குரங்கும் மனிதனும்…

Leave a comment

நிறைய நாட்களுக்கு பின் ஒரு அகில் பதிவு..

அகில், உனக்கு தெரியுமா, குரங்கில் இருந்து தான் மனுஷங்க வந்து இருக்காங்க… அப்படின்னா, நீ கூட எப்போ ஒரு தரம் குரங்கா இருந்து இருக்கே.. அப்புறமாதான் பாப்பாவா வந்து பொறந்து இருக்கே..  ஆனா இந்த மனுஷ குரங்கு தான், இந்த பூலோகமே நம்மளது என்று நினைச்சுக்குதாம்.. எல்லா குரங்கையும் விட அவந்தான் பெட்டர் என்று நினைச்சுக்குதாம்.. ஒருத்தரோடு ஒருத்தர் சண்டை போட்டுக்குதுதாம்… (எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தத்துவம் இருக்கனும் பார்த்துக்கோங்க…)

குழந்தையின் பதில்: நான் கூடவா குரங்கா இருந்தேன்..

நான்: ஆமாம், எல்லாருமே குரங்கில இருந்துதான் வந்து இருக்கோம்… என்ன பாதி பேர் இன்னும் குரங்காவே இருக்காங்க, நாம எல்லாம் மனுஷரா மாறிட்டோம்..

குழந்தை: அம்மா நான் குரங்கா இருந்த போது எடுத்த போட்டோ இருக்கா?? (சீரியஸான கேள்வி)

டேய்…….. இப்போதானேடா சொன்னேன், மனுஷ குரங்கு மட்டும் தான் பல வேலை பண்ணுது, அதில ஒன்னு போட்டோ எடுத்துக்கறது… நிஜ குரங்கு மரத்தில மட்டும் தானேடா தொங்கும்..

புரிந்துகொண்ட விஷமமான சிரிப்பே பதில் 🙂 நல்ல வேளையாக, நான் குரங்கா இருந்த போது மனுஷ குரங்கு என்னை போட்டோ எடுக்கலையா என்று பதில் கேள்வி கேட்கவில்லை…

ஜெயா.

 

சாப்பாட்டு கின்னமும் கின்னஸ் சாதனையும்…

2 Comments

என் அம்மாவுக்கு எது வருமோ வராதோ, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது, மன்னிக்கவும் திணிப்பது மிக ந்ன்றாக வரும். ஒரு கிண்ணம் ஏதோ ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது, அதில் இரண்டு கிண்ணம் வரையில் நெய்யை ஊற்ற வேண்டியது, குழதைக்கு அது இட்டிலியா, பருப்பு சாதமா, தோசையா என்று எதுவும் தெரிய வாய்ப்பில்லை, வெறும் நெய் தான் தெரியும். உபயம், அவள் விகடனில் ஏதோ ஒரு ஆயுர்வேத தொடரில் குழந்தைகளுக்கு முக்கியமாக கொடுக்க வேண்டிய பொருளாக நெய்யை குறிப்பிட்டு இருந்ததின் பலனாக ஒரு மாததிற்க்கு அரைகிலோ நெய்யை எங்கள் பாப்பா குடிக்கிறது என்று தெரிந்தால், அவர் மிக சந்தோஷமாகி விடுவார் என நினைக்கிறேன். நாட்டில் என்ன நடந்தாலும் நடக்காவிட்டாலும் நடுபக்கத்தில விளம்பரத்தை மட்டும் விடாமல் தரும் ஆச்சி நெய் கம்பெனியிடம் இப்படி எழுதுவதற்க்கு காசு வாங்கி இருப்பாரா என்று தெரியவில்லை…

எங்கம்மா புராணத்திற்க்கு திரும்ப:  மெல்லுவதற்க்கு வேலையே இல்லாத அளவிற்க்கு சாதத்தையோ (இட்டிலி தோசை கூட இருக்கலாம்) குழைத்து அதை கிருஷணருக்கு வெண்ணைய் அடிப்பது போல, குழந்தை நிமிரும் போது ஒரு வாய், குனியும் போது ஒரு வாய் என சாத்திக் கொண்டே இருக்க வேண்டியது…குழந்தைக்கு தான் சாப்பிடுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது முக்கியம்.

