நகரும் உலகம்…

2 Comments

இத்தனை நாட்கள் அனன்யாவை சுற்றி நாங்கள்தான் நகர்ந்து கொண்டு இருந்தோம், இன்றையிலிருந்து அன்னாரும் நகர ஆரம்பித்து விட்டார்கள்… ஓரிரு வாரமாக சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்த குழந்தை இப்போது மெதுவாக நகர ஆரம்பித்து இருக்கிறது. முட்டி போட்டு இடுப்பை வெற்றிகரமாக தூக்கி  முன்னாடி உந்தி தவழ ஆரம்பித்தும் ஆயிற்று இன்றிலிருந்து. ஒரு பத்து நாட்களில் அது பிரயாசையின்றி நடக்கும் ஒரு விஷயமாகி விடும்.

கொஞ்ச நாட்களாக உள்ளே ஒரு யோசனை ஓடிக் கொண்டு இருந்தது ஆறு மாதம் ஆகிவிட்டதே, இன்னும் தவழ ஆரம்பிக்க வில்லையே, இன்னும் நாளாகுமோ என்று. நல்லவேளையாக இனிதே துவங்கிவிட்டார்கள். இன்றிலிருந்து ஒருவர் பின்னே ஓடுவதோடுஅல்லாமல் இருவர் பின்னே ஒட வேண்டிய காலம் துவங்குகிறது 🙂

ஜெயா.

அலையின் முடிவு…

2 Comments

அகிலும் நானும் வாரக்கடைசியில போய் கடலில் குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம்… அடிக்கடி பார்த்து பார்த்து அலையின் பல்வேறு முகங்கள் எங்களுக்கு பரிச்சயமாகி விட்டது. நேற்று அலைகள் அதிகமாகவும் சீக்கிரமாகவும் வந்து  கொண்டு இருந்தது.

“அகில், இன்னைக்கு என்னவோ அலைகள் அதிகமாக வருவது போல இருக்குது இல்ல?”

“அது ஒன்னுமில்லை அம்மா, இன்னைக்கு லீவு நாள் இல்லை, எல்லாரும் பீச்சுக்கு வருவாங்க, அவங்க எல்லாரும் நிறைய வர்ற அலையை பார்த்தா சந்தோஷமாகி விடுவாங்க, அவங்கள் சந்தோஷபடுத்தலாம் என்றுதான் அலைகள் அதிகமாக வருது…”

என்ன ஒரு விளக்கம்? சந்தோஷமாக அலைகளில் உள்ளே சென்று ஆடி குளித்த்தது, கொஞ்சம் பயமாக இருந்தாலும் நிறைய கூட்டம் இருக்கவே தைரியமாக நின்று கொண்டு இருந்தோம். முதலில் அலைகளை கட்டைகளை போல எண்ணி தாண்டி குதித்து கொண்டும், பின்னர் அலைகளை எதிரிகளாக்கி சண்டை போட்டு விளையாடியது. இரண்டு கொரிய சிறுவர்கள் ரொம்ப தூரம் அலைக்குள் சென்று ரசித்து விளையாடினார்கள்… சீக்கிரமாக ஸ்விம்மிங் கிளாஸில் சேர்த்து நம் குழந்தைக்கும் நன்றாக நீச்சல் அடிக்க சொல்லிக் கொடுக்கவேண்டும்…

ஜெயா.

முதல் வார்த்தை…

Leave a comment

அனன்யா முதல் வார்த்தை பேசி விட்டதா என்று ஆச்சர்யபடவேண்டாம், தினம் ஒரு டிராமா நடக்கும் எங்கள் வீட்டில் அதுதான் இப்போதைக்கு பாவமான ஜீவனாக இருக்கிறது…

நேற்றைக்கு நானும் அகிலும் அடையார் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, பிக் பாய் என ஒரு கடையில் போர்ட் தொங்கிக் கொண்டு இருந்தது… அதை எழுத்து கூட்டிய அகில் ப இ க , ப ஆ ய் என படித்து, இரண்டாவது வார்த்தையை மட்டும் சேர்த்து பாய் என படித்தது 🙂 பொனடிக்ஸ் முறையில் பள்ளியில் சொல்லிக் கொடுப்பதால் b o y என எழுத்து கூட்டாமல் ba a ya என்று பிரித்து பாய் என படித்துக் காட்டினான். ஏற்க்கனவே பள்ளியில் படித்து இருந்த வார்த்தையாக கூட இருக்கலாம், ஆனால் நான் பார்த்து பள்ளி புத்தக சூழல் அல்லாது, அதுவே படித்த  முதல் வார்த்தை என்ற காரணத்தால் அது வரலாற்றில் இடம் பிடிக்கிறது 🙂

ஜெயா.

ஸ்பெஷல்.. சாதா..

Leave a comment

எங்கே இருந்து கற்றுக் கொண்டது என்று தெரியவில்லை, நேற்றையிருந்து அகில், எந்த ஒரு சண்டை அல்லது கோபம் வந்தாலும், நீ என்ன ஸ்பெஷல் கேர்ளா என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது. நேற்றைக்கு நான் கார்ட்டூன் சேனலில் இருந்து வேறு சேனலுக்கு மாற்றிய போது அருகில் வந்து, “நீ என்ன ஸ்பெஷல் கேர்ள்ளா, சேனல்லை எப்படி நீ மாற்றலாம்” என்று கேட்டு ரிமோட்டை வாங்க வந்தது. பின்னர் அது ஒரு பெரிய சண்டையாகி, என்னை அடித்து, பின்னர் அது அழுது, (டேய் அடி வாங்கியது நான், நாந்தான் அழுவனும்…) ஸாரி கேட்காமல் பக்கத்து ரூமில் சென்று படுத்துக் கொண்டு, காலையில் எழுந்து வந்தும் அரைமணி நேரம் வீம்பு பிடித்து அப்புறம் மாடிக்கு விளையாட போவதற்க்காக சாரி சொல்லி சமாதானம் ஆகியது ஒரு தனி கதை.

பின்னர் இன்று காலையில் கூட, ஏதோ ஒரு விஷயம் செய் என்று சொன்னவுடன், நீ மட்டும் என்ன ஸ்பெஷல்? என்று பதில் கேள்வி கேட்கிறது.

எல்.கே.ஜி பையனை வளர்க்கிறோமா இல்லை டீன் ஏஜ் பையனை வளர்க்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது 😦

ஜெயா.

பெரிய பதிவுகளை எழுத ஆரம்பித்தால் முடிக்கவே முடிவதில்லை.. இந்த மாதத்திலேயே ஒரு ஐந்தாறு அவ்வாறாக பாதி எழுதி நிற்க்கிறது. என்றைக்கு வேர்ட்பிரஸ் காறி துப்பபோகிறது என்று தெரியவில்லை.. இதற்க்கு மேல அனுமதிக்க முடியாது என்று.. சரி சின்ன பழைய போஸ்ட்டுகளுக்கே போய்விடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறேன், அப்போதாவது அடிக்கடி எழுத முடிகிறதா என்று பார்ப்போம்.