நேற்று வீட்டுக்குள் நுழைந்தவுடனே அம்மாவின் அறிக்கை – “ஹேய், ஹோம் வொர்க் கொடுத்து இருக்காங்க அகிலுக்கு எழுதிட்டு வரணுமாம்…”

எனக்கோ ஆச்சர்யம், அகிலின் பள்ளியில் வீட்டுபாடம் கொடுக்கும் வழக்கம் இல்லை.. எல்.கே.ஜியில் ஒரு நாள் கூட எழுத தந்ததில்லை, ஒரு மீட்டிங்கில் கூட ஒன்னாம் வகுப்பு வரை நீங்கள் எதுவும் சொல்லித்தர தேவை இல்லை, எங்களை எங்கள் வேலையை செய்ய விட்டால் போதும் என்று சொன்ன ஞாபகம்… அப்படி இருக்க ஹோம் வொர்க்கா என்று அதிர்ச்சி எனக்கு. நோட்டு புத்தகத்தை எடுத்து பார்த்தால் நான்கு வரி நோட்டு – அதில் இரண்டு பக்கதற்க்கு a to g எழுதி தந்து இருந்தனர்.

சரி இவ்வளவுதானா, என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு எழுதி விடலாம் அகில் என்று சொல்லி விட்டேன். அதற்க்கு வேளச்சேரி செல்லும் வேலை வந்ததால், அகில் நான் வெங்கட் என குடும்பமகாக கிளம்பி ஹாட்சிப்ஸில் விலாவரியாக ஊர்கதை பேசிக் கொண்டும்,ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டும் வந்த வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்ப 9.30. மேலே ஏறும் போதே, “அம்மா தூக்கம் வருது…” என ஆரம்பித்தது பாடம்.

“ஹே அகில் ஹோம் வொர்க் செய்துட்டு தூங்கிடலாம், இரண்டே பக்கம்தான், எழுதிட்டு தூக்கி போட்டுடலாம்…”

அரை மனதாக சரி என்று வந்து வீட்டில் செட்டில் ஆனோம். சரி எழுத வேண்டும் என்றால் பென்சில் வேண்டுமே… இதுவரை அதற்க்கெல்லாம் தேவை ஏற்ப்பட்டதே இல்லை என்பதால் அதை தேடும் படலம்… அதிர்ஷடவசமாக நிறைய பென்சில் கையில் தட்டுப்பட்டது… ஆனால் துரதர்ஷடவசமாக எதிலும் ஊக்கு இல்லை…

“ஷார்ப்பெனர் எங்கே அம்மா?”

“எங்கேயோ இருந்ததுடி, இந்த வீட்டில தான் தேடற நேரத்தில் ஒரு பொருள் கிடைத்ததா சரித்திரமே கிடையாதே…”

என்ன பிரயத்தனம் செய்தும் ஷார்ப்பெனர் கிடைத்தபாடில்லை..

“சரி, அகில் இந்தா இந்த பென்சிலை யூஸ் பண்ணிக்கோ, கொஞ்சம் ஊக்கு இருக்கு, இரண்டு பேஜ் தானே எழுதிடலாம்…”

“அம்மா ஒரு பேஜ் நான் எழுதறேன், இன்னொன்னு நீ எழுதறயா?”

“அட படவா பயலே, அதெல்லாம் முடியாது, நீதான் எழுதனும்…” முதலில் இருந்தே, நாம் எழுதி பழக்கம் பண்ணி விடக்கூடாது, அப்புறம் யார் டெய்லி அதை உக்காந்து எழுதறது? நம்ம காலத்திலேயே எழுதிய வழக்கம் இல்லையே…

நாம்  அருகில் உட்கார்ந்து எழுதி பழக கூடாது என்றும் நினைத்து இருந்தேன். அப்புறம் அது ஒரு பழக்கம் ஆகிவிடுமே, அவனையே எழுத வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்

“அகில் நீயே எழுதேன்…”

“எழுதறேன் அம்மா…”

