அனன்யா வந்த பிறகு அகிலின் ரியாக்ஷ்ன்களை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கின்றேன், எழுத ஆரம்பித்தால் ரொம்ப பெரியதாக போகும் போல இருக்கவே தள்ளிப் போய்க் கொண்டு இருக்கின்றது. சீக்கிரம் எழுதுகிறேன்… இப்போதைக்கு சொல்ல வந்த சின்ன விஷயம் என்ன என்றால், இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை தனக்கு கிடைத்துக் கொண்டு இருந்த அன்பின் அளவு குறைந்து விடும் என்று எண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடும். பெரியவர்கள் வேண்டுமென்றே வித்தியாசம் பாராட்ட வில்லை என்றாலும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் அப்படி தோன்றி விட வாய்ப்பு இருக்கின்றது.

அகில் அப்படி யோசிப்பதற்க்கு முன்னால் ப்ரோஅக்டிவாக நானே என்ன சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் என்றால், “அகில், பாப்பா வந்த பிறகு உன் மேல் அன்பு ரொம்ப அதிகமாகி விட்டது.  உன்னை பார்த்தாலே ஆசை ஆசையாக இருக்கின்றது… ” அதுவும் ஆசையாக வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளுகிறது. சாதாரணமாக திட்டு வாங்கும் குறும்புகளை கூட இப்போது எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறேன். டி.வி பார்ப்பது அதிகமாகி இருக்கின்றது. பாப்பா வந்ததால தன்னுடைய வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று அது உணராத அளவிற்க்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஒரு 60% வெற்றியும் கண்டு இருக்கின்றேன் என்று தோன்றுகிறது. ஆனால் அனனயாவிற்கு பால் கொடுக்கும் நேரங்களும், அது அழும் நேரங்களும், அதை தூங்க வைக்கும் நேரங்களையும் தவிர்க்க முடிவதில்லை, அப்போது எல்லாம் டி.வி அல்லது வீட்டில் இருக்கும் வேறு யாராவது அகிலை மேய்க்கிறார்கள்.

பாதி நேரம் அகில் பள்ளியில் கழித்து விடுவதாலும், பாதி நேரம் அனன்யா தூக்கத்தில் இருப்பதாலும் என்னுடைய வண்டி பெரிதாக ஆட்டம் காணாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது…

ஜெயா.