பிரச்சனையை தீர்க்க…

Leave a comment

அகிலுக்கு ஹாங்காங் toysrus கடையில் நடையோ நடை என நடந்து இங்கு இல்லாத டாய்ஸாக பார்த்து வாங்கினோம். சைனீஸ் காத்தாடி, பெரிய பபுள் விடும் பாட்டில், கேஸில் செட், வேர்ட் பில்டர் என இரண்டு பை நிறைய. வாங்கும் போதே சொல்லித்தான் வாங்கி தந்தேன், அடேய், எல்லா சாமான்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எதையும் தொலைக்கவோ இறைத்தோ போட கூடாது என்று. வாங்கும் வரை என்ன சொல்லும் குழந்தை, கண்டிப்பா அம்மா, பத்திரமா வைச்சுப்பேன் அம்மா என்று தலை மீது அடிக்காத குறையாக சத்தியம் செய்தது…

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள் மொத்தம் தரையில். எடுத்து வையடா என்று கெஞ்சி, கொஞ்சி இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பிரயோஜனமில்லை. உடனே அவன் பெரியம்மா என்ன செய்தாள், “சரி நீ எடுத்து வைக்காதே, நானே எடுத்து வைக்கிறேன், ஆனால் ஷெல்ஃபில் இல்ல, பரணை மேல்… மறந்துவிடு இனிமேல் உன்னுடைய பொம்மைகளை” என்று சொல்ல, அப்போதும் நகர வில்லை உதவி செய்யவோ இல்லை அவனாகவே எடுத்து வைக்கவோ… என்ன அழுத்தக்கார கட்டையாக இருக்கிறது என்று எங்களுக்கு மலைப்பு… சரி சொன்னதை நடத்திக்காட்ட வேண்டியது தான் என அவள் எடுத்து பரணை மேல் வைக்க, நான் டி.வி ரிமோட்டையும் புதிதாக வாங்கிய வீடியோ கேம்ஸையும்  எடுத்து என் பைக்குள் போட்டுக் கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினேன்.

அதுவரை அமைதியாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருந்தது, அப்போதுதான் என்ன செய்வது என்று யோசனை வந்தால் போல் ஒரு எஃப்க்ட் கொடுத்து கொண்டு இருந்தது. அப்போது அவன் பெரியம்மா, “சரி இவனுக்கு தன்னுடைய ஒரு தவறை சரி செய்து கொள்ளுவதற்க்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கலாம்… அகில் நீயாக எழுந்து இப்போது ஹாலில் இருக்கும் பொருட்களை ஏறக்கட்டி வைத்து உன்னுடைய சைக்கிளை துடைத்து வைத்தால் அம்மாவை டி.வி ரிமோட்டை என்னிடம் கொடுத்து விட்டு செல்ல சொல்லுவேன், நீ இந்த வேலைகளை முடித்தவுடன் டி.வி. பார்க்கலாம்” என்று சொல்லவும் அதற்க்காகவே காத்திருந்தது போல ஓடிவந்து “சரி பெரியம்மா இதோ செய்கிறேன்” என்று இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்காத மாதிரி பாவனையில் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நானும் ரிமோட்டை வீட்டில் வைத்துவிட்டு ஆபிஸ் சென்று விட்டேன்.

திரும்ப வீட்டுக்கு சாயங்காலம் போனவுடன் பூனைக்குட்டி மாதிரி ஓடிவந்து சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தான். இடையில் “அம்மா, வீடியோ கேம்ஸ் தாயேன், நான் எல்லாம் க்ளீன் செய்து விட்டேன்.. பெரியம்மாவே ஹேப்பி ஆகி டி.வி வைத்தாள்…”

“தரேன் அகில் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசி சால்வ் பண்ணனும் என்று நினைக்கிறேனே..”

“என்னம்மா”

“அம்மா உனக்கு நீ சொல்லுவதை நம்பி டாய்ஸ் வாங்கிதரேன், நீ கடையில கேட்டதுக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு வீட்டுககு வந்து காத்துல பறக்க விட்டுடறையே.. அப்படி பண்ணாமல் இருக்கறதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லு..”

“திட்டலாமா?” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு

“திட்டறதா… அது எல்லாம் எனக்கு பிடிக்காதுப்பா…” திட்டற வார்த்தைகளை நீ சொல்லறயா? நான் சொல்லட்டும்மா?

“ம்ம்ம் அடிக்கலாமா?”

“திட்டறதே எனக்கு பிடிக்காது.. அடிக்கறது எல்லாம் சுத்தம.. நான் அடிக்க மாட்டேன்பா…” நல்லா நாலு வைச்சு வாங்கலாம் என்றுதான் தோணுது என்ன பண்ணுவது…

“சொல்லி சொல்லி பார்க்கலாமா?” வாடா என் சொகுசு மகனே

“எத்தனை தரம் தான் சொல்லறது? காலையில எவ்வளவு தரம் சொன்னோம், கேட்டியா நீ?” அப்ப்டி வாங்க சார் வழிக்கு..