ஏதாவது மெகா சீரியல் பார்த்தோ, அல்லது குடும்பத்தில் யார் மேலாவது இருக்கும் காண்டை வெளிக்காட்ட வேண்டி இருந்தால்,குழந்தை முதுகில் ஒரு தட்டு தட்ட வேண்டியது, குழந்தை அதிர்ச்சியில் சட்டென்று ஆ என்று வாயை திறந்தால் அதில் நுழைத்துவிட வேண்டியது..

சரி அவ்வள்வு வில்லத்தனத்தை காட்ட மூடு இல்லாத போது, தண்ணீர் கொடுப்பது போல டம்பளரை வாயருகே எடுத்து செல்ல வேண்டியது, குழந்தை தண்ணீருக்காக வாயை திறக்கும் போது, சாதத்தை திணித்து விட வேண்டியது, உள்ளே சென்றது என்ன என்று தெரிவதற்க்குள்ளேயே குழந்தை அதை முழுங்கிவிட்டு இருக்கும்… இது மாதிரி ஒரு பத்து தரம் செய்தால், கிண்ணம் காலியாகி விட்டு இருக்கும்…

ராத்திரி என்றால் இன்னொரு டெக்னிக்: ஒரு பாப்பா பொம்மை போல இருக்கும் நைட் லேம்பை போட்டுக் கொள்ள வேண்டியது, அதை அணைத்து அணைத்து போட வேண்டியது, என்னடா இது அதிசயமாக எதையோ அழுத்தினால் இது ஒளிர்கிறதே என ஒவ்வொரு தரமும் குழந்தை ஆச்சர்யப்பட்டு வாயை திறக்கும் போது … வாயில் ஊட்டி விட வேண்டும்…

பகலில் லைட் டெக்னிக் வேலை செய்யாவிட்டால் என்ன, அதற்க்கு பதிலாக இருக்கிறது குழாய் டெக்னிக். தண்ணீரில் ஆடுவது என்றால் எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? மாடிக்கு அழைத்து சென்று குழாயில் தண்ணீரை சொட்ட விட வேண்டியது, குழாய்க்கு கீழே அதை நிற்க வைக்க வேண்டியது, குழந்தை குழாயை ஆ என்று பார்க்கும் ஒரு பத்து நிமிடம் போதாதா கிண்ணத்தை அதன் வாயில் கவிழ்ப்பதற்க்கு…மாடிக்கு செல்ல சோம்பேறித்தனமாக இருந்தால், இருக்கவே இருக்கிறது கிட்சன் சிங்க் அல்லது பாத்ரூம். இங்கே எல்லாம் சாப்பிடகூடாது என்று குழந்தைக்கு என்ன தெரிய போகிறது? அதற்க்கு தான் அது சாப்பிடும் விஷயமே தெரியாதே… சாப்பிட்டு முடித்த பின்னர் என்னடா வயிறு கொஞ்சம் உப்பலாக இருக்கிறதே என்று ஆச்சர்யபடுவதற்க்கே அதற்க்கு தெரியுமோ தெரியாதோ..

அதுவும் வேலை செய்யவில்லையா, வீட்டில் வெட்டியாக இருக்கும் ஆசாமியை சோபாவிற்க்கு பின்னால் ஒளிந்து கொள்ள சொல்ல வேண்டும். முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து மூன்று வீடுகளுக்கு கேட்கும்படி பூச்சீ என்று கத்த வேண்டும், குழந்தை தனை மறந்து சிரிக்கும் போது வாயில் போட்டு விட வேண்டும்…

இந்த நிலா, காக்கா எல்லாம் காட்டி ஊட்ட மாட்டீர்களா என்று ஆச்சர்யப்டுகிறீர்களா? ஏங்க ஒரு வருஷத்திற்க்கு அதே நிலா, காக்கா, வவ் வவ் எல்லாம் செல்லுமா… வாரத்திற்க்கு ஒரு நாள் அவர்களும் அட்டவணையில் வருவார்கள்… மேலே சொன்ன எல்லா டெக்னிக்கும் எல்லா நாட்களிலும் வொர்க் அவுட் ஆகாது,  அவ்வப்போதைக்கு எதையாவது மாற்றிக் கொள்ளவேண்டும்.. கொஞ்சம் இன்னோவெஷன் வேண்டாமா…

