சாப்பாட்டு கின்னமும் கின்னஸ் சாதனையும்…

2 Comments

என் அம்மாவுக்கு எது வருமோ வராதோ, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது, மன்னிக்கவும் திணிப்பது மிக ந்ன்றாக வரும். ஒரு கிண்ணம் ஏதோ ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது, அதில் இரண்டு கிண்ணம் வரையில் நெய்யை ஊற்ற வேண்டியது, குழதைக்கு அது இட்டிலியா, பருப்பு சாதமா, தோசையா என்று எதுவும் தெரிய வாய்ப்பில்லை, வெறும் நெய் தான் தெரியும். உபயம், அவள் விகடனில் ஏதோ ஒரு ஆயுர்வேத தொடரில் குழந்தைகளுக்கு முக்கியமாக கொடுக்க வேண்டிய பொருளாக நெய்யை குறிப்பிட்டு இருந்ததின் பலனாக ஒரு மாததிற்க்கு அரைகிலோ நெய்யை எங்கள் பாப்பா குடிக்கிறது என்று தெரிந்தால், அவர் மிக சந்தோஷமாகி விடுவார் என நினைக்கிறேன். நாட்டில் என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் நடுபக்கத்தில விளம்பரத்தை மட்டும் விடாமல் தரும் ஆச்சி நெய் கம்பெனியிடம் இப்படி எழுதுவதற்க்கு காசு வாங்கி இருப்பாரா என்று தெரியவில்லை…

எங்கம்மா புராணத்திற்க்கு திரும்ப:  மெல்லுவதற்க்கு வேலையே இல்லாத அளவிற்க்கு சாதத்தையோ (இட்டிலி தோசை கூட இருக்கலாம்) குழைத்து அதை கிருஷணருக்கு வெண்ணைய் அடிப்பது போல, குழந்தை நிமிரும் போது ஒரு வாய், குனியும் போது ஒரு வாய் என சாத்திக் கொண்டே இருக்க வேண்டியது…குழந்தைக்கு தான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது முக்கியம்.

ஏதாவது மெகா சீரியல் பார்த்தோ, அல்லது குடும்பத்தில் யார் மேலாவது இருக்கும் காண்டை வெளிக்காட்ட வேண்டி இருந்தால்,குழந்தை முதுகில் ஒரு தட்டு தட்ட வேண்டியது, குழந்தை அதிர்ச்சியில் சட்டென்று ஆ என்று வாயை திறந்தால் அதில் நுழைத்துவிட வேண்டியது..

சரி அவ்வள்வு வில்லத்தனத்தை காட்ட மூடு இல்லாத போது, தண்ணீர் கொடுப்பது போல டம்பளரை வாயருகே எடுத்து செல்ல வேண்டியது, குழந்தை தண்ணீருக்காக வாயை திறக்கும் போது, சாதத்தை திணித்து விட வேண்டியது, உள்ளே சென்றது என்ன என்று தெரிவதற்க்குள்ளேயே குழந்தை அதை முழுங்கிவிட்டு இருக்கும்… இது மாதிரி ஒரு பத்து தரம் செய்தால், கிண்ணம் காலியாகி விட்டு இருக்கும்…

ராத்திரி என்றால் இன்னொரு டெக்னிக்: ஒரு பாப்பா பொம்மை போல இருக்கும் நைட் லேம்பை போட்டுக் கொள்ள வேண்டியது, அதை அணைத்து அணைத்து போட வேண்டியது, என்னடா இது அதிசயமாக எதையோ அழுத்தினால் இது ஒளிர்கிறதே என ஒவ்வொரு தரமும் குழந்தை ஆச்சர்யப்பட்டு வாயை திறக்கும் போது … வாயில் ஊட்டி விட வேண்டும்…