அதற்க்குள்  கூட இருந்த குட்டியம்மா ஏதோ பேச முயற்சி செய்ய, நானும் அதை கொஞ்சுவதாக, “அகில், பாப்பா ஏதோ சொல்லுதுடா.. என்ன என்று கேளு..”

உடனே பாப்பா அருகில் காதை கொண்டு வைத்து… ” அம்மா இதை நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கலாம் .. இப்போ பேச வேண்டாம் என்று சொல்லுதுமா…

அடப்பாவி என்ன ஒரு சமயோஜிதமான பதில். என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.. சிரித்து முடித்துவிட்டு, “சரி  இப்போ தருகிறேன், இனிமேல் ஒருதரம் சொல்லும் போதே எடுத்து வைத்துவிட வேண்டும் ஓகேயா?”

“ஓ ஓ ஓ ஓ கே அம்மா…

அப்புறம் வீடியோ கேம்ஸை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தது. இன்னும் பரணையில் இருக்கும் சாமான்களை கீழே இறக்காததால் திரும்ப  இரைத்து போடும் சூழ்நிலை நேரவில்லை.. அடுத்த தரம் இந்த பொறுப்பில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகிறது என்று பார்க்க எனக்கே ஆசையாக இருக்கிறது. 🙂

ஜெயா.

ஹாங்காங் பயண அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றது, இது அதை விட சுவாரசியமாகவும் சின்னதாகவும் இருந்ததால் இதை எழுதிவிட்டேன்.

சுற்றுலா சுறுக்கம்

2 Comments

முதன்முதலாக சென்ற வெளிநாட்டு சுற்றுலாவின் சுறுக்கமாக உங்களுக்கு தெரிவிப்பது என்ன என்றால்:

  • இங்கே போட முடியாத டிரஸ்கள் அனைத்தையும் அங்கே போட்டு தீர்த்தாயிற்று
  • புதிதாக வாங்கிய செருப்பை அங்கே நடந்து நடந்து தேய்த்தாயிற்று
  • தங்கிருந்த ஹோட்டலில் இந்த வருடத்திற்க்காக வாங்கி வைத்திருக்க கூடிய பாத் ஃபோமில் பாதியை நாங்களே தீர்த்தாயிற்று
  • ஹாங்காங்கில் அங்கே இருப்பவர்களுக்கே வழி கூறும் வரைக்கும் தெரு தெருவாக சுற்றியாயிற்று
  • ஒரு வளரும் போட்டோகிராபர் ஆக மாறி அகில் என்னை போட்டோ எடுக்க, அவனை என்று அனைத்து லொக்கேஷனிலும் நின்று போட்டோ எடுத்தாயிற்று.
  • வீட்டுகாரர் வேலைக்கு சென்றுவிட, நாங்கள் இருவரும் ஊர் சுற்றுகிறோம் பேர்வழி என மெட்ரோ, பஸ், ட்ராம், கப்பல் என அனைத்திலும் கால் தடம் பதித்தாயிற்று.
  • விமான நிலையத்தில் இறங்கும் போது எடுத்த மேப்பை நாங்கள் திரும்ப வரும் போது துண்டு துண்டாக கிழித்தாயிற்று..

விமான நிலையத்தில் அலுவலர்களின் எங்களை தனியாக கவனித்தது, மழையில் நடந்த திக் திக் அனுபவங்கள், தொலைந்து கண்டு பிடித்து, என பல சுவாரசியமான சம்பவங்களை அடுத்து அடுத்து எழுதுகிறேன். இது வெறும் துவக்கம்தான் 🙂

ஜெயா.

ஐ.பி.எல்க்கு அவமானம்!

2 Comments

காலையில் அகிலை சீக்கிரமாக எழுப்பவும் தொந்தரவு இல்லாமல் பள்ளிக்கு கிளப்பவும் தினமும் போராடிக் கொண்டு இருந்த நான், எப்படிடா இந்த பிரச்சனையை தீர்ப்பது என்று மண்டையை உடைத்து கொண்டு இருந்த போதுதான் உதயமானது எங்கள் கிரிக்கெட் விளையாட்டு. சூரியன் மேலே வந்த பிறகும் கூட கண்ணை பிரிக்க முடியாமல் கஷ்டபடும் குழந்தை அகில் பேட் பால் விளையாட வரலையா என்றவுடன், பக்காவாக எழுந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தது.

