குரங்கும் மனிதனும்…

Leave a comment

நிறைய நாட்களுக்கு பின் ஒரு அகில் பதிவு..

அகில், உனக்கு தெரியுமா, குரங்கில் இருந்து தான் மனுஷங்க வந்து இருக்காங்க… அப்படின்னா, நீ கூட எப்போ ஒரு தரம் குரங்கா இருந்து இருக்கே.. அப்புறமாதான் பாப்பாவா வந்து பொறந்து இருக்கே..  ஆனா இந்த மனுஷ குரங்கு தான், இந்த பூலோகமே நம்மளது என்று நினைச்சுக்குதாம்.. எல்லா குரங்கையும் விட அவந்தான் பெட்டர் என்று நினைச்சுக்குதாம்.. ஒருத்தரோடு ஒருத்தர் சண்டை போட்டுக்குதுதாம்… (எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தத்துவம் இருக்கனும் பார்த்துக்கோங்க…)

குழந்தையின் பதில்: நான் கூடவா குரங்கா இருந்தேன்..

நான்: ஆமாம், எல்லாருமே குரங்கில இருந்துதான் வந்து இருக்கோம்… என்ன பாதி பேர் இன்னும் குரங்காவே இருக்காங்க, நாம எல்லாம் மனுஷரா மாறிட்டோம்..

குழந்தை: அம்மா நான் குரங்கா இருந்த போது எடுத்த போட்டோ இருக்கா?? (சீரியஸான கேள்வி)

டேய்…….. இப்போதானேடா சொன்னேன், மனுஷ குரங்கு மட்டும் தான் பல வேலை பண்ணுது, அதில ஒன்னு போட்டோ எடுத்துக்கறது… நிஜ குரங்கு மரத்தில மட்டும் தானேடா தொங்கும்..

புரிந்துகொண்ட விஷமமான சிரிப்பே பதில் 🙂 நல்ல வேளையாக, நான் குரங்கா இருந்த போது மனுஷ குரங்கு என்னை போட்டோ எடுக்கலையா என்று பதில் கேள்வி கேட்கவில்லை…

ஜெயா.

 

சாப்பாட்டு கின்னமும் கின்னஸ் சாதனையும்…

2 Comments

என் அம்மாவுக்கு எது வருமோ வராதோ, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது, மன்னிக்கவும் திணிப்பது மிக ந்ன்றாக வரும். ஒரு கிண்ணம் ஏதோ ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது, அதில் இரண்டு கிண்ணம் வரையில் நெய்யை ஊற்ற வேண்டியது, குழதைக்கு அது இட்டிலியா, பருப்பு சாதமா, தோசையா என்று எதுவும் தெரிய வாய்ப்பில்லை, வெறும் நெய் தான் தெரியும். உபயம், அவள் விகடனில் ஏதோ ஒரு ஆயுர்வேத தொடரில் குழந்தைகளுக்கு முக்கியமாக கொடுக்க வேண்டிய பொருளாக நெய்யை குறிப்பிட்டு இருந்ததின் பலனாக ஒரு மாததிற்க்கு அரைகிலோ நெய்யை எங்கள் பாப்பா குடிக்கிறது என்று தெரிந்தால், அவர் மிக சந்தோஷமாகி விடுவார் என நினைக்கிறேன். நாட்டில் என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் நடுபக்கத்தில விளம்பரத்தை மட்டும் விடாமல் தரும் ஆச்சி நெய் கம்பெனியிடம் இப்படி எழுதுவதற்க்கு காசு வாங்கி இருப்பாரா என்று தெரியவில்லை…

எங்கம்மா புராணத்திற்க்கு திரும்ப:  மெல்லுவதற்க்கு வேலையே இல்லாத அளவிற்க்கு சாதத்தையோ (இட்டிலி தோசை கூட இருக்கலாம்) குழைத்து அதை கிருஷணருக்கு வெண்ணைய் அடிப்பது போல, குழந்தை நிமிரும் போது ஒரு வாய், குனியும் போது ஒரு வாய் என சாத்திக் கொண்டே இருக்க வேண்டியது…குழந்தைக்கு தான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது முக்கியம்.

ஏதாவது மெகா சீரியல் பார்த்தோ, அல்லது குடும்பத்தில் யார் மேலாவது இருக்கும் காண்டை வெளிக்காட்ட வேண்டி இருந்தால்,குழந்தை முதுகில் ஒரு தட்டு தட்ட வேண்டியது, குழந்தை அதிர்ச்சியில் சட்டென்று ஆ என்று வாயை திறந்தால் அதில் நுழைத்துவிட வேண்டியது..