பகலில் லைட் டெக்னிக் வேலை செய்யாவிட்டால் என்ன, அதற்க்கு பதிலாக இருக்கிறது குழாய் டெக்னிக். தண்ணீரில் ஆடுவது என்றால் எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? மாடிக்கு அழைத்து சென்று குழாயில் தண்ணீரை சொட்ட விட வேண்டியது, குழாய்க்கு கீழே அதை நிற்க வைக்க வேண்டியது, குழந்தை குழாயை ஆ என்று பார்க்கும் ஒரு பத்து நிமிடம் போதாதா கிண்ணத்தை அதன் வாயில் கவிழ்ப்பதற்க்கு…மாடிக்கு செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது கிட்சன் சிங்க் அல்லது பாத்ரூம். இங்கே எல்லாம் சாப்பிடகூடாது என்று குழந்தைக்கு என்ன தெரிய போகிறது? அதற்க்கு தான் அது சாப்பிடும் விஷயமே தெரியாதே… சாப்பிட்டு முடித்த பின்னர் என்னடா வயிறு கொஞ்சம் உப்பலாக இருக்கிறதே என்று ஆச்சர்யபடுவதற்க்கே அதற்க்கு தெரியுமோ தெரியாதோ..

அதுவும் வேலை செய்யவில்லையா, வீட்டில் வெட்டியாக இருக்கும் ஆசாமியை சோபாவிற்க்கு பின்னால் ஒளிந்து கொள்ள சொல்ல வேண்டும். முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து மூன்று வீடுகளுக்கு கேட்கும்படி பூச்சீ என்று கத்த வேண்டும், குழந்தை தனை மறந்து சிரிக்கும் போது வாயில் போட்டு விட வேண்டும்…

இந்த நிலா, காக்கா எல்லாம் காட்டி ஊட்ட மாட்டீர்களா என்று ஆச்சர்யப்டுகிறீர்களா? ஏங்க ஒரு வருஷத்திற்க்கு அதே நிலா, காக்கா, வவ் வவ் எல்லாம் செல்லுமா… வாரத்திற்க்கு ஒரு நாள் அவர்களும் அட்டவணையில் வருவார்கள்… மேலே சொன்ன எல்லா டெக்னிக்கும் எல்லா நாட்களிலும் வொர்க் அவுட் ஆகாது,  அவ்வப்போதைக்கு எதையாவது மாற்றிக் கொள்ளவேண்டும்.. கொஞ்சம் இன்னோவெஷன் வேண்டாமா…

சரி இதற்க்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பங்கு பெறுவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கீறீர்களா, நேற்று இதே போல் எங்கம்மா ஓரிரண்டு நிமிடத்தில் ஒரு கின்னத்தை காலி செய்துவிட்டு திரும்ப கீழே இறங்கி வரும் போது, என் அக்கா நக்கலாக

“என்னம்மா, ஏதாவது கின்னஸ் சாதனைக்கு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கியா? ஒரே நிமிடத்தில் முப்பது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டி சாதனை என்று உன்னோட போட்டோவோட வரப்போகுது பாரு…”

என்றுசொல்ல, கூட அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த அகில்,

“என்ன பெரியம்மா அது கின்னஸ்?” என்று அறிவு பசியை வெளிப்படுத்த என் அக்காவும் அவனுக்கு கின்னஸ் புத்தகங்களை பற்றிய ஒரு மினி டூர் அடிக்க, அகில் சொன்னது..

“பெரியம்மா, அப்போ நான் கூட கடையில் இருக்கிற எல்லா பே ப்ளேட்ஸையும் வாங்கி நம்ம வீட்டில அடுக்கி வைச்சு கின்னஸ் சாதனை பண்ணட்டுமா??”

(bay blade என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் பூலோகத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என்று கேட்கிறேன், அதுதான் சிறுவர்களின் ஹாட் விளையாட்டு சாதனம்… கொஞ்சம் மாடர்ன் பம்பரம், ஆனால் கொஞ்சம் விலை ஜாஸ்தி, ஒரு bay blade விலைக்கு சுமாராக 35 பம்பரம் வாங்கிவிடலாம்…)

அடப்பாவி உன் தனிதிறமையை மட்டும் தான் கின்னஸ் ரெக்கார்ட்ல சேர்த்துப்பாங்க, அப்பா சொத்தை கரைக்கறது எல்லாம் கவுன்ட்ல எடுத்துக்க மாட்டாங்க என்று சொல்லி புரியவைப்பதற்க்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஜெயா.

