வித்யா தொடர்பதிவிற்க்கு என்னை அழைத்தமையினால் நீங்கள் இதை படித்தாக வேண்டிய கட்டாயமாகிறது 🙂 கருத்து என்னவாமென்றால், நீங்கள் பெண்ணாக பிறந்து, பெண்ணாக பிறக்காமல் இருந்தால், பெண்கள் சாதாராணமாக செய்யாத காரியங்களாக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?  மேலே படித்த வரியை இன்னொருதரம் படித்து புரிந்து கொள்ளுவதற்க்கு பதிலாக நீங்கள் இந்த பதிவையே படித்து முடித்து விடலாம்.

  • பெண்களுக்கு பெண்களைத்தான் பிடிக்கும் என்று யார் சொன்னது? பள்ளியில் இருந்து கல்லூரி பின்னர் வேலையிடம் எல்லாவற்றிலும் பெண்களைவிட ஆண் நண்பர்கள்தான் அதிகம். கல்லூரியில் இந்த பெண்கள் கூடத்திற்க்கு நான் மழையில் ஒதுங்க கூட சென்று நின்றதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
  • பெண்கள் என்றால் பாசத்தின் சிகரமாக இருக்க வேண்டும் என்று யார் இலக்கனம் எழுதியது? பக்கது ஊரில் குழந்தை அழுதால் கூட அம்மாவுக்கு ஞான திருஷ்டியில் தெரியும் என்பதெல்லாம் என்ன புருடா கதை? எனக்கு அப்படி எல்லாம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டவில்லை. அகில் பிறந்த புதிதில், தூக்கத்தில் இருந்து எழும் போது, யாரடா இது என்று யோசித்து, அட்டா… இது நம்முடைய குழந்தைதான் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இருந்தேன்…
  • ஆண்கள்தான் அடுத்தவர் காதலுக்கு உதவுவார்கள் என்று குருட்டுதனமாக யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா என்ன.. நாங்களும் தான் செய்வோம், பைக்கில் ஃபால்லோ பண்ணுவோம், யார் யாரை லவ் பண்ணுகிறார்கள் என்று தெரியாத அளவிற்க்கு கடலை போடுவோம், ஏன் தேவைப்பட்டால் கார்ப்பரேஷன் குப்பைதொட்டியின் பின்புறம் ஒளிந்தும் கொள்ளுவோம், இதைப் பற்றி, ரொம்ப நாள் முன்னால் நான் எழுதிய பதிவு.
  • ஆண்கள் தான் ரேஷ் ட்ரைவிங் செய்வார்கள் என்று அடுத்த நம்பிக்கை இருந்தால் அதையும் தலையை சுற்றி தூக்கி எறியுங்கள். நானும் என் தோழி யாமினியும் சேர்ந்து பாண்டிபஜார், டி.நகர் ஏரியாவில் சுத்தாத இடமில்லை, திட்டு வாங்காத நாளில்லை. அதிலும் 47 பஸ் டிரைவர் எந்த எந்த வார்த்தைகளில் எங்களை திட்டுவார் என்பதை அவரும் நாங்களும் மட்டுமே அறிவோம் (நல்ல வேளை)