சரி அவ்வள்வு வில்லத்தனத்தை காட்ட மூடு இல்லாத போது, தண்ணீர் கொடுப்பது போல டம்பளரை வாயருகே எடுத்து செல்ல வேண்டியது, குழந்தை தண்ணீருக்காக வாயை திறக்கும் போது, சாதத்தை திணித்து விட வேண்டியது, உள்ளே சென்றது என்ன என்று தெரிவதற்க்குள்ளேயே குழந்தை அதை முழுங்கிவிட்டு இருக்கும்… இது மாதிரி ஒரு பத்து தரம் செய்தால், கிண்ணம் காலியாகி விட்டு இருக்கும்…

ராத்திரி என்றால் இன்னொரு டெக்னிக்: ஒரு பாப்பா பொம்மை போல இருக்கும் நைட் லேம்பை போட்டுக் கொள்ள வேண்டியது, அதை அணைத்து அணைத்து போட வேண்டியது, என்னடா இது அதிசயமாக எதையோ அழுத்தினால் இது ஒளிர்கிறதே என ஒவ்வொரு தரமும் குழந்தை ஆச்சர்யப்பட்டு வாயை திறக்கும் போது … வாயில் ஊட்டி விட வேண்டும்…

பகலில் லைட் டெக்னிக் வேலை செய்யாவிட்டால் என்ன, அதற்க்கு பதிலாக இருக்கிறது குழாய் டெக்னிக். தண்ணீரில் ஆடுவது என்றால் எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? மாடிக்கு அழைத்து சென்று குழாயில் தண்ணீரை சொட்ட விட வேண்டியது, குழாய்க்கு கீழே அதை நிற்க வைக்க வேண்டியது, குழந்தை குழாயை ஆ என்று பார்க்கும் ஒரு பத்து நிமிடம் போதாதா கிண்ணத்தை அதன் வாயில் கவிழ்ப்பதற்க்கு…மாடிக்கு செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது கிட்சன் சிங்க் அல்லது பாத்ரூம். இங்கே எல்லாம் சாப்பிடகூடாது என்று குழந்தைக்கு என்ன தெரிய போகிறது? அதற்க்கு தான் அது சாப்பிடும் விஷயமே தெரியாதே… சாப்பிட்டு முடித்த பின்னர் என்னடா வயிறு கொஞ்சம் உப்பலாக இருக்கிறதே என்று ஆச்சர்யபடுவதற்க்கே அதற்க்கு தெரியுமோ தெரியாதோ..

அதுவும் வேலை செய்யவில்லையா, வீட்டில் வெட்டியாக இருக்கும் ஆசாமியை சோபாவிற்க்கு பின்னால் ஒளிந்து கொள்ள சொல்ல வேண்டும். முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து மூன்று வீடுகளுக்கு கேட்கும்படி பூச்சீ என்று கத்த வேண்டும், குழந்தை தனை மறந்து சிரிக்கும் போது வாயில் போட்டு விட வேண்டும்…

இந்த நிலா, காக்கா எல்லாம் காட்டி ஊட்ட மாட்டீர்களா என்று ஆச்சர்யப்டுகிறீர்களா? ஏங்க ஒரு வருஷத்திற்க்கு அதே நிலா, காக்கா, வவ் வவ் எல்லாம் செல்லுமா… வாரத்திற்க்கு ஒரு நாள் அவர்களும் அட்டவணையில் வருவார்கள்… மேலே சொன்ன எல்லா டெக்னிக்கும் எல்லா நாட்களிலும் வொர்க் அவுட் ஆகாது,  அவ்வப்போதைக்கு எதையாவது மாற்றிக் கொள்ளவேண்டும்.. கொஞ்சம் இன்னோவெஷன் வேண்டாமா…

சரி இதற்க்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பங்கு பெறுவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கீறீர்களா, நேற்று இதே போல் எங்கம்மா ஓரிரண்டு நிமிடத்தில் ஒரு கின்னத்தை காலி செய்துவிட்டு திரும்ப கீழே இறங்கி வரும் போது, என் அக்கா நக்கலாக

“என்னம்மா, ஏதாவது கின்னஸ் சாதனைக்கு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கியா? ஒரே நிமிடத்தில் முப்பது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டி சாதனை என்று உன்னோட போட்டோவோட வரப்போகுது பாரு…”

என்றுசொல்ல, கூட அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த அகில்,

“என்ன பெரியம்மா அது கின்னஸ்?” என்று அறிவு பசியை வெளிப்படுத்த என் அக்காவும் அவனுக்கு கின்னஸ் புத்தகங்களை பற்றிய ஒரு மினி டூர் அடிக்க, அகில் சொன்னது..

“பெரியம்மா, அப்போ நான் கூட கடையில் இருக்கிற எல்லா பே ப்ளேட்ஸையும் வாங்கி நம்ம வீட்டில அடுக்கி வைச்சு கின்னஸ் சாதனை பண்ணட்டுமா??”

(bay blade என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் பூலோகத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என்று கேட்கிறேன், அதுதான் சிறுவர்களின் ஹாட் விளையாட்டு சாதனம்… கொஞ்சம் மாடர்ன் பம்பரம், ஆனால் கொஞ்சம் விலை ஜாஸ்தி, ஒரு bay blade விலைக்கு சுமாராக 35 பம்பரம் வாங்கிவிடலாம்…)

அடப்பாவி உன் தனிதிறமையை மட்டும் தான் கின்னஸ் ரெக்கார்ட்ல சேர்த்துப்பாங்க, அப்பா சொத்தை கரைக்கறது எல்லாம் கவுன்ட்ல எடுத்துக்க மாட்டாங்க என்று சொல்லி புரியவைப்பதற்க்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஜெயா.