சரி இதற்க்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பங்கு பெறுவதற்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கீறீர்களா, நேற்று இதே போல் எங்கம்மா ஓரிரண்டு நிமிடத்தில் ஒரு கின்னத்தை காலி செய்துவிட்டு திரும்ப கீழே இறங்கி வரும் போது, என் அக்கா நக்கலாக

“என்னம்மா, ஏதாவது கின்னஸ் சாதனைக்கு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கியா? ஒரே நிமிடத்தில் முப்பது குழந்தைகளுக்கு சாதம் ஊட்டி சாதனை என்று உன்னோட போட்டோவோட வரப்போகுது பாரு…”

என்றுசொல்ல, கூட அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த அகில்,

“என்ன பெரியம்மா அது கின்னஸ்?” என்று அறிவு பசியை வெளிப்படுத்த என் அக்காவும் அவனுக்கு கின்னஸ் புத்தகங்களை பற்றிய ஒரு மினி டூர் அடிக்க, அகில் சொன்னது..

“பெரியம்மா, அப்போ நான் கூட கடையில் இருக்கிற எல்லா பே ப்ளேட்ஸையும் வாங்கி நம்ம வீட்டில அடுக்கி வைச்சு கின்னஸ் சாதனை பண்ணட்டுமா??”

(bay blade என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம் பூலோகத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என்று கேட்கிறேன், அதுதான் சிறுவர்களின் ஹாட் விளையாட்டு சாதனம்… கொஞ்சம் மாடர்ன் பம்பரம், ஆனால் கொஞ்சம் விலை ஜாஸ்தி, ஒரு bay blade விலைக்கு சுமாராக 35 பம்பரம் வாங்கிவிடலாம்…)

அடப்பாவி உன் தனிதிறமையை மட்டும் தான் கின்னஸ் ரெக்கார்ட்ல சேர்த்துப்பாங்க, அப்பா சொத்தை கரைக்கறது எல்லாம் கவுன்ட்ல எடுத்துக்க மாட்டாங்க என்று சொல்லி புரியவைப்பதற்க்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

ஜெயா.

என்னடா இது பல மாசமா இந்த ஏரியா பக்கமே வராதவங்க, இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்காங்களே என்று பார்க்கறீர்களா? இல்லங்க, இது புத்தக கண்காட்சி வாரம், எல்லா எழுத்தாளர்களும் ஃபுல் பார்ம்ல இருக்கும் தருணம், நாமளும் அவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்பைர் ஆகி ஒரு பதிவினை போட்டு பெருமையா பீத்திக்க வேண்டாமா, அதற்க்குதான் 🙂

இன்னுமொன்னு, சரி உங்கம்மா ஊட்டறதை இப்படி பிரிச்சு மேயறீங்களே, உங்க திறமை அதுல என்ன என்று கேட்கறத்துக்கு முன்னாடியே சொல்லிடறேன் யார் யாருக்கு எது எது வருமோ, அதை செய்யறது தான் நாட்டுக்கு செய்யற மிகப்பெரிய சேவை என்று யாரோ ஒரு ரொம்ப பெரிய மனுஷர் சொல்லி இருக்கார்ங்க 🙂 🙂

தர்மா தம்மா என்றால்…

1 Comment

சீசனுக்கு ஒரு கிறுக்கு என்ற கொள்கையில் இப்போது வந்திருக்கும் கிறுக்கு புத்த மதம். அதன் தொடர்பாக ஒரு புத்தகமும் படித்துக் கொண்டு இருப்பதால், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம், புத்தர், நடு வழி, முக்தி, Awareness, Monastery மட்டும்தான்.

