அனன்யாவின் காதுகுத்தல் நிகழ்ச்சிக்காக கும்ப கோணம் சென்றிருந்த நாங்கள் அப்படியே  தஞ்சை பெரிய கோவிற்க்கும் சென்றோம். குடும்பம் முழுவதும் பக்தியோடு கோவிலுக்குள் நின்றிருக்க, கூட்டத்தை பார்த்த நானும் அகிலும் மெதுவாக அங்கே இருந்து நழுவி கோவிலை சுற்றி வரலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வெளி பிரஹாரமே கண்ணை கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்தது, நிறைய லிங்கங்கள், மற்றும் பல தெய்வ உருவங்கள், சுவரோவியங்கள் என்று வரிசையாக இர்ந்தது. சுவரோவியங்கள் முழுதும் சிவபுராண கதைகளாக இருக்க வேண்டும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், வரைந்து பல காலம் ஆனதாலும் சரியாக புரிந்து கொள்ள முடியாதவாறுதான் இருந்தன. அதிலும் நம் ஊர் குரங்குள் அதில் தங்கள் பேரை பிரபு என்றும் மும்தாஜ் என்றும் எழுதி இருந்ததை என்ன என்று திட்டுவது…

இருந்தாலும் அகில், அம்மா இந்த ஸ்டோரி சொல்லும்மா என்று கேட்க, நானும் நமக்கு தெரிகிறதோ இல்லை, பரவாயில்லை என்று ஒரு படத்துக்கும் மற்றோரு படத்துக்கும் சும்மா தொடர்பு இருக்கின்றாற்போல் சொல்ல ஆரம்பித்தேன். “இங்கே ஒரு ராஜா இருந்தாராம், அங்கே ஒரு லிங்கம் இருந்தததாம், (அடுத்த படம்) அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாளாம், அவளுக்கு ஒரு குழந்த்தை இருந்ததாம் அங்கேயும் ஒரு லிங்கம் இருந்ததாம்… (அடுத்த படம்) ஒரு குதிரை அங்கே வந்ததாம், அது மேலே ஒரு ராஜா இருந்தாராம் (அடுத்த படம்) அப்படியாக ஒரு கதையா அல்லது பல கதைகளா என்று தெரியாத வண்ணம் கதை சொல்லிக் கொண்டு வந்தேன்..

ஒரு இருபது படம் தள்ளியபின், குழந்தை என்னிடம் கேட்டது – “இந்த லிங்கத்துக்கு, இவ்வளவு நடந்ததாம்மா??” நீங்கள் அகிலிடம் ஒருதரம் பேசி இருந்தால், அது எந்த எக்ஸ்பிரஷினில் இதை கேட்டு இருக்கும் என்று யூகிக்க முடியும் 🙂 எனக்கு ஒரே சிரிப்பு, அவனிடம் சொன்னேன், “டேய், இந்த லிங்கத்துக்கு தை விட நிறைய நடந்து இருக்கு, அதனாலதான் அதுக்கு, இந்த ராஜா இவ்வளவு பெரிய கோவில் எல்லாம் கட்டி வைச்சு இருக்கார், இன்னும் நிறைய கோவிலுக்கு போனா, இன்னும் கூட நிறைய கதைகள் இருக்கு”அப்படியா என்று கேட்டு தலையை ஆட்டிக் கொண்டு வந்தது, ஆனாலும் அது கேட்டதை இன்னும் பல வருடங்களுக்கு மறக்க மாட்டேன்..

ஜெயா.