ஸ்ஸ்ஸ் அப்பா, இன்னும் எத்தனை எழுதனும் என்று தெரியலையே, இப்போவெ கண்ணைகட்டுதே…

  • பெண்கள் சமைக்க, அனைவரும் சாப்பிட… நல்ல கொள்கைதான், சமைக்கும் பெண் நானாக இல்லாத வரைக்கும் 🙂  இதுவரையில் மூன்று வேளையும் நானாக சமைத்த நாள் இல்லை… ஒரு மாஸ்டர் டச்சாக என்றாவது ஒரு பொரியல், இல்லை ஒரு ரசம், இல்லை மோர் ;), இல்லை என்றால் ஒரு ஹை-ஃபை ரேஞ்சாக ஒரு புலவ், பாஸ்தா..   இதைதவிர ஒன்றும் பெருமையாக சொல்லிக் கொள்ள இல்லை… வீட்டுக்காரருக்கு அறுசுவை உணவு சமைக்காமல் இருக்கிறோமே என்று குற்ற உணர்வினையும் தாண்டி, மனுஷர் நல்ல சாப்பாட்டை சாப்பிடடும் என்று என்னுடைய அம்மாவையே சமைக்க சொல்லும் என்னுடைய நல்ல குணத்தை புரிந்து கொள்ளுபவர் யாரேனும் உள்ளரா?
  • ஸ்கூட்டி ஓட்ட கற்றுக் கொண்ட (ஓட்டுவதற்க்கு மட்டும் தான், உதைத்து ஸ்டார்ட் செய்ய அல்ல) அன்றைக்கே என்னுடைய கஸினை சென்ட்ரல் ஸ்டேஷனில் இரவு ஒன்பது மணிக்கு ட்ராப் செய்து விட்டு, திரும்பி வரும் போது கொட்டுகிற மழையில் மவுண்ட் ரோடில் தன்னந்தனியாக ஓட்டி, வண்டி சரியாக ஒரு டாஸ்மாக் கடையின் முன் நின்று போக, அதை ஸ்டார்ட் செய்ய, அந்த கடையில் இருந்தவனையே உதவி கேட்டு ஸ்டார்ட் செய்து சைதாப்பேட்டை வரை வந்து சேர்ந்ததை எல்லாம் பெண்கள் செய்வார்களா என்று எனக்கு தெரியவில்லை…
  • கல்லூரியில் படிக்கும் போது கூட இருந்த நண்பன் ஒருவன் (அதுதான் முதல் பாயிண்ட்லேயே சொல்லிட்டோமே…) சொன்ன பொய்யை கண்டு பிடிக்க,  அவனுக்கே தெரியாமல் அவனுடைய தோழியின் வீட்டை கண்டுபிடித்து, அவளை என் பக்கம் சேர்த்துக் கொண்டு இரண்டு பேருமாக ஏதேதோ சதி செய்து உண்மையை கண்டுபிடித்த என்னுடைய டிடெக்டிவ் மூளையை ஞாபகம் வரும் போதெல்லாம் பாராட்டிக் கொள்ளுவேன்…
  • பீரோ முழுவதும் புடவையை அடுக்கிக் கொண்டு, அதை எப்படா ஒரு சான்ஸ் கிடைக்கும் வெளியே கட்டிக் கொண்டு போகலாம் என்று இருப்பவர்களுக்கும் எனக்கும் வேளச்சேரிக்கும் சென்னை ஸில்க்ஸ்க்கும் இருக்கும் தூரம். என்னுடைய அலமாரியில் இருப்பதே மொத்தமே ஒரு பதினைந்து புடவைகள் அதில ஐந்து கல்யாணத்தின் போது எடுத்தது. அதை தவிர நானாக எடுத்தது ஒரு ஐந்து ஆறு மட்டுமே, அதிலும்  பாதிக்கு பிளவுஸ் தைக்கவில்லை. பல புடவைகளை கட்டாமலே வைத்து இருக்கிறேன்.  ஒல்லியாக இருக்கும் போது தைத்த பிளவுஸ் குண்டாக இருக்கும் போது ஏறுவதில்லை, அதே போல் குண்டாக் இருக்கும் போது தைத்தவை ஒல்லியானால் ஆல்டர் செய்ய பொறுப்பதில்லை… எத்தனை பிரச்சனைகள் ஒரு விஷேசத்திற்க்கு செல்லுவதற்க்கு முன்… பிளவுஸ் சரியாக அமையவேண்டும், இது வரை அந்த கும்பல்முன் பார்க்காத உடையாக இருக்க வேண்டும், மாமியார் வீட்டு ஃபங்க்ஷனனால் கண்டிப்பாக அது புடவையாக இருக்க வேண்டும், நகைகளும் செட்டாக அமைய வேண்டும்… இந்த தடைகற்க்களை எல்லாம் தாண்டி செல்லும் போது,  “இன்னைக்கும் ஒரு ஃபங்ஷனா, எப்படிங்க உங்களால சளைக்காம போக முடியுது” என்று கஷ்டத்தை புரியாமல், அழுக்கான டிஷர்ட்டையும் ஒரு சாயம் போன ஜீன்ஸுமாக கல்யாணத்திற்க்கு ஒரு கூச்ச நாச்சமே இல்லாமல் போகும் பந்தா பார்ட்டிகள் அடுத்த ஜென்மத்தில் ஒரு பெண்ணாக பிறந்து, போகாத பிளவுஸுக்குள்  மாட்டி அனுபவிக்கும் சித்ரவதையை அனுபவிக்கட்டும் என்று சுட சுட சாபம் விடுகிறேன்…
