அகிலுக்கு ஒரு வாரமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, குழந்தை பல்லை தேயோ தேய் என்று தேய்த்துக் கொண்டு இருக்கின்றது…

காலையில் ஒரு 15 நிமிஷம் தேய்க்கிறது… கூடவே பாட்டு… பிரஷ்ஷையை வாயில் வைத்துக் கொண்டு ஆஆ ஊ ஊ என்று சத்தம் வேறு. ஒரு நாள் பள்ளி முடிந்து வந்து ஒரு தரம் தேய்க்கிறேன் என்று அரை மணி நேரம் விடாமல் தேய்த்தது… சாயங்காலம் தேய்க்கிறேன் என்று வேறு அலும்பல் செய்தது, ரொம்ப கஷ்டப்பட்டு தடுத்தேன். இரவு தூங்கும் போதும் அதுவே கேட்டு தேய்க்கிறது. முன்னாடி எல்லாம் என்னிடம் பேரம் பேசிக் கொண்டு இருக்கும் – வாய் கொப்பளித்து விட்டு பால் குடிக்கேறேன், குடிக்கும் போது பல் தேய்க்கிறேன் என்று மேலும் பேட்டரி மூலம் தானாகவே இயங்கும் பிரஷ்ஷை வேறு வாங்கி தந்திருந்தேன் பல் தேய்ப்பதற்க்காக. ராத்திரி நாங்கள் பல்லை தேய்த்தால் விடிகாலை அடை மழைதான்…

என்ன காரணமாக இருக்கும் என்று நானும் என் பல்லை சாரி முளையை தேய்த்து பார்த்த போது அவன் நடனப் பயிற்சி பள்ளியில் இலவச பற்சோதனை கேம்ப் நடக்கப் போகிறது என்று வந்த எஸ் எம் எஸ் ஞாபகம் வந்தது. அப்புறம்தான் என் அம்மாவிடம் விசாரித்த போது – ஆமாமடி, ஏதோ ஒரு ரிப்போர்ட் தந்தார்கள் இங்கே எங்கேயோ தான் வைத்தேன்… எடுத்து தருகிறேன் என்றார்கள். “கஷ்டபடாதே அம்மா, விட்டு விடு நமக்குதான் சூப்பர் ரிசல்ட் இங்கேயே கிடைத்துவிட்டதே… அதை பார்த்து என்ன பெருசாக செய்து விட போகிறோம் ”

கரெக்ட்தானே?

ஜெயா.