முதலில்  a எழுத வேண்டும், இரண்டு கோட்டுக்கு நடுவே வராமல் எங்கேயோ சென்றது.. அதுவுமில்லாமல் ஒரு முட்டை போட்டு கையை எடுத்துவிட்டு அதற்க்கு வால் போடும் போது முட்டையும் கோடும் சண்டை போட்டுக் கொண்டு தொட்டுக்கொள்ளாமல் எங்கேயோ   அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.. அடடா… இது நினைத்ததை விட கஷ்டமாக இருக்கும் போலவே…

“அம்மா ரப்பர் எங்கேயாவது பார்த்தியா? ”

“எத்தனை பென்சிலில் ரப்பர் இருந்தது… எல்லாத்தையும் இந்த பையன் கடிச்சு வைச்சுட்டான்.. இப்போ ரப்பர் கொண்டா என்றால் எங்கே போவது… தேடிப்பாரு கிடைக்கும் எங்கேயாவது…”

இதை எல்லாம் யோசித்து இருந்தால் பக்கத்து கடை மூடறத்துக்கு முன்னாடியே எழுதி தொலைச்சு இருந்து இருக்கலாமோ… திரும்ப எல்லா பாக்ஸ், ஷெல்ஃபில் தேடி கண்டேன் ரப்பரை…

சரி எடுத்து வந்து அழித்து திரும்ப எழுது …  இரண்டாம் லைனிலும் சரி வரவில்லை.. இப்படியாக அழித்து, எழுதி, அழித்து எழுதி, அழித்து எழுதிக் கொண்டு இருக்கும் போது, அடுத்ததை யார் அழிப்பது என்று சண்டை… சரி அவன் ஒருதரம் நான் ஒரு தரம் என்று முடிவாக, அப்புறம் தான் தெரிந்த்து அது அழித்து அழித்து எழுதுவதற்க்காகவே தப்பாக எழுதுகிறது என்று… இல்லைஎன்றால் மட்டும் ரொம்ப வாழ்ந்துவிடுமா என்று கேட்பது கேட்கிறது… இது எல்லாம் நடப்பதற்க்குள் மணி பத்தையும் தாண்டி அடுத்த பத்து நிமிடத்துக்கு சென்று கொண்டு இருந்தது…

“அகில், அம்மா கை வலிக்குதும்மா…”

‘”போடுவேன் இரண்டு மரியாதையா எழுது…”

“முதுகு வலிக்குது மா…”

“டேய் இருக்கறது இரண்டு பக்கம் அதுக்கு முதுகு வலிக்குதா?…”

“எழுதி முடிச்சுட்டு கம்ப்யூட்டர் விளையாடலாமா?”

“அது நீ எழுதி முடிக்கற நேரத்தை பொறுத்து இருக்கு….”

கொஞ்சம் கொஞ்சமாக என் பொறுமை எல்லை மீறிக் கொண்டு இருந்தது…

“அகில் நீ பேசறதை கம்மி பண்ணி எழுதறதில கான்சென்ட்ரேட் பண்ணினால் சீக்கிரம் எழுதி முடிக்கலாம்…”

எங்கே தப்பியது என்று தெரியவில்லை.. இரண்டு பக்கத்தை எழுதி முடிப்பதற்க்கு நான் இரண்டு தரம் சண்டை போட்டு, அது இரண்டு தரம் அழுது, மூக்கை உறிஞ்சி உறிஞ்சி, நான் மிரட்டி…  பி யை டி மாதிரி போட்டு, சி வந்து இரண்டு கோட்டுக்கும் நடுவே தேடிக் கண்டு பிடிக்கும் நிலையாகி, பத்துதரம் பென்சிலை தலைகீழாக பிடித்து, இடையில் இரண்டு தரம் கால் அமுக்கி விட்டு, இ எழுதுவதற்க்குள் பக்கமே கிழிந்து போகும் நிலையாகி, எஃப் எழுதுவதற்க்கு ஒரு கொக்கியை போடுடா என்று நான் போட்ட கூச்சலில் தூங்கும் குழந்தையே எழுந்து விட, ஜி எழுத அதே போல் ஒரு முட்டை, கீழே போடும் கோடு அதன் வயிற்று பகுதியில் இருந்துதான் வருகிறது… ஓரமா ஆரம்பிடா என்று ஒரு பத்து தரம் சொல்லி, எச் மட்டும் தான் கொஞ்சம் சுலபமாக வந்தது…  இதை எழுத ஒரு மணி நேரம் ஆகும் என்று யாராவது முதலிலேயே சொல்லி இருந்தால் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டேன்…

