பத்து மாத காத்திருப்பிற்க்கு பிறகு கையில் ஒரு குட்டி தேவதை – அனன்யா. ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்லும் போது முடிவாக எனக்கு தெரிந்தது நமக்கு பையன் தான் பிறக்க போகிறான்… சரி பரவாயில்லை, இரண்டு பையனை வளர்ப்பது ஒன்னும் அவ்வளவு மோசமாக இருக்காது, எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா என என்ற எண்ணத்துடன் தான் உள்ளே சென்றேன். டாக்டர்கள் வந்தவுடன், அவர்களிடம் பிறப்பது பெண்ணோ பையனோ, நீங்கள் பார்த்தவுடனே, “உன்னைப் போல அழகான, அறிவான குழந்தையை பார்த்ததில்லை” என்று சொல்லி குழந்தையை வரவேற்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன், அவர்களும் பயங்கர ஆர்வமாக கண்டிப்பாக சொல்லுகின்றோம் என்று சொல்லி என் வயிற்றில் பாலை (இல்லை இல்லை ஏதோ ஒரு மருந்தை) வார்த்தார்கள்.
அனெஸ்தீஷ்யா கைக்குள் ஏற, கண்கள் சொருகியதுதான் தெரியும். எவ்வளவு நேரம் சென்றதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம், ஒரு டாக்டர் என் கன்னத்தை தட்டி – உனக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது – 2. ஏதோ ஒரு நம்பர் சொல்லி வெயிட் இருக்கின்றது, ஆரோக்கியமாக இருக்கின்றது என்று சொன்னது எங்கேயோ தூரத்தில் கேட்டது – சந்தோஷம் ஆனால் அதை உணர முடியாத ஒரு நிலைமை இந்த மயக்கதில் இருந்து வெளியே வருவது – எண்ணங்க்ளின் ஓட்டத்தை வேற்று மனுஷியாக நின்று பார்க்கும் அனுபவம். உடல் முழுவதும் ஏதோ ஒரு புது ரத்தம் ஓடத்துவங்குவது போல ஒரு நிலை. சுற்றி நடப்பது எல்லாம் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய மற்றும் சொல்ல முடியாது – கேட்டது சரிதானா என்று ஒரு தரம் கேட்டுக் கொள்ளக் கூட முடியாது. டாக்டர்கள் வேறு சுற்றி வேலை முடிந்து விட்டது என்று ரவா தோசையை பற்றி வேறு பேசிக்கொண்டு இருந்தனர். அடக்கடவுளே, நான் கேட்டது சரிதானா என்று யாராவது இரண்டாவது தரம் சொல்லுங்களேன்… வாயும் கையும் நம் வசம் இருந்தால் தானே?
சில நிமிடம் கழித்து, திரும்ப தட்டி, கண்ணைதிறந்து பார் என்று சொல்ல, பகிரத பிரயத்தனம் செய்து பார்த்தால் – உள்ளே வந்து சரியாக ஒரு மணி நேரம் ஆகி இருந்தது. சரி என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எண்ணிக் கொண்டேன். அந்த பெட்டில் இருந்து தூக்கி இந்த ஸ்ட்ரெச்சருக்கு மாற்றி, தூக்கி ரூம் கட்டிலில் போட்டவுடனே, வெங்கட் குரல், “ஜெயா, சாதிச்சுட்டே .. பெண் குழந்தைதான் பிறந்து இருக்கு நமக்கு… ” அட! இத்தனை நாள் நமக்குள்ளே ஒரு பெண் குழந்தையா இருந்தது? அய்யோ முன்னாடியே தெரிஞ்சு இருந்தா இன்னும் கொஞ்சம் சீராட்டி இருந்திருக்கலாமே… அப்பாடி, ஒரு கவலை விட்டுது…
சரி, ஆனால் மனுஷ மனசு சந்தோஷமா இருக்க் விடுமா, குழந்தை வெயிட் – 2.6 கிலோ தான்.. அய்யோ ரொம்ப கம்மியா இருக்காளே… சே நாம சரியா உடம்பை பார்த்துக்காமே விட்டுட்டோமே, நிறைய நாள் ஒரு தோசை மட்டும் சாப்பிட்டேனே, அன்னைக்கு எல்லாம் கொஞ்சம் நல்லா சாப்பிட்டு இருந்தா குழந்தை நல்லா ஹெல்த்தியா இன்னும் வெயிட்டா பிறந்து இருப்பாளே… குற்ற உணர்ச்சி போட்டு அரித்து எடுக்கிறது. டாக்டரிம் “ரொம்ப குட்டியா இருக்காளே டாக்டர், எப்படி தேத்தறது?” என்றால், அவரோ, “அது எல்லாம் ஒன்னும் இல்லை, குழந்தை நல்லா இருக்கிறா, நீங்க நல்லா பால் குடுங்க போதும், தானா சரியாகிடுவா…” அடடா, இவளை ஒல்லிக்குச்சி குழந்தையில் இருந்து கொழு கொழு குழந்தையாக்கறதே இப்பொதைய தலையாய கடமை..
