வர வர அகிலின் அட்டஹாசங்களை தாங்க முடிவதில்லை, தினம் ஒரு புதிய குறும்பு செய்கிறது. சில நாட்களாக நடந்து வரும் அராஜகம் என்ன என்றால் – எங்கு பார்த்தாலும் மூச்சா போய் வைப்பது. ஒரு நாள் டிரஸ்ஸிங் டேபிளின் ட்ராயரை திறந்தால் ஒரே நாற்றம் என்னடா என்று பார்த்தால் அறுந்த வால் ட்ராயரை திறந்து மூச்சா போய் வைத்து இருக்கிறது. வேறு என்ன செய்வது, எடு ஒவ்வொரு சாமானாய்… வெளியே எடுத்து கழுவி காய வைத்து மறுபடி அடுக்கி வை…

அகில் அப்பா எப்படியாவது இந்த வீட்டை ஒரு ஒழுங்கு செய்ய வேண்டும் என்று, தோய்க்க வேண்டிய துணிகளை போட்டு வைப்பதற்க்காக ஒரு மூடியுடன் கூடிய பெரிய ப்ளாஸ்டிக் கூடை வாங்கி, அதை பாத்ரூமில் வைத்து, அதில் தண்ணீர் போகாமல் இருக்க ஒரு பெரிய கவரை போட்டு பந்தோபஸ்த்து செய்து வைத்தால் மூன்றாம் நாள் அதிலிருந்து நாற்றம் – தலைவர் கைங்கர்யம்தான்.. எடு கவரை, துணிகளை இரண்டு தரம் அலசி போடு.

சிறிது நாட்களாக திறக்காத பால்கனியிலிருந்து நாற்றம். வீடு காலி செய்யும் போது பயன்படுத்திய பெட்டிகளை போட்டு வைத்திருந்த மூலையில் மூச்சா காய்ந்தும் காயாத தோற்றம், மூக்கை மூடும் நாற்றம். தண்ணீர் விட்டு அலசு மொத்த பால்கனியையும்.

இப்படி இங்கே அங்கே என்று இல்லாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் மூச்சா போய் வைக்கிறது. இதில் பாதியை அதனை கூப்பிட்டு அதட்டாமல் சைலன்டாக கிளீன் செய்து இருக்கின்றோம், கூப்பிட்டு பெரிய பஞ்சாயத்து வைத்து இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்லி புது புது ஐடியாக்களை நாமே எதற்க்கு கொடுத்து வைப்பது என்ற பயத்தில்தான். மற்றபடி சாதாரணமாக பேசும் நேரங்களில் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன், மூச்சா வந்தால் போவதற்க்குத்தான் வீட்டில் பாத்ரூம் கட்டி இருக்கின்றது, அங்கே தான் போக வேண்டும் என்று. பாத்ரூமில் போனால், போவதற்க்கான நேரத்தை தாண்டி, ஹேண்ட் ஷவரை திறந்து தண்ணீரை வீணடிப்பது, பிளஷ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஒரு டேங்க் தண்ணியை காலி செய்வது என்று வேறு விதமான லூட்டிகள்.

அகில் அப்பாவோ, நாங்க சின்ன வயசா இருக்கும் போது இதை விட லூட்டி அடித்து இருக்கிறோம், மொட்டை மாடியில் இருந்து மூச்சா போகும் போது கீழே ஒரு வயசான வழுக்கைத்தலை தாத்தா வந்து உட்கார, ஊரே ரணகளம் ஆனது, இதையெல்லாம் பெருசா கண்டுக்காதே என்றுதான் அட்வைஸ் செய்கிறார்.

மூச்சா போவதோடு நிறுத்திக் கொண்டதே என்று எனக்கும் மனசுக்குள் ஒரு அல்ப சந்தோஷம்…

ஜெயா.