என்னடா இது பல மாசமா இந்த ஏரியா பக்கமே வராதவங்க, இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்காங்களே என்று பார்க்கறீர்களா? இல்லங்க, இது புத்தக கண்காட்சி வாரம், எல்லா எழுத்தாளர்களும் ஃபுல் பார்ம்ல இருக்கும் தருணம், நாமளும் அவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்பைர் ஆகி ஒரு பதிவினை போட்டு பெருமையா பீத்திக்க வேண்டாமா, அதற்க்குதான் 🙂

இன்னுமொன்னு, சரி உங்கம்மா ஊட்டறதை இப்படி பிரிச்சு மேயறீங்களே, உங்க திறமை அதுல என்ன என்று கேட்கறத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன் யார் யாருக்கு எது எது வருமோ, அதை செய்யறது தான் நாட்டுக்கு செய்யற மிகப்பெரிய சேவை என்று யாரோ ஒரு ரொம்ப பெரிய மனுஷர் சொல்லி இருக்கார்ங்க 🙂 🙂

நகரும் உலகம்…

2 Comments

இத்தனை நாட்கள் அனன்யாவை சுற்றி நாங்கள்தான் நகர்ந்து கொண்டு இருந்தோம், இன்றையிலிருந்து அன்னாரும் நகர ஆரம்பித்து விட்டார்கள்… ஓரிரு வாரமாக சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்த குழந்தை இப்போது மெதுவாக நகர ஆரம்பித்து இருக்கிறது. முட்டி போட்டு இடுப்பை வெற்றிகரமாக தூக்கி  முன்னாடி உந்தி தவழ ஆரம்பித்தும் ஆயிற்று இன்றிலிருந்து. ஒரு பத்து நாட்களில் அது பிரயாசையின்றி நடக்கும் ஒரு விஷயமாகி விடும்.

கொஞ்ச நாட்களாக உள்ளே ஒரு யோசனை ஓடிக் கொண்டு இருந்தது ஆறு மாதம் ஆகிவிட்டதே, இன்னும் தவழ ஆரம்பிக்க வில்லையே, இன்னும் நாளாகுமோ என்று. நல்லவேளையாக இனிதே துவங்கிவிட்டார்கள். இன்றிலிருந்து ஒருவர் பின்னே ஓடுவதோடுஅல்லாமல் இருவர் பின்னே ஒட வேண்டிய காலம் துவங்குகிறது 🙂

ஜெயா.

ஆண்கள். பெண்கள்.. அன்பு…

2 Comments

நுனலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு என்னை விட சிறந்த உதாரணம் இல்லை… ஒரு நாள் நான், அகில், அனன்யா பாப்பா மூவரும் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, சரி குழந்தைகளுக்கு நடுவே பாசபிணைப்பை உருவாக்குவோம் என்று “அகில், நம்ம பாப்பாவை உனக்கு எவ்வளவு பிடிக்குது இல்ல?”

“ஆமாம் அம்மா, பாய்ஸ் லவ்ஸ் கேர்ள்ஸ்” இதயம் தொண்டைக்கு வந்து அடித்தது என்று எழுதி படித்து இருக்கிறேன், அனுபவம் எப்படி இருக்கும் என்பது இதை கேட்ட போது தெரிந்தது…  எப்படிடா எப்படி??

ஒரு அரை வினாடி இடைவெளியில் – ” கேர்ள்ஸ் லவ்ஸ் பாய்ஸ்” அதுவாக கண்டுபிடித்த ஒரு விஷயத்தை பேசுவது போல சொன்னது. இதுக்குள்ள கூட சுதாரிச்சுக்கலை என்றால், நாம என்ன டம்மி பீஸா? மம்மி பீஸ் இல்லையா…

“அகில், உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? அப்பாஸ் லவ்ஸ் சன்ஸ், சன்ஸ் லவ்ஸ் அப்பாஸ், அம்மாஸ் லவ்ஸ் டாட்டர்ஸ், டாட்டர்ஸ் லவ்ஸ் அம்மாஸ், அப்பாஸ் லவ்ஸ் டாட்டர்ஸ், டாட்டர்ஸ் லவ்ஸ் அப்பாஸ், சன்ஸ் லவ்ஸ் அம்மாஸ், அம்மாஸ் லவ்ஸ் சன்ஸ்….எவரிபடி லவ்ஸ் எவரிபடி” என்று சொல்லும் போது இரண்டு வரை கேட்டுக் கொண்டு இருந்த குழந்தை மீதியை அதே பிக் அப் செய்து என்னோடு கூட சொல்லிக் கொண்டு இருந்தது. எங்கே இருந்துடா இதை கத்துக்கிட்டே என்றால் சரியான பதில் இல்லை..