சின்ன குழந்தை, முதல் தரம் ரூல்ட் நோட்டு புத்தகத்தில் எழுதுகிறது என்று நானும் கொஞ்சம் விட்டு பிடித்து இருந்து இருக்க்லாம், இல்லை வேளச்சேரி ஊர் சுற்றும் படலத்தை கட் செய்து உட்கார்ந்து கொஞ்சம் பொறுமையாக எழுதி இருந்து இருக்கலாம், ஒரு பக்கம் முடித்து நடுவில் ஏதாவது விளையாடி அடுத்த பக்கதை அப்புறமாக எழுதி இருந்திருக்கலாம். ஆனால் இந்த லாம் எல்லாம் இல்லாமல் போய், அந்த நிமிடத்துக்கு என்ன ஒரு உணர்வுகள் இருந்ததோ அதன் போக்கிலேயே ஓடிவிட்டது முதல் வீட்டுபாட எழுத்து.

வீட்டுபாடம் கொடுத்துவிட்டார்களே என்று ஒரு பத்து தரமாவது புலம்பினேன், அதற்க்கு எல்லோரும் என்னை புழுவை பார்ப்பது போல பார்த்ததோடு சரி… ஆனால் இந்த எழுத்து வேலையை பள்ளியில் எழுத வைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பொன்னான நேரத்தை இந்த சுமாரான வேலையில் செலவிட்டால் அவர்களுக்கும் கஷ்டமாகதானே இருக்கும்… அதனால் தான் வீட்டில் எழுத கொடுத்து இருக்கிறார்கள் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

வீட்டுபாடம் எழுதுவதை ஜாலியாக செய்ய வைக்க வேண்டும், அதனை விரும்பி செய்யும் வேலையாக வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அதற்க்கு எதிர்மறையாக எவ்வளவு மோசமான ஒரு அனுபவமாக்க முடியுமோ அப்படி செய்து விட்டேன் என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் மூளைக்கு உரைத்தது… என்ன செய்வது என்று யோசித்த போது, சரணாகதி ஆவதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. அகிலை அழைத்து, “அகில் இதுதான் நாம முதல் ஹோம் வொர்க் எழுதறோம், எனக்கும் தெரியலை எப்படி எழுதுவது என்று உனக்கும் தெரியலை… அதனால் தான் இப்படி குழப்பமாகி, சண்டை போட்டுக்கிட்டோம்.. இனிமேல ஒழுங்கா பிளான் பண்ணிக்கலாம், சாரி அகில், இது போல இன்னொருதரம் நடக்காம பார்த்துக்கலாம்…”

அகிலும் புரிந்து கொண்டது போல தலை ஆட்டி ஒத்துக் கொண்டது. எனக்கும் மனசே சரியில்லை, எப்படி குழந்தையை புரிந்து கொள்ளாமல் வீட்டு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கஷ்டபடுத்தி விட்டோமே என்று. இன்று போன் செய்து விசாரித்துக் கொண்டேன் வீட்டுபாடம் கொடுத்து இருக்கிறார்களா என்று, வெறும் ஒரு பக்கதிற்க்கு ஏ மட்டும் எழுதவேண்டும் போல. பீச்சுக்காவது அழைத்துப் போய் எழுத வைத்து ஜாலி பண்ண வேண்டும், அலையில் விளையாடிக் கொண்டே எழுதுவேன் என்று அடம் பிடிக்காமல் இருக்கும் வரை சரி… 🙂

ஜெயா.