நேற்று காலை நான், எனது அக்கா, வெங்கட் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்த போது, புத்தர் பெரும்பான்மையாக பயன்படுத்திய பாலி மொழியை பற்றிய பேச்சு வந்தது. எப்படி பழங்காலத்தில் பாலி மொழி வழக்கத்திலிருந்தது எனவும், சமஸ்கிருததத்தையும் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது,

“பாலியும் சமஸ்கிருதமும் கொஞ்சம் மாறுபடும். சமஸ்கிருத்ததில் இருக்கும் ர என்ற எழுத்து பாலியில் கிடையாது. சமஸ்கிருதத்தில் ‘தர்மா’ என்று இருந்தால் அது இங்கே ‘தம்மா’ என்று இருக்கும்…” எனது அக்காவின் கண்டு பிடிப்பு இது..

அருகில் அமர்ந்து இருந்த அகில் அடுத்த நொடியில் பதில் கேள்வி கேட்டது,

“அப்போ ‘குர்மா’ வை எப்படி சொல்லுவாங்க?”

வெடிச்சிரிப்பின் இடையே எனது அக்கா சொன்ன “கும்மா” யார் காதிலும் விழவில்லை.

ஜெயா.

அனன்யா என்னும் ஒரு குட்டி பிசாசு…

3 Comments

அகில் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ இந்த இடத்தில் அனன்யா பற்றி எழுத முடியமாட்டேன் என்கிறது… நான் எழுதாத காரணத்தால் குழந்தை வளராமல் இருக்குமா என்ன? நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது குட்டி பாப்பா.

பன்னிரண்டு மாதங்கள் முடிய போகிறது, அழகாக எழுந்து நிற்க்கிறது, பிடித்துக் கொண்டு நடக்க முயற்ச்சிறது, வெற்றிகரமாக கட்டிலின் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கு நடந்து சென்றுவிடுகிறது.

பெரிய கிராதகியாக வரும் என்பது, அகில் கையில் வைத்திருக்கும் பொம்மை என்ன என்று தெரியாமலேயே பிடுங்க வருவதிலிருந்து தெரிகிறது. அகிலோ, பொம்மையை அதன் கையில் கொடுக்காமல் தூரம் போய்விடுகிறான், ஓ என்று குரல் எடுத்து சத்தம் போட்டு தன் உரிமையை நிலை நாட்ட முயற்சிகிறது, அழுது என்னை பார்த்து கூக்குரலிட்டு அழைக்கிறது. நான் நடுவில் பஞ்சாயத்து செய்து, எங்கே பஞ்சாயத்து செய்வது, இரண்டாவதுதான் ஒன்னும் பேச முடியாமல் நிற்க்கிறதே, அதனால் சாம தான பேத தண்டத்தில் எதையாவது அகிலிடம் பிரயோகம் செய்து  கையில் இருப்பதை அவளிடம் கொடுக்க செய்கிறேன். இது வந்து வெறும் விளையாட்டு சாமானுக்கு மட்டுமே. அகில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதோ, இல்லை அதியசமாக படித்துக் கொண்டு இருக்கும் போதோ என்றால், “பாப்பா,  வா பாப்பா, இந்தா இந்த நோட்டை கிழிச்சுடு பாப்பா,” என்றோ இல்லை, “இதை கொட்டிடு பாப்பா” என்று வரவேற்க்கிறது. இங்கே என் பஞ்சாயத்திற்க்கு இடமில்லை என்று தெளிவாக இரண்டும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன.

அகிலோ சில சமயம் அதோடு விளையாடுகிறான், சில சமயம் அதோடு மல்லுக்கு நிற்கிறான். அவன் பாசமாக வரும் போது இது ஓ என்று கத்தி அவனை விரட்டி விடுகிறது, அவன் ஏதோ விளையாடிக் கொண்டு இருந்தால் அவனை வந்து தொந்தரவு செய்து என்னை பார் என்கிறது… இப்போதைக்கு இருவரையும் வெவ்வேறு அறைகளில் வைத்து பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது… சிவாஜி கணேசன் சாவித்திரி போல எதிர்பார்த்தால் இது இரண்டும் எம்.ஜி.யார் நம்பியார் போல வருவார்களோ? திடீரென்று அகில் மிக நல்ல குழந்தையாக மாறி, பாப்பாவிற்க்காக என்னிடம் சிபாரிசுக்கு வருகிறது, சின்ன குழந்தைதானே அம்மா, பெரிசான தெரிஞ்சுக்கும் என்று சமாதானம் சொல்லுகிறது…