என்னடா இது பல மாசமா இந்த ஏரியா பக்கமே வராதவங்க, இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்காங்களே என்று பார்க்கறீர்களா? இல்லங்க, இது புத்தக கண்காட்சி வாரம், எல்லா எழுத்தாளர்களும் ஃபுல் பார்ம்ல இருக்கும் தருணம், நாமளும் அவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்பைர் ஆகி ஒரு பதிவினை போட்டு பெருமையா பீத்திக்க வேண்டாமா, அதற்க்குதான் 🙂

இன்னுமொன்னு, சரி உங்கம்மா ஊட்டறதை இப்படி பிரிச்சு மேயறீங்களே, உங்க திறமை அதுல என்ன என்று கேட்கறத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன் யார் யாருக்கு எது எது வருமோ, அதை செய்யறது தான் நாட்டுக்கு செய்யற மிகப்பெரிய சேவை என்று யாரோ ஒரு ரொம்ப பெரிய மனுஷர் சொல்லி இருக்கார்ங்க 🙂 🙂

முதல் கனவே… முதல் கனவே…

Leave a comment

இரண்டொரு நாட்களுக்கு முன், பின்னிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அகிலின் குரல் – சஜ்ஜூ, சஜ்ஜு…

கனவில் ஏதோ பள்ளிக் காட்சி ஓடிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இரண்டு தரம் அவன் பெயரை அதட்டி கூப்பிட்டு விட்டு திரும்ப தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது குழந்தை 🙂

நல்லவேளை மேரி மேரி என்றோ, அல்லது அபிநயா அபிநயா என்றோ சொல்லவில்லை, என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் 🙂

ஜெயா.

கண்ணுக்கு தெரியாமல்…

3 Comments

“அகில், ஜட்டியை எடுத்து போடு…”

“அம்மா, நான் போட்டுதான் இருக்கேன், ஆனா அது என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்.. உனக்கு தெரியலை…” ஒரு கதை சொன்னதின் விளைவு,

“அடேய், மரியாதையா என் கண்ணுக்கு தெரியர ஜட்டியா எடுத்து போடு..,”

“அம்மா, போட்ட ஜட்டிமேல எப்படி இன்னொன்னு போட முடியும். என் கண்ணுக்கு தெரியுதே…” இது பேச்சில் திருந்த வாய்ப்பில்லை

அவன் கையில் இருந்த பில்டிங் செட்டை வாங்கி வைத்துக் கொண்டு, கேள்வியாக பார்த்த அகிலிடம்,

“உன் கையில் இருக்கும் செட் இப்ப என் கண்ணுக்கு தெரியுது, அதை வைத்து விளையாடு… நீ போட்டு இருக்கும் ஜட்டி என் கண்ணுக்கு தெரியும் போது என் கையில் இருக்கும் சொப்பு உன் கைக்கு வரும்…”

சிரித்து கொண்டே போய் ஜட்டியை எடுத்து மாட்டிக் கொண்டது 🙂

ஜெயா.

ஒரு அம்மாவின் இம்போசிஷன்…

8 Comments

குழந்தைகளை அடிப்பவர்கள் கோழை….

குழந்தைகளை அடிப்பவர்கள் கோழை….

குழந்தைகளை அடிப்பவர்கள் கோழை….

குழந்தைகளை அடிப்பவர்கள் கோழை….

குழந்தைகளை அடிப்பவர்கள் கோழை….

அடிப்பதால் இன்னும் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும், கீழ்படிதலை அல்ல…

அடிப்பதால் இன்னும் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும், கீழ்படிதலை அல்ல…

அடிப்பதால் இன்னும் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும், கீழ்படிதலை அல்ல…

அடிப்பதால் இன்னும் வெறுப்பைதான் சம்பாதிக்க முடியும், கீழ்படிதலை அல்ல…

குழந்தைகளால் திரும்ப அடிக்கமுடியாது என்ற ஒரே நம்பிக்கையும் என்றேனும் உடைய கூடும்…

குழந்தைகளால் திரும்ப அடிக்கமுடியாது என்ற ஒரே நம்பிக்கையும் என்றேனும் உடைய கூடும்…

குழந்தைகளால் திரும்ப அடிக்கமுடியாது என்ற ஒரே நம்பிக்கையும் என்றேனும் உடைய கூடும்…

குழந்தைகளால் திரும்ப அடிக்கமுடியாது என்ற ஒரே நம்பிக்கையும் என்றேனும் உடைய கூடும்…

என்ன இது, இப்படி  எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா.. இரண்டு நாட்களாக அகில் செய்யும் அட்டஹாசங்களை தாங்க முடியாமல் இரண்டு சாத்து சாத்துகிறேன். அடி  வாங்கி கொண்டு அழும் போது பாவமாக தான் இருக்கிறது, அடிக்கும் போது எனக்கே கை வலிக்கிறது என்றால் வாங்கும் குழந்தைக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் இந்த ஐந்து வயதில் ஒரு பத்து தரம் கூட அடிவாங்கி இருக்காது. எல்லாம் பேச்சிலே முடிந்துவிடும் நானும் பொறுமையை இழக்க மாட்டேன், இப்போதெல்லாம் அதுவும் மோசமாகி விட்டது, நானும் சட்டென்று அடித்து விடுகிறேன், அப்புறம் ரொம்ப கஷ்டமாகி விடுகிறது. சே குழந்தையை அடித்துவிட்டோமே என்று… கூடுதல் சுமையாக இந்த வீட்டுபாடம் வேறு…  வாங்கி வைத்திருக்கும் இரண்டு புது பேரன்டிங் புத்தகத்தை படித்து முடிக்கிறேன், திருந்துகிறேன் 🙂

சரி இம்போசிஷனை தொடர்வோம்…

இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன்…

இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன்…

இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன்…

இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன்…

இனிமேல் குழந்தையை அடிக்க மாட்டேன்…

ஜெயா.