ஏற்க்கன்வே பா.ராகவனின் இந்த பதிவை படித்துவிட்டு பீதியில் இருந்த எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவையா? கூடிய சீக்கிரம் அகிலின் முதல் காதல் கடிதம் என்று ஒரு பதிவை எதிர்ப்பார்க்கலாம்…

ஜெயா.

டேன்ஜர் 1 & 2

1 Comment

ஒரு நாள் பாப்பா அழுது கொண்டு இருந்தாள், கிச்சனில் இருந்த நான் கேட்டேன் அகிலிடம், ஹேய் அகில் என்ன நடக்குது அங்கே?

அகிலின் பதில் : டேன்ஜர் 2 அழுவுதும்மா…

சும்மா ஒரு விளையாட்டுக்கு நான் அகிலை டேன்ஜர் 1 என்றும் அனன்யாவை டேன்ஜர் 2 என்றும் சொன்னதை வைத்து எனக்கே திரும்ப சொல்லுகிறது… கேட்டதும் சிரிப்புதான் வந்தது 🙂

ஜெயா.

பிளக் சொல்லும் சேதி…

1 Comment

அனன்யா எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பிளக் பாய்ண்ட்டை பார்த்து சிரிப்பதை போல என்னை பார்த்துக்கூட சிரிக்கவில்லை :), கீழே போட்ட அடுத்த நொடி குப்புற படுத்துக் கொண்டு, அந்த பிளக்கை பார்த்து பேசவும் சிரிக்கவும் செய்வதை என்ன என்று சொல்லுவது? அந்த சிறு குழந்தைக்கு அந்த பிளக் பாய்ண்ட் என்ன கதை சொல்லுகிறது, அது இநத குழந்தையின் கண்ணுக்கு என்னவாக தெரிகின்றது, இதுவும் அதுவும் என்ன பேசிக் கொள்ளுகின்றன என்று எப்படியாவது தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது…

எதை எதையோ கண்டுபிடிக்கும் அறிவியல் இதை கண்டு பிடிக்க கூடாதா?

ஜெயா.

என்ன வேலை…

1 Comment

நான்: அகில் அம்மம்மா என்ன பண்ணிக் கொண்டு இருக்காங்க பாரு…

அகில்: பாப்பாவை மேய்ச்சுக்கிட்டு இருக்காங்க அம்மா.

வீட்டில் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு எந்த அளவிற்க்கு மனதில் பதிந்து கொண்டு இருக்கின்றது என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதுவரைக்கும் எங்கள் வீட்டில், நாயே, பேயே என்று அழைக்கும் பழக்கம்  இல்லை 🙂

ஜெயா.

கேள்வியும் பதிலும்

3 Comments

அனன்யா பாப்பா, நீ எங்கே இருந்து வந்திருக்கே?

கொட்டிவாக்கத்தில இருந்து

உனக்கு அகில் அண்ணாவை ரொம்ப பிடிக்குமா?

ஆமா ரொம்ப பிடிக்கும்

அகில் அண்ணா உன்னை ஆசையா  வைச்சு இருக்கானா?


உங்க அப்பா எங்கே போய் இருக்காரு?

ஆஸ்ட்ரேலியா

எதுக்கு போயிருக்கறாரு கண்ணா?

மனம் சம்பாதிக்க, அது மனம் இல்லைப்பா, பணம், குடும்பத்தில குழப்பதை உண்டாக்காதே

நீ பெரிசான எந்த ஸ்கூலுக்கு போகப் போற?

ஹெட்ஸ்டார்ட்

உனக்கு அந்த ஸ்கூல் புடிச்சு இருக்கா?