குட்டி பாப்பா, யாராவது எப்போதும் என்னை வெளியே அழைத்து செல்லுங்கள்… மடிமேல் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்… அப்படியும் இல்லையா நான் இருக்கும் ரூமில் உட்கார்ந்து நான் செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டு இருங்கள் என அழிச்சாட்டியம் பண்ணுகிறது. வீட்டில் இருக்கும் போது சில சமயம் அழகாக இருக்கிறார்போல் இருக்கிறது, சில சமயம் சுமாராக் இருப்பது போல் இருக்கிறது, ஆனால் ஒரு நல்ல பட்டுபாவாடை போட்டு, சில நகைகளை போட்டுவிட்டால் கண்ணே பட்டு விடும் போல அழகாக இருக்கிறது… இந்த தோற்றங்களில் எதை நம்புவது என்று தெரியவில்லை 🙂

இதற்க்கு மேலே என்ன சொல்லுவது, தினமும் ஏதாவது சுவாரியமாக நடக்கிறது, வாழ்க்கை பிரகாசமாக சென்று கொண்டு இருக்கிறது, எதிர்காலம் ஒளிமயமாக தெரிகிறது…

ஜெயா.

வரலாறு தெரியாதவர்களுக்காக, பிறந்த போது அனன்யா ஒரு குட்டி தேவதையாகத்தான் தெரிந்தாள் 🙂

புலம்பல்கள்…

Leave a comment

சே இந்த பொண்ணுங்களே இப்படிதானா?

வாயை தொறந்தா மூட மாட்டேங்கறாங்களே…

பார்க்கறத்துக்கு மட்டும்தான் அழகு இருக்காளுங்க, மிச்சதெல்லாம் விஷம்…

ஓவரா பண்ணதுங்க?

எப்படித்தான் இதுங்களை எல்லாம் சமாளிக்கறானுங்களோ?

இந்த பொண்ணுங்க என்ன நினைக்குதுங்க, என்ன சொல்ல வருதுங்கன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குதே…

பையனுங்களை டார்ச்சர் பண்றதையே பொழப்பா வைச்சு இருக்குமோ?

இது எல்லாம் புதுசா காதல்ல விழுந்த பசங்களோட புலம்பல் என்று மட்டும் தப்பா நினைச்சுக்காதீங்க, (இன்னும் ஒரு பத்துநாள்ள ஒரு வயசை தொடபோகும் ) பொண்ணை பெத்து இருக்கும் அப்பாவின் புலம்பல்தாங்க.. அதிலயும் கடைசி தான் இன்னும் சூப்பர்..

ஊர்ல அவனவன் ஒரு பையனை மட்டும் பெத்துட்டு சந்தோஷமா இருக்கானுங்க, நான் இந்த ரெண்டு பொண்ணுங்களை மேய்க்கறத்துக்குள்ள படற பாடு இருக்கே…

ஜெயா.

அந்த ரெண்டு பொண்ணுங்கள்ள ஒன்னு நானுங்கோ 🙂

ஆச்சர்ய குறி!

Leave a comment

அனன்யாவின் காதுகுத்தல் நிகழ்ச்சிக்காக கும்ப கோணம் சென்றிருந்த நாங்கள் அப்படியே  தஞ்சை பெரிய கோவிற்க்கும் சென்றோம். குடும்பம் முழுவதும் பக்தியோடு கோவிலுக்குள் நின்றிருக்க, கூட்டத்தை பார்த்த நானும் அகிலும் மெதுவாக அங்கே இருந்து நழுவி கோவிலை சுற்றி வரலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வெளி பிரஹாரமே கண்ணை கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்தது, நிறைய லிங்கங்கள், மற்றும் பல தெய்வ உருவங்கள், சுவரோவியங்கள் என்று வரிசையாக இர்ந்தது. சுவரோவியங்கள் முழுதும் சிவபுராண கதைகளாக இருக்க வேண்டும், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், வரைந்து பல காலம் ஆனதாலும் சரியாக புரிந்து கொள்ள முடியாதவாறுதான் இருந்தன. அதிலும் நம் ஊர் குரங்குள் அதில் தங்கள் பேரை பிரபு என்றும் மும்தாஜ் என்றும் எழுதி இருந்ததை என்ன என்று திட்டுவது…

