அகிலின் ஆசிரியையிடம் வீட்டு பாடத்தை பற்றி ஒரு புலம்பல் புலம்பியதால் தெரிய வந்தது என்ன என்றால், வீட்டுபாடம் எழுத வேண்டியது கட்டாயம் அல்ல, அனைவருக்கும் கொடுக்கப்படுவதும் இல்லை. மற்ற விஷயங்களில் வேகமாக பற்றிக் கொள்ளும் குழந்தைகள், எழுதுவதில் மட்டும் பின் தங்கி இருந்தால் கொடுக்கப்படுவது, அன்றைக்கே எழுதி முடிக்க வேண்டியது இல்லை, சுமை அதிகமாக இருக்கும் போது உபயோகமாக இருப்பதற்க்காக மட்டும் தான்… ஆக கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

அதற்க்கு பிறகு கூட ஒரு நாள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாலும் கூட கேட்காமல் அட்டஹாசம் செய்த குழந்தைக்கு ஒரு பலமான அடி விழுந்தது. ஒரே அழுகையும் கூட, அதிலிருந்து நான் வீட்டு பாட வேலையில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். பாவம் குழந்தையை அடித்து விட்டோமே என்று வேறு கஷ்டமாகி விட்டது. சரி இந்த பேட்டர்னை மாற்றவெங்கட்டையோ அல்லது என் அக்காவையோ பார்த்து கொள்ள செய்து விட்டேன்.

சில நாட்கள் கழித்து நேற்றைக்கு அகில் கொஞ்சம் எழுதி பழகுவோமா என்று கேட்டத்ற்க்கு,

“ஓ அம்மா, காலால் எழுதலாமா?” கையே ரொம்ப விளங்கி விட்டது, இதில் கால் ஒன்றுதான் பாக்கி…

“கட்டாயம் எழுதலாமே..”

அப்படியாக எழுத உட்கார்ந்த நாங்கள், ஆன்ட்டி கொடுத்து விட்டு இருந்த சைட் வெர்ட்ஸை எழுதலாம் என்று எழுத ஆரம்பித்தோம். உண்மையில் குழந்தை ரொம்பவே நன்றாக எழுதினான். சொல்லும் பேச்சை வேறு கேட்டு எழுதினான். அதில் வித்தியாசமாக இரண்டு பென்சிலை வைத்து வேறு எழுதினோம்… பின்னே ஒரே கல்லில் இரண்டு மாங்காவாக, ஒரே தரம் இரண்டு அ எழுதி விடுகிறோமே 🙂

அப்புறம் காலால் கொஞ்ச நேரம் எழுதினோம், கண்ணை மூடிக் கொண்டு சில நேரம் எழுதினோம். இப்படி எல்லாம் எழுதியது ஆங்கிலம்தானா என்பது ஒரு நல்ல கேள்வி, ஆனால் பதில் இல்லை.

நானும் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நான் சொல்லுவதற்க்கு கேட்டு ஒத்துழைப்பு கொடுத்ததே இப்போதைக்கு பெரிய முன்னேற்றமாக இருப்பதால் எல்லாவற்றுக்கும் மண்டையை ஆட்டுவதை தவிர பெரிய வேலை இருக்கவில்லை எனக்கு. அப்புறமாக தெரியவந்தது என்ன என்றால் அகிலை போல யாருக்கெல்லாம் வீட்டுபாடம் கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கூட எழுதுவதில்லை, அப்படி எழுதினாலும் பெரிய போராட்டத்துக்கு பின்னரே, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வை பிளட், சேம் பிளட் 🙂

ஜெயா.