ஓ புடிச்சு இருக்கே…

பிறந்து ஒன்றரை மாதம் ஆன அனன்யா இவ்வளவு பதில் சொன்னா என்று நினைச்சீங்களா என்ன? முதல் கேள்வி நான் அனன்யாவை கொஞ்சுவதற்க்காக கேட்டது, பதில் அகிலுடையது, மீதி கேள்விகளை சும்மா டெவலப் பண்ண குழந்தைக்கு மவுத்பீஸாகி அகில் சொன்ன பதில்கள்தான் அவை.

ஜெயா.

அதிகமாகும் அன்பு…

Leave a comment

அனன்யா வந்த பிறகு அகிலின் ரியாக்ஷ்ன்களை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கின்றேன், எழுத ஆரம்பித்தால் ரொம்ப பெரியதாக போகும் போல இருக்கவே தள்ளிப் போய்க் கொண்டு இருக்கின்றது. சீக்கிரம் எழுதுகிறேன்… இப்போதைக்கு சொல்ல வந்த சின்ன விஷயம் என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை தனக்கு கிடைத்துக் கொண்டு இருந்த அன்பின் அளவு குறைந்து விடும் என்று எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடும். பெரியவர்கள் வேண்டுமென்றே வித்தியாசம் பாராட்ட வில்லை என்றாலும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் அப்படி தோன்றி விட வாய்ப்பு இருக்கின்றது.

அகில் அப்படி யோசிப்பதற்க்கு முன்னால் ப்ரோஅக்டிவாக நானே என்ன சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்றால், “அகில், பாப்பா வந்த பிறகு உன் மேல் அன்பு ரொம்ப அதிகமாகி விட்டது.  உன்னை பார்த்தாலே ஆசை ஆசையாக இருக்கின்றது… ” அதுவும் ஆசையாக வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளுகிறது. சாதாரணமாக திட்டு வாங்கும் குறும்புகளை கூட இப்போது எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன். டி.வி பார்ப்பது அதிகமாகி இருக்கின்றது. பாப்பா வந்ததால தன்னுடைய வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அது உணராத அளவிற்க்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஒரு 60% வெற்றியும் கண்டு இருக்கின்றேன் என்று தோன்றுகிறது. ஆனால் அனனயாவிற்கு பால் கொடுக்கும் நேரங்களும், அது அழும் நேரங்களும், அதை தூங்க வைக்கும் நேரங்களையும் தவிர்க்க முடிவதில்லை, அப்போது எல்லாம் டி.வி அல்லது வீட்டில் இருக்கும் வேறு யாராவது அகிலை மேய்க்கிறார்கள்.

பாதி நேரம் அகில் பள்ளியில் கழித்து விடுவதாலும், பாதி நேரம் அனன்யா தூக்கத்தில் இருப்பதாலும் என்னுடைய வண்டி பெரிதாக ஆட்டம் காணாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது…

ஜெயா.

 

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுவது…

6 Comments

அனன்யா பிறந்து ஒரு மாதம் ஆகி விட்டது. ரொம்ப தொந்தரவு இல்லை, ஆனாலும் சில நேரங்களில் அழுகை, அழ ஆரம்பித்தால் நிறுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கினந்து. (அய்யோ அப்போ பேச ஆரம்பித்தாலும் நிறுத்தாதா என்று நீங்க அலறரது கேட்குது, என்ன பண்றது? க்கூம்…. தாயைப்போல பிள்ளை என்று பழைய பழமொழி எல்லாம் கமென்ட்ல போட்டு மொக்கை போடாதீங்க)

இன்றைக்கு தரையில் கை காலை உதைத்து விளையாடிக் கொண்டு இருந்த போது தன் கையாலேயே தன்னுடை தலை முடியை பிடித்து அழ ஆரம்பித்தது. எடுத்து விட்டாலும் அடுத்த ஒரு பத்து நிமிடத்துக்கு அதையே திரும்ப செய்து கொண்டு இருந்ததை என்ன சொல்லுவது? கொஞ்ச நேரத்தில் அகிலின் போலி அழுகை சத்தம். அவனும் ஒரு கையால் தன் தலைமுடியை பிடித்து இழுத்து (வலிக்காமல்தான்) அழுவதாக பாவ்லா செய்து கொண்டு இருந்த கொடுமையை பார்த்த போது வருகிற நாட்களை பார்த்தால் பீதியாகதான் இருக்கின்றது 🙂

ஜெயா.