  • ஃபுட் போர்டில் பயணம் செய்யும் உரிமை ஆண்களுக்கு மட்டும் எதற்க்கு? இல்லை காதைக் கிழித்துக் கொண்டு வரும் காற்றுக்கு தெரியுமா நிற்பது ஆணா பெண்ணா என்று?  தாம்பரத்தில் இருக்கும் காலேஜுக்கு ட்ரையினில் இடம் இருந்தாலும் கூட உட்கார்ந்து கொள்ளாமல் கதவின் அருகே நின்று கொண்டே பயணம் செய்த நாட்கள் பல. ஆமாம் இந்த ட்ரைன்களில் லேடிஸ் கம்பார்ட்மென்ட் என்று கூட ஏதோ இருந்ததாக ஞாபகம்… ஆனால் வித்யா, யாரிடமும் துப்பட்டா வேண்டுமா என்று கேட்க சான்ஸ் கிடைக்க வில்லை…
  • டி.வி யும் கூட பெண்களின் அணிகலன்களில் ஒன்று என்றால், எனக்கும் அதற்க்கு காத தூரம். சத்தியமாக டி.வியில் வரும் எந்த மெகாசீரியலின் பெயரும் எனக்கு தெரியாது. திருமதி செல்வம் என்றால் பக்கத்து வீட்டிற்க்கு புதிதாக வந்திருக்கும் பெண்ணின் பெயரா என்று கேட்பதோடு சரி. ஏதாவது ஒரு குப்பை புக்கை கொடுத்து படிக்க சொல்லுகிறீர்களா அல்லது மிக சிறந்த திரைப்படத்தை பார்க்கிறீர்களா என்றால், பரவாயில்லை குப்பையையே எடுத்துக் கொள்ளுகிறேன் 🙂
  • என்னுடைய கல்யாணத்திற்க்கு எல்லா வேலையையும் நானே முன்னின்று செய்தேன். மண்டபம் பார்ப்பதில் இருந்து, சமையல்காரரை அமர்த்துவது, அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து பூ அலங்காரம் வரை எல்லாம் எங்கள் மேற்பார்வையிலேயே நடந்தது. நானும் எனது வீட்டுக்காரரும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்வதைப் போல் செய்தோம்.  யார் செய்தாலும் என்னுடைய வங்கி கணக்கு கல்யாணம் ஆன பின்னர் காலிதான் ஆகிவிட்டது 😦
  • கல்யாணத்திற்க்கு முன்னர் நானும் வெங்கட்டும் ஒரு சினிமாவிற்க்கு கூட சேர்ந்து சென்றதில்லை. அதிலும் ஒரு நாள் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று என்னை கல்யாணம் செய்து கொள்ளுவதால் உங்களுக்கு என்ன எல்லாம் கெட்டது நிகழக் கூடும் என்று ஒரு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறேன். அந்த டிஸ்கிளைமெரை இப்போதும் மனிதர் சொல்லிக்காட்ட தவறுவதில்லை, அப்போவே நீ சொன்னே, நாந்தான் கேட்கலை என்ற டையலாக் எங்கள் வீட்டில் ரொம்பவே சாதாரணம். அப்படியும் தெரிந்தே பாழுங்கிணற்றில் குதித்த மனிதருக்கு நீங்கள் எல்லோரும் சப்போர்ட் வேறு..
  • ஒரு கல்யாணம் ஆனதுமே அல்லது ஒரு குழந்தை பெற்ற உடனே (சரி முதல் ஒருவை அழித்துவிடுங்கள்) தன்னுடைய சைஸை மறந்து போகும் மக்களுக்கு நடுவே, இரண்டும் ஆன பின்னரும் கூட பயங்கரமாக் இளைத்து, பார்ப்பவர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தையும் இருக்கிறதா என்று பில்ட் அப் கொடுக்கும் அளவிற்க்கு இருந்தேன்.. இப்போதும் பழைய நிலைமைக்கு போக போராடிக்கொண்டு இருக்கிறேன் (மனதளவிலாவது )… போய் சேரும் இடம் தெரிகிறது, போகும் வழிதான்…. சரி சரி ஒரு ஜென் டீச்சிங் சொன்னால் கேட்டுக் கொள்ள மாட்டீர்களா என்ன?

இதற்க்கும் மேலும் யோசித்தால் இன்னும் நிறைய வருவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது… ஆனால் பொதுநலம் கருதி இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன். ஆனால் எனக்கு மறந்து போனவை உங்களுக்கு ஞாபகம் இருந்தால் அதை வெளியிடும் முன்னர் ஒரு முறை யோசனை செய்து கொள்ளவும்.. (இங்கே தயவு செய்து என்று போட்டு இருக்க வேண்டுமோ)

போதுமா வித்யா, உங்கள் அளவிற்க்கு வீரதீர சாகசங்கள் செய்யவில்லை என்றாலும் ஏதோ எங்களால் முடிந்தது 😉

ஜெயா.