பி.கு. காலையில் பதிவு எழுதுவதற்க்கு ஆன நேரத்தை விட, இம்போசிஷனுக்கு தமிழ் வார்த்தை தேடுவதற்க்கு அதிகமாக ஆனது … பத்து பேரிடம் கேட்டும் கூட அதற்க்கு சரியான தமிழ் வார்த்தை கிடைக்காததால், imposition, இம்போசிஷனாகிவிட்டது 🙂

எதற்க்குள்…

1 Comment

அகிலின் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் செவ்வனே நடந்து முடிந்தது. பிளாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சில நண்பர்கள் என எங்கள் வீட்டு மொட்டைமாடியில் பார்ட்டி. வரும் போது எல்லோரும் பெரிய கிஃப்ட் வாங்கி வர வேண்டும் என்பது எழுதாத விதி, கிஃப்ட் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிய கேக் 🙂 பின்னே ஒரு மோட்டிவேஷன் வேண்டாமா உங்களுக்கும் கூட?

போன வருஷம் கிஃப்ட் கையில் வந்தவுடனேயே அவர்கள் முன்னாலேயே பிரித்து (என்பது டீசன்ட்டான வார்த்தை – சுக்கு நூறாக கிஃப்ட் பேப்பரை கிழித்து என்பது உண்மை) பார்த்து விளையாடிக் கொண்டு இருந்தான், இந்த வருஷம் கொஞ்சம் முன்னேறி அவர்கள் கிஃப்ட் கொடுத்து விட்டு வீட்டுக்கு போன பிறகுதான் பிரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம், ஆனாலும் அகில் வந்தவர்கள் கிஃப்ட்  கொண்டு வந்திருக்கிறார்களா என்று கழுகு கண்ணாக பார்த்துக் கொண்டு இருந்தது, மேலும் ஆதரவு இல்லாமல் இருந்த கவர்களை தானே சென்று எடுத்துப் பார்த்து, இதை நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று அவர்கள் கேட்குமுன்னாலேயே எடுத்து வைத்துக் கொண்டான்.

பார்ட்டி முடிந்தவுடன் தூக்கமும் அயர்ச்சியும் ஆளைத்தள்ளினாலும் எல்லா கிஃப்ட்டையும் பிரித்து பார்த்துவிட்டே தூங்கியது. பின்னர் காலையில் எழுந்து ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தது, முந்தின நாள் தோழி ஒருத்தியுடன் விளையாடும் போது அவளுடன் பகிர்ந்து விளையாடாததால் ஒரு சொப்பு சாமானை உடைத்து விட்டான். ஆகவே “அகில் நீ ஷேர் பண்ணைக்காம விளையாடி உடைத்து விட்டதால் – இத்தனை சாமானும் பரணுக்கு போக போகுது, போனா போகிறாய், ஏதாவது இரண்டு மட்டும் எடுத்துக்கோ. மித்தது கிடையாது” என்று சொன்னதும் கொஞ்சம் ஃபீல் பண்ண குழந்தை சரி என்று அதற்க்கு தேவையான ஒரு கன் மற்றும் ஒரு ரிமோட் காரை எடுத்து கொண்டு மீதியை மனசில்லாமல் பரண் மேல் வைத்து விட்டான்.

ஒரு வாரம் கழிந்த பின்னர், எனக்கும் பரிதாபமாக இருக்கவே, மேலும் அவனும் எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்து வைப்பதாக உறுதி மொழி கொடுத்து இருப்பதால், ஒரு சாமானை மேலே வைத்தால் இன்னொன்றை எடுத்துக் கொள்ளலாம் என்று ரூலை ரிலாக்ஸ் செய்து இருக்கிறேன். நேற்று அதன் படி ஒன்றை மேலே வைத்து விட்டு ஹாட்வீல்ஸ் எடுத்துக் கொண்டான். ராத்திரி எல்லாம் ஆடிவிட்டு, இன்று காலை “அம்மா, இது விளையாடி போர் அடிக்குது… வேறே எடுத்து தாம்மா..”

“சரி, எல்லாத்தையும் எடுத்து உள்ளே போட்டு மேலே வை,  அடுத்தது எடுத்து தரேன்…”

“எல்லாம் இருக்கு, ரோப் காணோமே..”