இந்த கதையில அகிலை பற்றி சொல்ல மறந்துட்டேனே – அகிலுக்கு ரொம்ப சந்தோஷம்தான். குழந்தை எதுவும் ரொம்ப வருத்தம் தருகிறாற்போல அல்லது மனச்சோர்வு ரியாகஷன் காட்ட வில்லை. குட்டிப் பாப்பா என்றுதான் சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டு இருந்தது. ஆனால் என்னை ஹாஸ்பிட்டலில் கையில் ஊசி எல்லாம் குத்தி பார்க்கவே ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் – ரொம்ப அன்பாக என்னிடம் இருந்தது. அம்மா இது வேண்டுமா, அது வேண்டுமா என்று வேண்டி வேண்டி கேட்டுக் கொண்டு இருந்தது. கண்ணில் வேறு கொஞ்சம் கண்ணீர். எனக்கு முத்தம் எல்லாம் கொடுத்து என்னை தேற்றிக் கொண்டு இருந்தது. நானும் முடிந்த வரை அவனுடன் இருக்கப் பார்த்தேன். அவனை கொஞ்சிக் கொண்டு அவன் கதைகளை கேட்டுக் கொண்டும். குழந்தை புது குழந்தை வந்ததும் தன்னை மறந்து விட்டார்கள் என்று ஃபீல் பண்ணக் கூடாது என, முன்னமே வெங்கட்டிடம் யாராவது கூட்டமாக வந்தால் அகிலை வெளியே கூட்டிக் கொண்டு சென்று விடுங்கள் என்று சொல்லி வைத்து இருந்தேன். அதுவும் இல்லாமல் அகில் தினமும் ஒரு மணி நேரத்திற்க்கு மட்டுமே மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருந்தது, அந்த சமயத்தில் அதன் உணர்ச்சிகளைத்தான் பார்த்தோமே தவிர, நிஜமாகவே வந்திருக்கும் பாப்பா எப்போதும் நம் வீட்டில் தான் இருக்க போகிறது, தன்னுடன் தான் வளரப் போகிறது என்று தெரிந்து இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை…
குழந்தை யார் ஜாடை என்று எல்லாம் தெரியவில்லை – ஆமாம் இருப்பதே ஒரு பெரிய ஓனான் சைஸில் – அதில் எங்கே இருந்து ஜாடை சொல்லுவது? கை கால்கள், விரல்கள் எல்லாம் நல்ல நீட்டமாக இருக்கின்றது – நல்ல உயரமாக வளரும் போல – அய்யோ அகில் கொஞ்சம் குள்ள வாட்டம் ஆச்சே, நாளைக்கு இந்த பெண் அவனை விட உயரமாக வளர்ந்தால் – ரொம்ப அசிங்கமா இருக்குமே, இவனை உயரமாக்க ஏதாச்சும் செய்யனும் போல இருக்கே…
இப்போதான் 10 நாள் ஆகி இருக்கு.. இன்னும் குப்புற படுத்து, தவழ்ந்து, நின்று, நடந்து, ஓடி, பேசி… அப்பா நிறைய இருக்கே, அதுவரைக்கும் நல்லஆரோக்கியமாக இருக்கனும், நல்லா சாப்பிட வைக்கனும், யோசிச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. அகிலை நாங்க பார்த்து சந்தோஷப்பட்டது போல, அகிலை இந்த குழந்தை வளர்வதை பார்த்து சந்தோஷப்பட வைக்கனும் என்று ஆசை எனக்கு. பார்ப்போம் என்ன நடக்குது என்று…

ananya
இதுவரைக்கும் ஒரு குழந்தையோட புலம்பலையும் அலம்பலையும் படிச்சுகிட்டு இருந்த உங்களுக்கு, இன்னொரு குழந்தையோட அலம்பலையும் சொல்ல ஆரம்பிக்கப் போறேன் என்று நினைக்கிறேன். நீங்களும் தான், எவ்வளவோ பார்த்த்ட்டீங்க, படிச்சுட்டீங்க… இனி மேல படிக்காமலா இருக்க போறீங்க?
ஜெயா.
பேருக்கும் பதிவுக்கும் கொஞ்சம் சம்பந்தம் இல்லாம தான் போயிடுச்சு, உண்மையில, எப்படி அனன்யா என்று பேர் வைச்சோம் என்று எழுதனும் என்றும் நினைத்தேன், இதுவே பெருசா போகிறதை பார்த்தா, அதையும் எழுத முடியாது போல, அடுத்ததில எழுதறனே …
What THEY say…