அகிலின் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் செவ்வனே நடந்து முடிந்தது. பிளாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சில நண்பர்கள் என எங்கள் வீட்டு மொட்டைமாடியில் பார்ட்டி. வரும் போது எல்லோரும் பெரிய கிஃப்ட் வாங்கி வர வேண்டும் என்பது எழுதாத விதி, கிஃப்ட் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய கேக் 🙂 பின்னே ஒரு மோட்டிவேஷன் வேண்டாமா உங்களுக்கும் கூட?

போன வருஷம் கிஃப்ட் கையில் வந்தவுடனேயே அவர்கள் முன்னாலேயே பிரித்து (என்பது டீசன்ட்டான வார்த்தை – சுக்கு நூறாக கிஃப்ட் பேப்பரை கிழித்து என்பது உண்மை) பார்த்து விளையாடிக் கொண்டு இருந்தான், இந்த வருஷம் கொஞ்சம் முன்னேறி அவர்கள் கிஃப்ட் கொடுத்து விட்டு வீட்டுக்கு போன பிறகுதான் பிரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம், ஆனாலும் அகில் வந்தவர்கள் கிஃப்ட்  கொண்டு வந்திருக்கிறார்களா என்று கழுகு கண்ணாக பார்த்துக் கொண்டு இருந்தது, மேலும் ஆதரவு இல்லாமல் இருந்த கவர்களை தானே சென்று எடுத்துப் பார்த்து, இதை நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று அவர்கள் கேட்குமுன்னாலேயே எடுத்து வைத்துக் கொண்டான்.

பார்ட்டி முடிந்தவுடன் தூக்கமும் அயர்ச்சியும் ஆளைத்தள்ளினாலும் எல்லா கிஃப்ட்டையும் பிரித்து பார்த்துவிட்டே தூங்கியது. பின்னர் காலையில் எழுந்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தது, முந்தின நாள் தோழி ஒருத்தியுடன் விளையாடும் போது அவளுடன் பகிர்ந்து விளையாடாததால் ஒரு சொப்பு சாமானை உடைத்து விட்டான். ஆகவே “அகில் நீ ஷேர் பண்ணைக்காம விளையாடி உடைத்து விட்டதால் – இத்தனை சாமானும் பரணுக்கு போக போகுது, போனா போகிறாய், ஏதாவது இரண்டு மட்டும் எடுத்துக்கோ. மித்தது கிடையாது” என்று சொன்னதும் கொஞ்சம் ஃபீல் பண்ண குழந்தை சரி என்று அதற்க்கு தேவையான ஒரு கன் மற்றும் ஒரு ரிமோட் காரை எடுத்து கொண்டு மீதியை மனசில்லாமல் பரண் மேல் வைத்து விட்டான்.

ஒரு வாரம் கழிந்த பின்னர், எனக்கும் பரிதாபமாக இருக்கவே, மேலும் அவனும் எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்து வைப்பதாக உறுதி மொழி கொடுத்து இருப்பதால், ஒரு சாமானை மேலே வைத்தால் இன்னொன்றை எடுத்துக் கொள்ளலாம் என்று ரூலை ரிலாக்ஸ் செய்து இருக்கிறேன். நேற்று அதன் படி ஒன்றை மேலே வைத்து விட்டு ஹாட்வீல்ஸ் எடுத்துக் கொண்டான். ராத்திரி எல்லாம் ஆடிவிட்டு, இன்று காலை “அம்மா, இது விளையாடி போர் அடிக்குது… வேறே எடுத்து தாம்மா..”

“சரி, எல்லாத்தையும் எடுத்து உள்ளே போட்டு மேலே வை,  அடுத்தது எடுத்து தரேன்…”

“எல்லாம் இருக்கு, ரோப் காணோமே..”

“அதையும் கண்டு பிடி, அப்புறம்தான் மேலே வைக்க முடியும்…”

“அது இல்லம்மா,  அது எங்கேயும் போயிருக்காது… எப்படியும் இந்த வீட்லதான் இருக்கும், நாம இந்த வீட்டை காலிதானே செய்ய போறோம், அப்ப கண்டிப்பா கண்டு பிடிச்சுடுலாம்… நாம கொஞ்ச நாள் தானே இந்த வீட்ட்ல இருக்க போறோம், அதனால நீ கவலை படாதே.. வேற சாமான் எடுத்தகலாமே, இதுல என்ன ப்ராப்ளம் உனக்கு?” நல்ல கிழவன் தோத்தான் நீ சோல்லற கதையில…

“அகில், இதோ தெரியுது பாரு, பாப்பா யானை, அதில உன்னை தலை கீழா தொங்க விடட்டுமா??”

“ஆ, என்ன அம்மா?” ஒன்னும் புரியலை அம்மா திடீரென்று ஏன் இதை சொல்லறா என்று

“அடிங் படவா பயலே, மரியாதையா கண்டு பிடிக்கற வேலையை பாரு, இல்ல கொன்னே போட்டுட்டேன்…”

தேட முயற்ச்சி செய்து கொண்டு இருந்து, நான் வெளியே கிளம்பும் போது கண்டு பிடித்தது 🙂 அம்மாவிடம் சொல்லி வேற டாய் எடுத்து கொடுக்கும் படி சொல்லிவிட்டு வந்தேன், இருந்தாலும் அவனுடைய பேச்சை எண்ணும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

ஜெயா.