுவாக போகிறேன் என்று சொல்லுமா என்ன? நம்ம ஆசையை அது மேல திணிக்க வேண்டியது தான்… நீ ஒரு கிரிக்கெட்டரா வரணும், டாக்டராகி ஊருக்கு வைத்தியம் பண்ணனும் என்பது எல்லாம் நம்மளளோட பயாஸ்க்கோப் ஆசைதானே… குழந்தைக்கே விவரம் தெரியும் வயதில தான் அது என்ன ஆக வேண்டும் என்று அதனால் யோசித்து முடிவு எடுக்க முடியும்… ஆனா அந்த வயசு வர்றத்துக்குள்ளே நாம அதை ஒரு பத்து கிளாஸ்ல சேர்த்து, ஒரு பக்கம் விளையாட்டு, ஒரு பக்கம் இசை, ஒரு பக்கம் மூளை வேகமா செயல் படற கிளாஸ் என்று அதை நாலா பக்கமும் பிய்ச்சு எடுத்துடுவோம்… சோ அதோட சுதந்திரத்தை பறிச்சு, நம்ம இஷ்டத்தை தான் அது மேல திணிக்கிறோம்.  எனக்கு குழந்தைகள் இதைத்தான் பண்ணனும் என்ற ஆசை இல்லை, எது அதுக்கு இஷ்டமோ அதை செய்யட்டுமே என்ற எண்ணம் தான்…

என்னதான் சொன்னாலும் உள்மனசின் ஓரத்தில நம்மால நிறைவேற்றிக்க முடியாத ஆசைகளை மூட்டை கட்டி வைச்சு இருப்போம் இல்லையா, அதுல ஒன்னு ரெண்டு என்ன என்றால்…  அகிலை ஒரு பாடகனாக்க வேண்டும். நல்ல கர்னாடிக் இசை சொல்லிக் கொடுத்து பாட வைக்க வேண்டும், கூடவே இரண்டு வாத்தியங்களை வாசிக்கவும் பழக்க வேண்டும். பிரி.கே.ஜி லெயே பாட்டு கிளாஸில் கூட சேர்த்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் ஒரு கட்டத்திற்க்கு கிளாஸ் போர் அடிக்கிறது என்று அழ ஆரம்பிக்கவும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன். பிஸினெஸ் மேன் ஆக்கும் ஆசைதான் உங்களுக்கே தெரியுமே… இப்போதைக்கு லிஸ்ட்டில் இன்னொன்று சேர்ந்து இருக்கின்றது – சைன்டிஸ்ட் ஆக்குவது. இப்போது கெமிஸ்ட்ரியில் நோபில் பிரஸ் வாங்கி இருக்கும் ராமகிருஷ்னன், தாமஸ், மற்றும் அடா அவர்களின் கண்டு பிடிப்பை பற்றி படித்ததும், மருத்துவத்திற்க்காக பரிசு வாங்கி இருக்கும் எலிசபெத், கேரோல், மற்றும் ஜேக்  அவர்களைப் பற்றி இந்த வார ஜூனியர் விகடனில் படித்ததும் தான் இந்த ஆர்வகோளாற்றிக்கு காரணம் (பின்னே நமக்கு எல்லாம் சாதாரணமாவே இப்படி தோணுமா என்ன?).

நிஜமாகவே இந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி படித்துக் கொண்டே இருப்பார்கள். தினமும் அதையே தின்று, அதனுடனே தூங்கி, அத்துடனே வாழ்க்கை நடத்துவார்கள். ஒவ்வொரு நாள் கண்டுபிடிப்பும் முழு கண்டுபிடிப்பை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு சின்ன படியாக இருக்கும், இப்படியாக வாழ்க்கையின் இன்றியமையாத விஷயமாக ஆகி விடும் அவருடைய கண்டுபிடிப்பு. அது வெற்றிகரமாக முடிவதோ இல்லை ஒன்றிற்க்கும் பிரயோஜனமில்லாமல் போகுமோ அது அடுத்த விஷயம்… பேசாமல் அகிலை ஒரு விஞ்ஞானி ஆக்கிவிட்டால் என்ன? இந்த கிளாஸுக்கு போ அந்த கிளாஸுக்கு  போ என்று அவன் உயிரையும் வாங்க வேண்டாம் 🙂 ஸ்ஸ்ஸ்ஸ் இப்பொதைக்கு நம்ம ஊர்ல விஞ்ஞானி ஆக்க கிளாஸ் எதுவும் இல்லை.

ஆகவே பிற்காலத்தில் அகில் என்று ஒரு இந்தியர்/தமிழர் நோபல் பிரைஸ் வாங்கினா என்னையும் இந்த பதிவையும் நினைச்சுக்கோங்கப்பா…

அனன்யா/அசின் கதை என்ன என்று கேட்கிறீங்களா… மருத்துவமனையில் இருந்து வீடு வந்து பார்த்தா எங்க அம்மா ஒரு கிலோ பாதாம் பருப்பை ஊற வைத்து இருந்தாங்க. சரி பெண் குழந்தை பிறந்ததை கொண்டாட பாதாம் கீர் பண்ணப் போறாங்களோ என்று பார்த்தா, இல்லையாம், குழந்தையோட நிறம் நல்லா வர்றத்துக்காக பாதாம் பருப்பு, குங்கும பூவையும் சேர்த்து மாவு அரைச்சு குளிப்பாட்ட போறாங்களாம்… அடடா ஏற்கனவே குழந்தை என்னைப் போல லட்சனமா இருக்கா (ஹ்ம்ம் சரி சரி…), இன்னும் அசின் / தமன்னா கலருக்கு ஆக்கிட்டாங்க என்றால் சொல்லவே வேண்டாம் போலவே…

ஆனந்த விகடன் அட்டை படத்தில அனன்யா படம் பார்த்தாலும்…. இதே பதிவை நினைச்சுக்கோங்க 🙂 🙂

ஜெயா.