என் அம்மாவுக்கு எது வருமோ வராதோ, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது, மன்னிக்கவும் திணிப்பது மிக ந்ன்றாக வரும். ஒரு கிண்ணம் ஏதோ ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது, அதில் இரண்டு கிண்ணம் வரையில் நெய்யை ஊற்ற வேண்டியது, குழதைக்கு அது இட்டிலியா, பருப்பு சாதமா, தோசையா என்று எதுவும் தெரிய வாய்ப்பில்லை, வெறும் நெய் தான் தெரியும். உபயம், அவள் விகடனில் ஏதோ ஒரு ஆயுர்வேத தொடரில் குழந்தைகளுக்கு முக்கியமாக கொடுக்க வேண்டிய பொருளாக நெய்யை குறிப்பிட்டு இருந்ததின் பலனாக ஒரு மாததிற்க்கு அரைகிலோ நெய்யை எங்கள் பாப்பா குடிக்கிறது என்று தெரிந்தால், அவர் மிக சந்தோஷமாகி விடுவார் என நினைக்கிறேன். நாட்டில் என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் நடுபக்கத்தில விளம்பரத்தை மட்டும் விடாமல் தரும் ஆச்சி நெய் கம்பெனியிடம் இப்படி எழுதுவதற்க்கு காசு வாங்கி இருப்பாரா என்று தெரியவில்லை…
எங்கம்மா புராணத்திற்க்கு திரும்ப: மெல்லுவதற்க்கு வேலையே இல்லாத அளவிற்க்கு சாதத்தையோ (இட்டிலி தோசை கூட இருக்கலாம்) குழைத்து அதை கிருஷணருக்கு வெண்ணைய் அடிப்பது போல, குழந்தை நிமிரும் போது ஒரு வாய், குனியும் போது ஒரு வாய் என சாத்திக் கொண்டே இருக்க வேண்டியது…குழந்தைக்கு தான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது முக்கியம்.
ஏதாவது மெகா சீரியல் பார்த்தோ, அல்லது குடும்பத்தில் யார் மேலாவது இருக்கும் காண்டை வெளிக்காட்ட வேண்டி இருந்தால்,குழந்தை முதுகில் ஒரு தட்டு தட்ட வேண்டியது, குழந்தை அதிர்ச்சியில் சட்டென்று ஆ என்று வாயை திறந்தால் அதில் நுழைத்துவிட வேண்டியது..
சரி அவ்வள்வு வில்லத்தனத்தை காட்ட மூடு இல்லாத போது, தண்ணீர் கொடுப்பது போல டம்பளரை வாயருகே எடுத்து செல்ல வேண்டியது, குழந்தை தண்ணீருக்காக வாயை திறக்கும் போது, சாதத்தை திணித்து விட வேண்டியது, உள்ளே சென்றது என்ன என்று தெரிவதற்க்குள்ளேயே குழந்தை அதை முழுங்கிவிட்டு இருக்கும்… இது மாதிரி ஒரு பத்து தரம் செய்தால், கிண்ணம் காலியாகி விட்டு இருக்கும்…
ராத்திரி என்றால் இன்னொரு டெக்னிக்: ஒரு பாப்பா பொம்மை போல இருக்கும் நைட் லேம்பை போட்டுக் கொள்ள வேண்டியது, அதை அணைத்து அணைத்து போட வேண்டியது, என்னடா இது அதிசயமாக எதையோ அழுத்தினால் இது ஒளிர்கிறதே என ஒவ்வொரு தரமும் குழந்தை ஆச்சர்யப்பட்டு வாயை திறக்கும் போது … வாயில் ஊட்டி விட வேண்டும்…
பகலில் லைட் டெக்னிக் வேலை செய்யாவிட்டால் என்ன, அதற்க்கு பதிலாக இருக்கிறது குழாய் டெக்னிக். தண்ணீரில் ஆடுவது என்றால் எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? மாடிக்கு அழைத்து சென்று குழாயில் தண்ணீரை சொட்ட விட வேண்டியது, குழாய்க்கு கீழே அதை நிற்க வைக்க வேண்டியது, குழந்தை குழாயை ஆ என்று பார்க்கும் ஒரு பத்து நிமிடம் போதாதா கிண்ணத்தை அதன் வாயில் கவிழ்ப்பதற்க்கு…மாடிக்கு செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது கிட்சன் சிங்க் அல்லது பாத்ரூம். இங்கே எல்லாம் சாப்பிடகூடாது என்று குழந்தைக்கு என்ன தெரிய போகிறது? அதற்க்கு தான் அது சாப்பிடும் விஷயமே தெரியாதே… சாப்பிட்டு முடித்த பின்னர் என்னடா வயிறு கொஞ்சம் உப்பலாக இருக்கிறதே என்று ஆச்சர்யபடுவதற்க்கே அதற்க்கு தெரியுமோ தெரியாதோ..