“அதையும் கண்டு பிடி, அப்புறம்தான் மேலே வைக்க முடியும்…”

“அது இல்லம்மா,  அது எங்கேயும் போயிருக்காது… எப்படியும் இந்த வீட்லதான் இருக்கும், நாம இந்த வீட்டை காலிதானே செய்ய போறோம், அப்ப கண்டிப்பா கண்டு பிடிச்சுடுலாம்… நாம கொஞ்ச நாள் தானே இந்த வீட்ட்ல இருக்க போறோம், அதனால நீ கவலை படாதே.. வேற சாமான் எடுத்தகலாமே, இதுல என்ன ப்ராப்ளம் உனக்கு?” நல்ல கிழவன் தோத்தான் நீ சோல்லற கதையில…

“அகில், இதோ தெரியுது பாரு, பாப்பா யானை, அதில உன்னை தலை கீழா தொங்க விடட்டுமா??”

“ஆ, என்ன அம்மா?” ஒன்னும் புரியலை அம்மா திடீரென்று ஏன் இதை சொல்லறா என்று

“அடிங் படவா பயலே, மரியாதையா கண்டு பிடிக்கற வேலையை பாரு, இல்ல கொன்னே போட்டுட்டேன்…”

தேட முயற்ச்சி செய்து கொண்டு இருந்து, நான் வெளியே கிளம்பும் போது கண்டு பிடித்தது 🙂 அம்மாவிடம் சொல்லி வேற டாய் எடுத்து கொடுக்கும் படி சொல்லிவிட்டு வந்தேன், இருந்தாலும் அவனுடைய பேச்சை எண்ணும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

ஜெயா.

ஆயிரத்தில் ஒருவன் வைத்தது ஆப்பு…

2 Comments

டூருக்கு செல்வது, ஊர் சுற்றுவது, தண்ணியில் விளையாடுவது, ராத்திரியில் ட்ரெயினில் பயணிப்பது எல்லாமே அகிலுக்கு ரொம்ப பிடித்தது. அதிலும் ஒரு கும்பலுடன் சென்றுவிட்டால் போதும், அதன் ஆட்டத்திற்க்கு அளவே இருக்காது. வயதில் ஐந்து மடங்கு பெரியவர்களையும் டேய் என்று கூப்பிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும். இப்படியாக ஒரு பில்ட் அப்பில் அடுத்த ஆபிஸ் டூருக்கு என்னால் போகமுடியவில்லை என்றாலும் அகிலையும் வெங்கட்டையும் அனுப்பலாமே என்ற ஒரு நல்ல எண்ணத்தில் டிக்கெட் புக் பண்ண சொன்னேன்.

ஊட்டியில் பார்சன் வேலி என்ற அத்து வனாந்திரம் – ஆபீஸில் வேலையை மட்டுமே பார்த்து களைத்த கண்களுக்கும், கேர்ள் பிரண்டோடு மொக்கை போட்டே களைத்த வாய் மற்றும் காதிற்க்கும் ஓய்வு கொடுக்கும் வகையில் சுற்றி ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு மலை பிரதேசம், செல் போன் டவர் இன்னும் நிறுவப்படாத ஒரு காட்டேஜ். முக்கியமாக ஏதேனும் பேச வேண்டும் என்றால் கூட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்க்கு நடந்து ஒரு லைட் போஸ்ட் அருகே அவசரத்திக்கு ஒதுங்கும் நாய் போல ஒற்றைகாலை தூக்கிக் கொண்டு மொபைலை ஒரு ஆங்கிளில் பிடித்தால் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.

வெங்கட்டிற்க்கு இந்த ஐடியாவை முதலில் கேட்டதுமே முகத்தில் மரணபயம் தெரிந்தது. நான் மட்டுமா, இவனை ஊட்டிக்கு தனியா கூட்டிகிட்டு போகனுமா என்று மிரண்டவரிடம், நீங்கள் மட்டுமில்லை கூட 20 பேர் வருகிறார்கள், எல்லா ஏற்பாடுமும் முன் கூட்டியே செய்தது, நீங்கள் சும்மா கூட போய்ட்டு வந்தா போதும் என்று சொல்லியும் தெளியவில்லை. கொஞ்ச நேர தயக்கதிற்க்கு பின்னர் தன் வாழ்க்கையில் எடுத்திருக்கும் மிக பெரிய சேலன்ஞாக கருதி சரி போய் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

அகிலும் ரொம்ப ஆர்வமாக கிளம்பியது.. பள்ளியில் போட்டோ செஷன் திங்கள் கிழமை என்று பார்த்தும் பக்கென்று இருந்தது, ஐயோ குழந்தை குருப் போட்டோவில் மிஸ் ஆகுமே என்று, அதனிடம் டூரா இல்லை போட்டோவா என்றதற்க்கு ஒரு யோசனையே இல்லாமல் டூர் என்று சொல்லி ஸ்கூலுக்கு திங்கள்கிழமை மட்டம் தான் போட போகிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டது.

