அகில் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ இந்த இடத்தில் அனன்யா பற்றி எழுத முடியமாட்டேன் என்கிறது… நான் எழுதாத காரணத்தால் குழந்தை வளராமல் இருக்குமா என்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது குட்டி பாப்பா.

பன்னிரண்டு மாதங்கள் முடிய போகிறது, அழகாக எழுந்து நிற்க்கிறது, பிடித்துக் கொண்டு நடக்க முயற்ச்சிறது, வெற்றிகரமாக கட்டிலின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு நடந்து சென்றுவிடுகிறது.

பெரிய கிராதகியாக வரும் என்பது, அகில் கையில் வைத்திருக்கும் பொம்மை என்ன என்று தெரியாமலேயே பிடுங்க வருவதிலிருந்து தெரிகிறது. அகிலோ, பொம்மையை அதன் கையில் கொடுக்காமல் தூரம் போய்விடுகிறான், ஓ என்று குரல் எடுத்து சத்தம் போட்டு தன் உரிமையை நிலை நாட்ட முயற்சிகிறது, அழுது என்னை பார்த்து கூக்குரலிட்டு அழைக்கிறது. நான் நடுவில் பஞ்சாயத்து செய்து, எங்கே பஞ்சாயத்து செய்வது, இரண்டாவதுதான் ஒன்னும் பேச முடியாமல் நிற்க்கிறதே, அதனால் சாம தான பேத தண்டத்தில் எதையாவது அகிலிடம் பிரயோகம் செய்து  கையில் இருப்பதை அவளிடம் கொடுக்க செய்கிறேன். இது வந்து வெறும் விளையாட்டு சாமானுக்கு மட்டுமே. அகில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதோ, இல்லை அதியசமாக படித்துக் கொண்டு இருக்கும் போதோ என்றால், “பாப்பா,  வா பாப்பா, இந்தா இந்த நோட்டை கிழிச்சுடு பாப்பா,” என்றோ இல்லை, “இதை கொட்டிடு பாப்பா” என்று வரவேற்க்கிறது. இங்கே என் பஞ்சாயத்திற்க்கு இடமில்லை என்று தெளிவாக இரண்டும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன.

அகிலோ சில சமயம் அதோடு விளையாடுகிறான், சில சமயம் அதோடு மல்லுக்கு நிற்கிறான். அவன் பாசமாக வரும் போது இது ஓ என்று கத்தி அவனை விரட்டி விடுகிறது, அவன் ஏதோ விளையாடிக் கொண்டு இருந்தால் அவனை வந்து தொந்தரவு செய்து என்னை பார் என்கிறது… இப்போதைக்கு இருவரையும் வெவ்வேறு அறைகளில் வைத்து பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது… சிவாஜி கணேசன் சாவித்திரி போல எதிர்பார்த்தால் இது இரண்டும் எம்.ஜி.யார் நம்பியார் போல வருவார்களோ? திடீரென்று அகில் மிக நல்ல குழந்தையாக மாறி, பாப்பாவிற்க்காக என்னிடம் சிபாரிசுக்கு வருகிறது, சின்ன குழந்தைதானே அம்மா, பெரிசான தெரிஞ்சுக்கும் என்று சமாதானம் சொல்லுகிறது…

குட்டி பாப்பா, யாராவது எப்போதும் என்னை வெளியே அழைத்து செல்லுங்கள்… மடிமேல் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்… அப்படியும் இல்லையா நான் இருக்கும் ரூமில் உட்கார்ந்து நான் செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டு இருங்கள் என அழிச்சாட்டியம் பண்ணுகிறது. வீட்டில் இருக்கும் போது சில சமயம் அழகாக இருக்கிறார்போல் இருக்கிறது, சில சமயம் சுமாராக் இருப்பது போல் இருக்கிறது, ஆனால் ஒரு நல்ல பட்டுபாவாடை போட்டு, சில நகைகளை போட்டுவிட்டால் கண்ணே பட்டு விடும் போல அழகாக இருக்கிறது… இந்த தோற்றங்களில் எதை நம்புவது என்று தெரியவில்லை 🙂

இதற்க்கு மேலே என்ன சொல்லுவது, தினமும் ஏதாவது சுவாரியமாக நடக்கிறது, வாழ்க்கை பிரகாசமாக சென்று கொண்டு இருக்கிறது, எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது…

ஜெயா.

வரலாறு தெரியாதவர்களுக்காக, பிறந்த போது அனன்யா ஒரு குட்டி தேவதையாகத்தான் தெரிந்தாள் 🙂