இருந்தாலும் அகில், அம்மா இந்த ஸ்டோரி சொல்லும்மா என்று கேட்க, நானும் நமக்கு தெரிகிறதோ இல்லை, பரவாயில்லை என்று ஒரு படத்துக்கும் மற்றோரு படத்துக்கும் சும்மா தொடர்பு இருக்கின்றாற்போல் சொல்ல ஆரம்பித்தேன். “இங்கே ஒரு ராஜா இருந்தாராம், அங்கே ஒரு லிங்கம் இருந்தததாம், (அடுத்த படம்) அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாளாம், அவளுக்கு ஒரு குழந்த்தை இருந்ததாம் அங்கேயும் ஒரு லிங்கம் இருந்ததாம்… (அடுத்த படம்) ஒரு குதிரை அங்கே வந்ததாம், அது மேலே ஒரு ராஜா இருந்தாராம் (அடுத்த படம்) அப்படியாக ஒரு கதையா அல்லது பல கதைகளா என்று தெரியாத வண்ணம் கதை சொல்லிக் கொண்டு வந்தேன்..

ஒரு இருபது படம் தள்ளியபின், குழந்தை என்னிடம் கேட்டது – “இந்த லிங்கத்துக்கு, இவ்வளவு நடந்ததாம்மா??” நீங்கள் அகிலிடம் ஒருதரம் பேசி இருந்தால், அது எந்த எக்ஸ்பிரஷினில் இதை கேட்டு இருக்கும் என்று யூகிக்க முடியும் 🙂 எனக்கு ஒரே சிரிப்பு, அவனிடம் சொன்னேன், “டேய், இந்த லிங்கத்துக்கு தை விட நிறைய நடந்து இருக்கு, அதனாலதான் அதுக்கு, இந்த ராஜா இவ்வளவு பெரிய கோவில் எல்லாம் கட்டி வைச்சு இருக்கார், இன்னும் நிறைய கோவிலுக்கு போனா, இன்னும் கூட நிறைய கதைகள் இருக்கு”அப்படியா என்று கேட்டு தலையை ஆட்டிக் கொண்டு வந்தது, ஆனாலும் அது கேட்டதை இன்னும் பல வருடங்களுக்கு மறக்க மாட்டேன்..

ஜெயா.

ஜாலியோ ஜாலி

Leave a comment

இன்று வெங்கட்டிற்க்கு விடுமுறை, நாராயண் மூர்த்தி அவர்களின் குலதெய்வம் கிருஷணரோ என்னமோ இன்ஃபோஸிஸ் கிருஷண ஜெயந்திக்கு விடுமுறை.. எனகக்கும் அகிலுக்கும் – வேலை மற்றும் பள்ளி.

அகிலை எழுப்ப முயற்சி செய்து கொண்டு இருந்த போது, வெங்கட் வந்து,

“இன்னைக்கு எனக்கு லீவு, இன்னைக்கு எனக்கு லீவு..” என்று குழந்தையை போல சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்… அகிலை வெறுப்பேற்றுகிறாராம்… நானோ ஒரு முறை, இப்போது இதுவும் பள்ளிக்கு போகமாட்டேன் என்றால் என்ன பண்ணுவது என்று.

“அப்பா, எனக்கு ஸ்கூலுக்கு போவதற்க்கு பிடிக்கும், அங்கே போய்தான் நான் கலரிங் பண்ணுவேன், பூமில இருக்கற எல்லா டான்ஸையும் பிக்சர் பார்த்து கலரிங் பண்ணுவேன், வொர்க்ஷீட்ஸ் எழுத்வேன். அதனால நான் வந்து ஜாலியா ஸ்கூலுக்கு போறேன். வீடுதான் போர் அடிக்கும்…”

வெங்கட்டின் முகத்தை பார்க்க முடியவில்லை 🙂 நானோ சத்தம் போட்டு சிரித்து வேறு வெறுப்பேற்றினேன்.படுக்கையில் இருந்து துள்ளி குதித்து எழுந்து ஓடியது கிளம்ப…

பின்ன ஹாலுக்கு வந்து என் அம்மாவிடம் அக்காவிடமும் சொல்ல ஆரம்பித்தேன்..

