காலையில் அகிலை சீக்கிரமாக எழுப்பவும் தொந்தரவு இல்லாமல் பள்ளிக்கு கிளப்பவும் தினமும் போராடிக் கொண்டு இருந்த நான், எப்படிடா இந்த பிரச்சனையை தீர்ப்பது என்று மண்டையை உடைத்து கொண்டு இருந்த போதுதான் உதயமானது எங்கள் கிரிக்கெட் விளையாட்டு. சூரியன் மேலே வந்த பிறகும் கூட கண்ணை பிரிக்க முடியாமல் கஷ்டபடும் குழந்தை அகில் பேட் பால் விளையாட வரலையா என்றவுடன், பக்காவாக எழுந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பித்தது.

அகில் எழுந்தவுடன் பல்லை தேய்த்து பாலை குடித்தவுடன் மாடிக்கு சென்றால் ஒரு அரை மணி நேரம் விளையாடி, பெரிய முள் மூன்றை தொட்டவுடன் கீழே இறங்கி மற்ற வேலைகளை செய்து பள்ளிக்கு அப்பாவுடனே சென்று விடுகிறது. சரியாக அந்த சமயத்தில் தான் ஐ.பி.எல் மேட்சுகளும் நடந்து கொண்டு இருந்ததால், அலுவலகத்தில் எல்லோரும் டிக்கெட் புக் செய்யும் போது அகிலுக்கும் எனக்கும் டிக்கெட் வாங்கினேன்.

அகிலிடம் சென்று “ஹே அகில் நாம ஐ.பி.எல்லுக்கு போக போறோம்டா…” ஆர்ப்பாட்டமாக சொன்னேன்…

அலட்டிக் கொள்ளாமல் என்னை கேட்டது – “விளையாடவா ? பார்க்கவா ?” என்ன ஒரு நினைப்பு, மொட்டைமாடியில் நாங்க இரண்டே பேர் விளையாடுவது கிரிக்கெட் என்றால், நிஜ கிரிக்கெட்டின் எதிர்காலம்தான் என்ன?

அநியாய சிரிப்பின் இடையே சொன்னேன், ” ஹேய் அகில், ஐ.பி.எல் எல்லாம் பெரியவங்க தான் விளையாடுவாங்க..”

“அப்போ, சரண் அண்ணா நந்தா மாமா எல்லாரும் விளையாடுவாங்களா?” இவர்கள் எங்கள் ஆபிஸில் பணிபுரியும் பெரியவர்கள், அவங்க கேட்டா சந்தோஷப்படுவாங்கதான், ஆனா அதுக்காக ஐ.பி.எல் எல்லாம் கொஞ்சம் டூ அல்ல த்ரீ மட்சு.

“அந்த பெரியவங்க இல்லைடா, தோனி, சச்சின் மாதிரி பெரிய பிளேயர்ஸ்தான் விளையாடுவாங்க, நாம போய் எப்படி விளையாடுறாங்க என்று பார்த்துட்டு வரலாம்டா..”

இருவருமாக போய் வந்தோம் ராஜஸ்தான் ராயல்ஸ் & சென்னை சூப்பர்கிங்ஸ் மேட்சுக்கு. ரொம்ப நன்றாக இருந்தது மேட்ச், எல்லோரும் சேர்மேலே ஏறி நின்று பார்த்ததுதான் கொஞ்சம் எரிச்சல் மூட்டுவதாக இருந்தது… அதிலும் அன்றுதான் முரளி விஜய் சிக்ஸர் மேல் சிக்ஸராக அடித்து ரசிகர்களை சேரின் மேலேயே நில்லுங்கடா என்று சொல்லாமல் சொன்னார். மேட்ச் ஒன்றும் புரியவில்லை என்றாலும் அகில் ஜாலியாக இருந்தது, கொஞ்ச நேரம் எப்போ வீட்டுக்கு போகலாம் என்று கேட்டுக் கொண்டு இருந்ததே தவிர போயே தீர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மறுநாள் எழுந்த போது  நான் மட்டும் அல்ல, அகிலின் தொண்டையும் கத்தி கத்தி புண்ணாகிய காரணத்தினால் ஒரு  டி.டி.எஸ் எஃபெக்ட்டில் தான் பேசிக் கொண்டு இருந்தது.

ஜெயா.