பெரிய பில்ட் அப்புடன் பெட்டி அடுக்கி, பாதி சொப்பு சாமான், கிராஃப்ட் பேப்பர், கத்திரிகோல், கம், கிரேயான்ஸ் என கோலாகலமாக கிளம்பியது. டிரைவரை அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு கிளம்பினோம். வெங்கட் டிரிப்பில் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற என் லெக்சரை கேட்டு காது ஓட்டை ஆகாத குறையாக வந்து கொண்டு இருந்தார் – அடுத்தவர் எதிரில் அகிலை திட்ட கூடாது,  அது செய்கிற காரியத்தை செய்யாதே என்று சொல்லக்கூடாது, நீங்கள் சொல்லியும் அது செய்வதை நிறுத்தாது என்று தெரிகிற போது நிறுத்து என்று சொல்லவே சொல்லாதீர்கள், குழந்தை புது இடத்தை பார்த்து எக்சைட் ஆகி ஏதாவது குறும்புதனம் செய்தால் பொறுத்து கொள்ளுங்கள், உங்கள் டென்ஷனை குழந்தையிடம் காட்டாதீர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் என்ஜாய் செய்யுங்கள் என்ற போது மனுஷர் முகம் போன பாடு காண சகிக்கவில்லை. இது எல்லாவற்றையும் சொல்லி என்ஜாய் செய்ய சொல்லுகிறாய் பார், அங்கேதான் உன் வில்லத்தனம் முழுவதாக தெரிகிறது என்று ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தார்.

ட்ரெயினை பார்த்தவுடன் ஜாலி ஆன அகில் உடனடி மேனேஜர் அவதாரமெடுத்து எல்லாரையும் அதட்டி உருட்டிக் கொண்டு இருந்தது. என்னை ட்ரெயினின் உள்ளேயே ஏற விடவில்லை, அவன் அப்பாவை கீழே இறங்க விடவில்லை, விவரமாகத்தான் இருக்கிறது…. ட்ரெயின் கிளம்பிய உடன் டாடா காட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காலையில் போன் செய்த போது டிரியெனில் இருந்து இறங்கி டிபன் சாப்பிட்டு விட்டு ஊட்டிக்கு மலை ஏறிக் கொண்டு இருப்பதாக சொன்னார், குழந்தை ஜாலியாக இருப்பதாகவும் தெரிந்தது. ஊட்டியில் இருந்து பார்சன் வேலிக்கு செல்லும் வரை பேசிக் கொண்டு இருந்தேன், பின்னர் தொடர்பு இல்லாத காரணத்தால் பேசிக் கொள்ள முடியவில்லை.  குழந்தை இல்லாமல் வீடே வெறிச்சோடிவிட்டாற் போல் இருந்தது, எப்படியடா இன்னும் இரண்டு நாட்களை கழிப்பது என்று யோசித்துக் கொண்டு அபூர்வமாக கிடைக்கும் தனிமையை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். கஸின் கொடுத்து இருந்த ஒரு மனிதன், ஒரு வீடு ஒரு உலகம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

என்னடா தலைப்பிற்க்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இங்குதான் இன்டெர்வெல் விடுகிறார்கள். திருப்பம், மசாலா, அழுகை, சென்டிமென்ட்,  விறு விறுப்பு எல்லாம் இனி மேல் தான் ஆரம்பம்.

ஞாயிறு காலை ஒரு 11 மணிக்கு போன் அடித்தது, வெங்கட் நம்பர்… அடடா எங்கிருந்தோ சிக்னல் கிடைத்தது போல பேசுகிறாரே என்று ஒரு ஆர்வத்தில் போய் போன் எடுத்து, நம்முடைய பீக் ஃபார்மில் ஹலோ ட்ரிப் எப்படி போய் கொண்டு இருக்கிறது? எங்கே இருந்து போன் செய்கிறீர்கள், குழந்தை எப்படி இருக்கிறான்? என்று சூப்பர் எக்சைட்டாக கேட்டால், மனுஷர் குரலே காணோம், “ஹெலோ முதல்ல சொல்லறதை கேளு, நாங்க ஊட்டிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம், காருக்காக வெய்ட் பண்ணிக் கொண்டு இருக்கிறோம், பார்சன் வேலியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறோம், அகில் அழுது கிட்டு இருக்கிறான்,  உனக்கு போன் பண்ணலாம் என்று பண்ணினேன்..”

பனி மலைகள் உடைகின்றன, எரிமலை வெடிக்கின்றது, கடல் பொங்கிறது, பறவைகள் வேகமாக சிறகடித்துப் பறக்கின்றன… எல்லாம் என் மனக்கண்ணில் தான். நான் அனுப்பிய  பில்ட் அப் டூர் என்ன, இங்கே நடந்து கொண்டு இருப்பதென்ன.. “என்ன ஆச்சு வெங்கட் குழந்தை ஏன் அழுவறான், நாளைக்குதானே நீங்க ஊட்டிக்கு வரணும், எதுக்கு கார் எல்லாம் புக் பண்ணி இருக்கீங்க? எங்கேயாவது விழுந்து அடிபட்டுவிட்டதா?”

” வேன்ல வரும் போது பசங்க ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டாங்க.. அதில இது மாதிரியே கொஞ்ச பேர் காட்டுல போகிறமாதிரி சீன் வரும், அப்புற தண்ணி இருக்கும், அதில பூச்சிகள் ஓடும், அந்த காட்சியை பார்த்து அகில் பயந்து போயிட்டான், இங்கேயும் அதே மாதிரி காடு, தண்ணி எல்லாம் இருக்கவே குழந்தை அதை லிங்க் பண்ணி பயந்து போய், வரமாட்டேன் என்று ஒரே அழை. ரொம்ப கன்வின்ஸ் பண்ணி அழைச்சுகிட்டு போனேன்… டார்மென்ட்ரியில் இருந்து வெளியே வரவேஇல்லை.. இங்கே அது மாதிரி பூச்சி வருமா, காடு இருக்குமா என்று கேள்வியா கேட்டுக் கொண்டு இருந்தான். சுற்றி பார்க்கிற இடத்துக்கு எல்லாம் வரலை என்று சொல்லிட்டான். எவ்வளவு நேரம்தான் உள்ளேயே இருக்க முடியும், ரொம்ப அழுதான், அதனால ஊட்டிக்கே போயிடலாம் என்று கிளம்பிட்டேன்.. ஊட்டியை சுற்றிபார்த்துட்டு கிளம்பி வந்துடறோம், இந்தா நீ பேசு அகில் கிட்ட”