அகில் எழுந்தவுடன் பல்லை தேய்த்து பாலை குடித்தவுடன் மாடிக்கு சென்றால் ஒரு அரை மணி நேரம் விளையாடி, பெரிய முள் மூன்றை தொட்டவுடன் கீழே இறங்கி மற்ற வேலைகளை செய்து பள்ளிக்கு அப்பாவுடனே சென்று விடுகிறது. சரியாக அந்த சமயத்தில் தான் ஐ.பி.எல் மேட்சுகளும் நடந்து கொண்டு இருந்ததால், அலுவலகத்தில் எல்லோரும் டிக்கெட் புக் செய்யும் போது அகிலுக்கும் எனக்கும் டிக்கெட் வாங்கினேன்.

அகிலிடம் சென்று “ஹே அகில் நாம ஐ.பி.எல்லுக்கு போக போறோம்டா…” ஆர்ப்பாட்டமாக சொன்னேன்…

அலட்டிக் கொள்ளாமல் என்னை கேட்டது – “விளையாடவா ? பார்க்கவா ?” என்ன ஒரு நினைப்பு, மொட்டைமாடியில் நாங்க இரண்டே பேர் விளையாடுவது கிரிக்கெட் என்றால், நிஜ கிரிக்கெட்டின் எதிர்காலம்தான் என்ன?

அநியாய சிரிப்பின் இடையே சொன்னேன், ” ஹேய் அகில், ஐ.பி.எல் எல்லாம் பெரியவங்க தான் விளையாடுவாங்க..”

“அப்போ, சரண் அண்ணா நந்தா மாமா எல்லாரும் விளையாடுவாங்களா?” இவர்கள் எங்கள் ஆபிஸில் பணிபுரியும் பெரியவர்கள், அவங்க கேட்டா சந்தோஷப்படுவாங்கதான், ஆனா அதுக்காக ஐ.பி.எல் எல்லாம் கொஞ்சம் டூ அல்ல த்ரீ மட்சு.

“அந்த பெரியவங்க இல்லைடா, தோனி, சச்சின் மாதிரி பெரிய பிளேயர்ஸ்தான் விளையாடுவாங்க, நாம போய் எப்படி விளையாடுறாங்க என்று பார்த்துட்டு வரலாம்டா..”

இருவருமாக போய் வந்தோம் ராஜஸ்தான் ராயல்ஸ் & சென்னை சூப்பர்கிங்ஸ் மேட்சுக்கு. ரொம்ப நன்றாக இருந்தது மேட்ச், எல்லோரும் சேர்மேலே ஏறி நின்று பார்த்ததுதான் கொஞ்சம் எரிச்சல் மூட்டுவதாக இருந்தது… அதிலும் அன்றுதான் முரளி விஜய் சிக்ஸர் மேல் சிக்ஸராக அடித்து ரசிகர்களை சேரின் மேலேயே நில்லுங்கடா என்று சொல்லாமல் சொன்னார். மேட்ச் ஒன்றும் புரியவில்லை என்றாலும் அகில் ஜாலியாக இருந்தது, கொஞ்ச நேரம் எப்போ வீட்டுக்கு போகலாம் என்று கேட்டுக் கொண்டு இருந்ததே தவிர போயே தீர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மறுநாள் எழுந்த போது  நான் மட்டும் அல்ல, அகிலின் தொண்டையும் கத்தி கத்தி புண்ணாகிய காரணத்தினால் ஒரு  டி.டி.எஸ் எஃபெக்ட்டில் தான் பேசிக் கொண்டு இருந்தது.

ஜெயா.

ராஜா யாரோ?

4 Comments

எனக்கும் அகிலுக்கும் இப்போதைய புதிய பொழுது போக்கு செஸ் விளையாடுவது… கொஞ்சம் கொஞ்சமாக ரூல்ஸ் சொல்லிக் கொடுத்து விளையாடிக் கொண்டு இருக்கிறோம். போர் அடிக்குது என்று தூக்கி வைத்து விடாமல் முழு ஆட்டத்தையும் அகில் பொறுமையாக விளையாடுவதே ஆச்சர்யமான வளர்ச்சிதான். அதில் சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்துவதற்க்கு, ஒருவர் காயை ஒருவர் வெட்டி விட்டால், இரண்டு காய்களையும் தரைக்கு மேல் எடுத்து டிஷாங் டஷாங் என்று ஒரு ஃபைட் போட்டு, வெட்டுபட்ட காயினை கீழே போட்டுவிடுகிறோம், எல்லாம் ஒரு பில்ட் அப்புதாங்க 🙂

ராஜாவின் தலையில் இருக்கும் கிராஸை காட்டி இன்றைக்கு அகில் கேட்கிறது என்னிடம் ,”அம்மா, இந்த ராஜா கிறிஸ்டியனா?”

என்ன பதில் சொல்லுவேன் நான்?

ஜெயா.