சளி வந்தால் குழந்தைகளுக்கு கஷ்டமாக இருக்கும், ஆனால் அகிலுக்கு சுகமா இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா, ஜலதோஷம் பிடித்தால் தானே மூக்கில் இருந்து சளி வழியும்.. வழியும் சளியை நாக்கால் நக்கலாம். சளி கட்டியாக மூக்கில் ஏடாக படிந்து இருந்தால் சுகமாக ஆள் காட்டி விரலை உள்ளே விட்டு ஏதோ புதையலை தேடி எடுப்பது போலகுடை குடைஎன்று குடையலாம். அதையும் மூடு நன்றாக இருந்தால் வாயில் போட்டு சாப்பிட்டு விடலாம்….

என்னடா இப்படி எழுதுகிறார்களே, என்ன ஒரு கெட்ட பழக்கம், இதை நிறுத்து, இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என்று அறு அறு என்று அறிவுரை அல்லவா கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? என்ன செய்வது அப்படி செய்யத்தான் கையும் வாயும் பரபரக்கிறது. ஆனால் சிறு வயதில் எனக்கும் அந்த பழக்கம் இருந்தது … அப்புறம் குழந்தையை எந்த விதத்தில கண்டிப்பது?

காந்திஜியின் கதைதான் ஞாபகம் வருகிறது, அவராவது அடுத்த வாரம் வா, சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பின் உன் குழந்தைக்கு அறிவுரை சொல்லுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார், நடந்து முடிந்து விட்ட ஒரு விஷயத்தை பற்றி நான் என்ன செய்து குழந்தையை திருத்துவது? ஆகவே வழக்கம் போல பாதி நேரம் கண்டும் காணாமல் இருப்பது போல நடந்து கொள்ளுகிறேன். ஆனாலும் ஒரு பொது நடைமுறை என்று ஒரு கண்றாவி இருந்து தொலைகிறதே, அதற்க்காக அவனிடம் அகில் இதைப் போல யாரும் செய்ய மாட்டார்கள், அது பேட் மேனர்ஸ், யாரும் இல்லாத போது வேண்டுமானால் எப்போதாவது செய்து கொள்.. என்று ஒரு வரைமுறை கொடுத்து இருக்கிறேன், எதற்க்கு என்று தெரியாமல் குழந்தையும் ஒத்துக் கொண்டு இருக்கிறது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கீறீர்கள்? நாம் செய்த அதே காரியங்களை குழந்தைகள் செய்யும் போது நாம் பெரியவர்களாகி கண்டிக்க வேண்டுமா, இல்லை நம் குழந்தைதானே என்று விட்டு விடுவதா? அடுத்தவர்களிடம் நம் மரியாதை நிலைக்க வேண்டும் அல்லது இது நல்ல பழக்கம் இல்லை என்று  நிறுத்த சொல்ல வேண்டுமா?

என்னடா இதை போய் ஒரு விஷயமாக பேசிக் கொண்டு இருக்கீறீர்கள் என்று நினைக்கீறீர்களா, அப்படி என்றால் நீங்கள் இந்த பதிவலைக்கு புதிதாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், முதல்லில் வரலாற்றை தெரிந்து கொண்டு வந்துவிட்டு திரும்பவும் இதையே படிக்கவும் 🙂

ஜெயா.