அடகடவுளே, இது என்ன சோதனை.. செல்வராகவன் எங்க வாழ்க்கையில இப்படி விளையாடனுமா, அவரும் சோனியா அகர்வால் பிரிந்ததை கூட எங்க காசிப் கேங்கில நாங்க ரொம்ப டிஸ்கஸ் பண்ணி அவர் வயித்தெரிச்சலை கொட்டிக்கலையே… ஆன்டிரியா வேறு எனக்கு பிடித்த பாடகிகளில் ஒருவர்.. அப்படியும் எப்படி ஆன்டிகிளைமாக்ஸாகி விட்டது என தெரியவில்லையே

“அகில் கண்ணா”

“ம்ம்…”

“என்னம்மா ஆச்சு, பயந்திட்டியா…”

“ம்ம்…”

குழந்தையின் பயத்தை மதிக்கும் படியாக… “ஓ அப்படியா.. என்ன செய்வது… ரொம்ப பயந்திடாதே, பூச்சி எல்லாம் வராது அங்கே… அப்பா இருக்கார் இல்லையா எல்லாம் பார்த்துப்பார்” அதுதான் அந்த இடத்தை விட்டே வந்து விட்டதே அதனிடன் இனி மேல் அதைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? “கார் வந்ததும் ஊட்டிக்கு வந்திடு, அங்கே நல்லா சுற்றி பார்த்துவிட்டு சென்னைக்கு வந்திடு..”

“சரி” அடடா, ஒரு வார்த்தையில் பதில் சொல்லுமளவு ஆகிவிட்டதே நம் குழந்தை… சாதாரணமாக காட்டை பார்த்து பயப்படும் குழந்தை அல்ல அகில், போன தரம் கேரளா டூர் ஆகட்டும், திருநெல்வேலி டூரிலும் கூட நன்றாக பேசிக் கொண்டு நடந்து கொண்டு இருந்தது. மம்மி படத்தை நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஒரு கண்ணை மூடிக் கொண்டு அந்த பூச்சிகளின் வரவை பார்த்தது ஒரு ஆறு மாதத்திற்க்கு முன்னாலேயே… அந்த படம், சவுண்ட் எஃப்கெட், சுற்றுபுற சூழல், எல்லாம் சேர்ந்து குழந்தையை பயமுறுத்தி விட்டது போல.

“சரி வெங்கட், பேசாமல் நைட் பஸ்ஸிற்க்கே டிக்கெட் எடுத்து வந்து விடுங்கள்.. பாவம் ரொம்ப பயந்து போய் இருக்கிறது போலவே குழந்தை…”

“ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கே கிளம்பிவிடுகிறோம்…”

அந்த அத்துவனாந்திரத்தை வெளியே வந்ததுமே தெளிந்து விட்டது போல குழந்தை.. மறுபடி வாலை கொஞ்சம் அவிழ்த்துவிட்டு ஆட்டம் காட்டியது போல, உட்டியில் இருந்து போன் பேசும் போது எல்லாம் தெளிவாக பேசியது, அம்மா வீட்டுக்கு டிக்கெட் வாங்கிட்டோம், இன்னைக்கே வந்திடறோம் என்று எல்லாம் கூறியது. அப்புறமாக எனக்கு தோன்றியது, அழுகை சரியாகிவிட்டது என்றால் இருந்து நாளைக்கே டிரையினியில் எல்லோருடனும் சேர்ந்து வந்துவிடலாமே என… அதை அகிலிடம் சொன்னேன், ” அகில் ஒரு ஐடியா சொல்லறேன் கேளு, இப்போ நல்லா ஊட்டி சுற்றி பார்த்துட்டு, ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து தங்கிடு, நாளைக்கு எல்லாரும் அங்கே வந்திடுவாங்க, திரும்ப ஒரு தரம் நல்லா சுற்றி பார்த்துட்டு டிரெயினில் நாளைக்கு கிளம்பி வந்திடு…”

“போம்மா இந்த ஐடியா ரொம்ப பெரிசா இருக்கு, நல்லாவும் இல்லை… நான் இன்னைக்கே வந்திடறேன்..”

அதற்க்கு மேல் என்ன சொல்லுவது, டிபன் சாப்பிட்டு விட்டு பஸ் ஏறிவிட்டது போல… பஸ்ஸில் லைட் ஆஃப் செய்யும் போது அகில் கேட்டது போல – “அப்பா ஏன் லைட் ஆஃப் பண்ணறாங்க…”

“அப்போதான் எல்லாரும் தூங்குவாங்க..”

“அப்போ டிரைவரும் தூங்கிட்டார் என்றால் பஸ் யார் ஓட்டுவாங்க?”