“அம்மா, வெங்கட் காலங்கார்த்தால அகில் கிட்ட இருந்து ஒரு பெரிய பல்ப் வாங்கினார்…”

பல் தேய்க்க ஆரம்பித்து இருந்த குழந்தை வந்து படு சீரியசாய் சொன்னது,

“அப்பா, எனக்கு பெரிய பல்ப் வேண்டாம், சின்ன பல்ப் இருக்குமில்ல, நடுவில வையர் போட்டு தொங்க விடலாம் இல்ல, அது போல ஒன்னுதான் வேணும் பா…”

முதலில் வெங்கட் முகம் கொடுமையாக இருநந்து என்றால் இப்போது கோரமாக இருந்தது 🙂

ஜெயா.

ஹைடெக் காற்றாடி

Leave a comment

போன வாரம் கடற்க்கரையில் காற்றாடி விட கிளம்பினோம். வாசகர்களின் இனிய கவனத்திற்க்கு: அது ஹாங்காங்கில் வாங்கிய காத்தாடி 🙂 ஆந்தையின் வடிவில் செய்த பிளாஸ்டிக் காற்றாடி. கூடவே நைலான் கயிறு ஒரு ஐம்பது மீட்டர், அழகிய பிளாஸ்டிக் கைப்பிடியில் சுற்றி வைத்து இருந்தது. நூல் தானாக வெளிவராமல் ஒரு லாக் வேறு. ஆக மொத்தம் ஒரு ஹைடெக் காத்தாடி என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

நாங்கள் போன நேரம் காற்று ரொம்பவும் குறைவாக இருந்தது.. சரி பரவாயில்லை என்று கஷ்டப்பட்டு மேலெ ஏற்றி விட்டுக் கொண்டு இருந்தோம்.  அகிலின் பெரியம்மா மேலே எற்றி, கொஞ்ச நேரம் நூல் விட்டுக் கொண்டு இருக்க, அகில் கேட்கிறது பெரியம்மாவிடம்,

“பெரியம்மா, கிவ் மீ தி ஆப்பரேட்டர்…”

நாங்கதான் அப்போவே சொன்னோமில்ல, அது ஹைடெக் காற்றாடி என்று 🙂

ஜெயா.

முதல் கனவே… முதல் கனவே…

Leave a comment

இரண்டொரு நாட்களுக்கு முன், பின்னிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அகிலின் குரல் – சஜ்ஜூ, சஜ்ஜு…

கனவில் ஏதோ பள்ளிக் காட்சி ஓடிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இரண்டு தரம் அவன் பெயரை அதட்டி கூப்பிட்டு விட்டு திரும்ப தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டது குழந்தை 🙂

நல்லவேளை மேரி மேரி என்றோ, அல்லது அபிநயா அபிநயா என்றோ சொல்லவில்லை, என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியது தான் 🙂

ஜெயா.

பள்ளி குறும்பு

5 Comments

பைக்கில் நானும் அகிலும் போய் கொண்டு இருந்த போது அகில் சொன்ன கதை…

“சஜ்ஜு கிளாஸ்ல பேசிக் கிட்டே இருந்தான். அதனால ஆன்ட்டி வந்து அவனை கீழ போய் பிரி. கே.ஜி ல உக்கார சொல்ல்ட்டாங்க…  நான் ஒன்னுமே பண்ணலை, சும்மா அவன் போகும் போது அவனுக்கு பை பை சொன்னேன், அத பார்த்த ஆன்ட்டி, நீ போகிறவனுக்கு என்ன பை சொல்லறது, நீயும் அவன் கூடவே போய் உக்காந்துக்கோ என்று சொல்லி அனுப்பி வைச்சுட்டாங்க… ரெண்டு பேரும் கிழே போய் உக்காந்துகிட்டோம்..”

கேட்ட எனக்கு அநியாய சிரிப்பு வர, வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, இரண்டு தரம் இதே கதையை கேட்டு ஒரு ஐந்து நிமிஷம் சிரித்துவிட்டு கிளம்பினோம்.

ஜெயா.

Older Entries