அதுவும் வேலை செய்யவில்லையா, வீட்டில் வெட்டியாக இருக்கும் ஆசாமியை சோபாவிற்க்கு பின்னால் ஒளிந்து கொள்ள சொல்ல வேண்டும். முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து மூன்று வீடுகளுக்கு கேட்கும்படி பூச்சீ என்று கத்த வேண்டும், குழந்தை தனை மறந்து சிரிக்கும் போது வாயில் போட்டு விட வேண்டும்…
இந்த நிலா, காக்கா எல்லாம் காட்டி ஊட்ட மாட்டீர்களா என்று ஆச்சர்யப்டுகிறீர்களா? ஏங்க ஒரு வருஷத்திற்க்கு அதே நிலா, காக்கா, வவ் வவ் எல்லாம் செல்லுமா… வாரத்திற்க்கு ஒரு நாள் அவர்களும் அட்டவணையில் வருவார்கள்… மேலே சொன்ன எல்லா டெக்னிக்கும் எல்லா நாட்களிலும் வொர்க் அவுட் ஆகாது, அவ்வப்போதைக்கு எதையாவது மாற்றிக் கொள்ளவேண்டும்.. கொஞ்சம் இன்னோவெஷன் வேண்டாமா…
சரி இதற்க்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பங்கு பெறுவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கீறீர்களா, நேற்று இதே போல் எங்கம்மா ஓரிரண்டு நிமிடத்தில் ஒரு கின்னத்தை காலி செய்துவிட்டு திரும்ப கீழே இறங்கி வரும் போது, என் அக்கா நக்கலாக
“என்னம்மா, ஏதாவது கின்னஸ் சாதனைக்கு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கியா? ஒரே நிமிடத்தில் முப்பது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டி சாதனை என்று உன்னோட போட்டோவோட வரப்போகுது பாரு…”
என்றுசொல்ல, கூட அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த அகில்,
“என்ன பெரியம்மா அது கின்னஸ்?” என்று அறிவு பசியை வெளிப்படுத்த என் அக்காவும் அவனுக்கு கின்னஸ் புத்தகங்களை பற்றிய ஒரு மினி டூர் அடிக்க, அகில் சொன்னது..
“பெரியம்மா, அப்போ நான் கூட கடையில் இருக்கிற எல்லா பே ப்ளேட்ஸையும் வாங்கி நம்ம வீட்டில அடுக்கி வைச்சு கின்னஸ் சாதனை பண்ணட்டுமா??”
(bay blade என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் பூலோகத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என்று கேட்கிறேன், அதுதான் சிறுவர்களின் ஹாட் விளையாட்டு சாதனம்… கொஞ்சம் மாடர்ன் பம்பரம், ஆனால் கொஞ்சம் விலை ஜாஸ்தி, ஒரு bay blade விலைக்கு சுமாராக 35 பம்பரம் வாங்கிவிடலாம்…)
அடப்பாவி உன் தனிதிறமையை மட்டும் தான் கின்னஸ் ரெக்கார்ட்ல சேர்த்துப்பாங்க, அப்பா சொத்தை கரைக்கறது எல்லாம் கவுன்ட்ல எடுத்துக்க மாட்டாங்க என்று சொல்லி புரியவைப்பதற்க்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
ஜெயா.
என்னடா இது பல மாசமா இந்த ஏரியா பக்கமே வராதவங்க, இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்காங்களே என்று பார்க்கறீர்களா? இல்லங்க, இது புத்தக கண்காட்சி வாரம், எல்லா எழுத்தாளர்களும் ஃபுல் பார்ம்ல இருக்கும் தருணம், நாமளும் அவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்பைர் ஆகி ஒரு பதிவினை போட்டு பெருமையா பீத்திக்க வேண்டாமா, அதற்க்குதான் 🙂
இன்னுமொன்னு, சரி உங்கம்மா ஊட்டறதை இப்படி பிரிச்சு மேயறீங்களே, உங்க திறமை அதுல என்ன என்று கேட்கறத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன் யார் யாருக்கு எது எது வருமோ, அதை செய்யறது தான் நாட்டுக்கு செய்யற மிகப்பெரிய சேவை என்று யாரோ ஒரு ரொம்ப பெரிய மனுஷர் சொல்லி இருக்கார்ங்க 🙂 🙂
Jan 06, 2011 @ 14:38:47
உங்க அம்மாவை கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியுமா என் மனைவிக்கு இந்த வித்தைய சொல்லி தர..
Jan 07, 2011 @ 09:51:39
எங்க அம்மா வர்றது கஷ்டம், ஆனா நீங்க உங்க மனைவியை எங்க வீட்டுக்கு ட்ரைனிங்க்கு அனுப்பலாம்… ஒன்னும் சார்ஜ் எல்லாம் பண்ண மாட்டோம், ஆனா ஒரு கால் கிலோ நெய் மட்டும் கொடுத்து அனுப்புங்க 🙂
ஜெயா.