குழந்தை ரொம்பதான் பயந்து போய் இருக்கிறது போலவே, “இல்ல அகில், மூனு ட்ரைவர் இருப்பாங்க, மாறி மாறி ஓட்டுவாங்க” என்று சொல்லியும் கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்ததாம்..

வீட்டுக்கு ஒரு ஏழு மணிக்கு என்ட்ரியானார்கள். ஆஸ்டேரிலியா போய் வந்ததை விட அதிக களைப்பு தெரிந்தது வெங்கட் முகத்தில்… குழந்தை ஓடி வந்து அதன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டது. யாரும் டூரை பற்றியோ பயந்ததைப் பற்றியோ ரொம்ப விசாரிக்கவில்லை. சரி ஸ்கூல் போட்டோவிற்க்கு நிற்ப்பதற்க்காவது ஸ்கூலுக்கு கிளம்பி போ என தயார் செய்ய ஆரம்பித்தேன்.

சாப்பாடு ஊட்டும் போது சொன்னேன், “அகில் சினிமாவில் வருவது எல்லாம் நிஜம் இல்லை… நிறைய சும்மாதான்..”

அகிலின் பதில் – “அந்த மாதிரி காடுகள் இந்தியாவில் இல்லைதானே அம்மா?” அடப்பாவி நீ இதை ஊட்டியிலியே கேட்டு இருக்க கூடாதா?

“ஆமாம் அகில்.. அது மாதிரி வெளி நாட்டில்தான் இருக்கும்.. இங்கே இல்லை..”

சரி ஒரு கல்லில் மூன்று மாங்காய்களாக ஒரு ஓ.பி. டூருக்கும் போய் விட்டு, ஸ்கூல் போட்டோவில் போசும் கொடுத்து விட்டு, வெங்கட்டை ஒரு மினி டெரர் டிரிப்புக்கும் அனுப்பிய நிம்மதியோடு அடுத்த வேலையை கவனிப்போம்..

அங்கே இருந்த கொஞ்ச நேரத்தில் அகில் ஆடிய ஆட்டத்தின் கிளிக்குகள் இங்கே :

ஜாலியான ஓட்டம்

அப்பாவும் மகனும் பாசக் காட்சி

உல்லாச படகு சவாரி

சந்தோஷமாதான் இருக்கேன்

ஆசை ஆசையாக டூருக்கு அனுப்பி, பீதியாக திரும்பி வந்ததே என்று நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கின்றது… எதிர்பாராதது நடப்பதும் எதிர்பார்த்தது நடக்காததும் தானே வாழ்க்கை. போன வருஷத்தின் கேரளா டூரின் அனுபவமும் போட்டோவும் இங்கே.

ஜெயா.

பளீர் பற்க்கள்

2 Comments

அகிலுக்கு ஒரு வாரமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, குழந்தை பல்லை தேயோ தேய் என்று தேய்த்துக் கொண்டு இருக்கின்றது…

காலையில் ஒரு 15 நிமிஷம் தேய்க்கிறது… கூடவே பாட்டு… பிரஷ்ஷையை வாயில் வைத்துக் கொண்டு ஆஆ ஊ ஊ என்று சத்தம் வேறு. ஒரு நாள் பள்ளி முடிந்து வந்து ஒரு தரம் தேய்க்கிறேன் என்று அரை மணி நேரம் விடாமல் தேய்த்தது… சாயங்காலம் தேய்க்கிறேன் என்று வேறு அலும்பல் செய்தது, ரொம்ப கஷ்டப்பட்டு தடுத்தேன். இரவு தூங்கும் போதும் அதுவே கேட்டு தேய்க்கிறது. முன்னாடி எல்லாம் என்னிடம் பேரம் பேசிக் கொண்டு இருக்கும் – வாய் கொப்பளித்து விட்டு பால் குடிக்கேறேன், குடிக்கும் போது பல் தேய்க்கிறேன் என்று மேலும் பேட்டரி மூலம் தானாகவே இயங்கும் பிரஷ்ஷை வேறு வாங்கி தந்திருந்தேன் பல் தேய்ப்பதற்க்காக. ராத்திரி நாங்கள் பல்லை தேய்த்தால் விடிகாலை அடை மழைதான்…

என்ன காரணமாக இருக்கும் என்று நானும் என் பல்லை சாரி முளையை தேய்த்து பார்த்த போது அவன் நடனப் பயிற்சி பள்ளியில் இலவச பற்சோதனை கேம்ப் நடக்கப் போகிறது என்று வந்த எஸ் எம் எஸ் ஞாபகம் வந்தது. அப்புறம்தான் என் அம்மாவிடம் விசாரித்த போது – ஆமாமடி, ஏதோ ஒரு ரிப்போர்ட் தந்தார்கள் இங்கே எங்கேயோ தான் வைத்தேன்… எடுத்து தருகிறேன் என்றார்கள். “கஷ்டபடாதே அம்மா, விட்டு விடு நமக்குதான் சூப்பர் ரிசல்ட் இங்கேயே கிடைத்துவிட்டதே… அதை பார்த்து என்ன பெருசாக செய்து விட போகிறோம் ”

கரெக்ட்தானே?

ஜெயா.