அகிலுக்கு ஹாங்காங் toysrus கடையில் நடையோ நடை என நடந்து இங்கு இல்லாத டாய்ஸாக பார்த்து வாங்கினோம். சைனீஸ் காத்தாடி, பெரிய பபுள் விடும் பாட்டில், கேஸில் செட், வேர்ட் பில்டர் என இரண்டு பை நிறைய. வாங்கும் போதே சொல்லித்தான் வாங்கி தந்தேன், அடேய், எல்லா சாமான்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எதையும் தொலைக்கவோ இறைத்தோ போட கூடாது என்று. வாங்கும் வரை என்ன சொல்லும் குழந்தை, கண்டிப்பா அம்மா, பத்திரமா வைச்சுப்பேன் அம்மா என்று தலை மீது அடிக்காத குறையாக சத்தியம் செய்தது…

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள் மொத்தம் தரையில். எடுத்து வையடா என்று கெஞ்சி, கொஞ்சி இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பிரயோஜனமில்லை. உடனே அவன் பெரியம்மா என்ன செய்தாள், “சரி நீ எடுத்து வைக்காதே, நானே எடுத்து வைக்கிறேன், ஆனால் ஷெல்ஃபில் இல்ல, பரணை மேல்… மறந்துவிடு இனிமேல் உன்னுடைய பொம்மைகளை” என்று சொல்ல, அப்போதும் நகர வில்லை உதவி செய்யவோ இல்லை அவனாகவே எடுத்து வைக்கவோ… என்ன அழுத்தக்கார கட்டையாக இருக்கிறது என்று எங்களுக்கு மலைப்பு… சரி சொன்னதை நடத்திக்காட்ட வேண்டியது தான் என அவள் எடுத்து பரணை மேல் வைக்க, நான் டி.வி ரிமோட்டையும் புதிதாக வாங்கிய வீடியோ கேம்ஸையும்  எடுத்து என் பைக்குள் போட்டுக் கொண்டு ஆபிஸ்க்கு கிளம்பினேன்.

அதுவரை அமைதியாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருந்தது, அப்போதுதான் என்ன செய்வது என்று யோசனை வந்தால் போல் ஒரு எஃப்க்ட் கொடுத்து கொண்டு இருந்தது. அப்போது அவன் பெரியம்மா, “சரி இவனுக்கு தன்னுடைய ஒரு தவறை சரி செய்து கொள்ளுவதற்க்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கலாம்… அகில் நீயாக எழுந்து இப்போது ஹாலில் இருக்கும் பொருட்களை ஏறக்கட்டி வைத்து உன்னுடைய சைக்கிளை துடைத்து வைத்தால் அம்மாவை டி.வி ரிமோட்டை என்னிடம் கொடுத்து விட்டு செல்ல சொல்லுவேன், நீ இந்த வேலைகளை முடித்தவுடன் டி.வி. பார்க்கலாம்” என்று சொல்லவும் அதற்க்காகவே காத்திருந்தது போல ஓடிவந்து “சரி பெரியம்மா இதோ செய்கிறேன்” என்று இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்காத மாதிரி பாவனையில் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். நானும் ரிமோட்டை வீட்டில் வைத்துவிட்டு ஆபிஸ் சென்று விட்டேன்.

திரும்ப வீட்டுக்கு சாயங்காலம் போனவுடன் பூனைக்குட்டி மாதிரி ஓடிவந்து சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தான். இடையில் “அம்மா, வீடியோ கேம்ஸ் தாயேன், நான் எல்லாம் க்ளீன் செய்து விட்டேன்.. பெரியம்மாவே ஹேப்பி ஆகி டி.வி வைத்தாள்…”

“தரேன் அகில் அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசி சால்வ் பண்ணனும் என்று நினைக்கிறேனே..”

“என்னம்மா”

“அம்மா உனக்கு நீ சொல்லுவதை நம்பி டாய்ஸ் வாங்கிதரேன், நீ கடையில கேட்டதுக்கு எல்லாம் தலையை ஆட்டிட்டு வீட்டுககு வந்து காத்துல பறக்க விட்டுடறையே.. அப்படி பண்ணாமல் இருக்கறதுக்கு நான் என்ன பண்ணறது சொல்லு..”

“திட்டலாமா?” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு

“திட்டறதா… அது எல்லாம் எனக்கு பிடிக்காதுப்பா…” திட்டற வார்த்தைகளை நீ சொல்லறயா? நான் சொல்லட்டும்மா?

“ம்ம்ம் அடிக்கலாமா?”

“திட்டறதே எனக்கு பிடிக்காது.. அடிக்கறது எல்லாம் சுத்தம.. நான் அடிக்க மாட்டேன்பா…” நல்லா நாலு வைச்சு வாங்கலாம் என்றுதான் தோணுது என்ன பண்ணுவது…

“சொல்லி சொல்லி பார்க்கலாமா?” வாடா என் சொகுசு மகனே

“எத்தனை தரம் தான் சொல்லறது? காலையில எவ்வளவு தரம் சொன்னோம், கேட்டியா நீ?” அப்ப்டி வாங்க சார் வழிக்கு..

அதற்க்குள்  கூட இருந்த குட்டியம்மா ஏதோ பேச முயற்சி செய்ய, நானும் அதை கொஞ்சுவதாக, “அகில், பாப்பா ஏதோ சொல்லுதுடா.. என்ன என்று கேளு..”

உடனே பாப்பா அருகில் காதை கொண்டு வைத்து… ” அம்மா இதை நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கலாம் .. இப்போ பேச வேண்டாம் என்று சொல்லுதுமா…

அடப்பாவி என்ன ஒரு சமயோஜிதமான பதில். என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.. சிரித்து முடித்துவிட்டு, “சரி  இப்போ தருகிறேன், இனிமேல் ஒருதரம் சொல்லும் போதே எடுத்து வைத்துவிட வேண்டும் ஓகேயா?”

“ஓ ஓ ஓ ஓ கே அம்மா…

அப்புறம் வீடியோ கேம்ஸை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தது. இன்னும் பரணையில் இருக்கும் சாமான்களை கீழே இறக்காததால் திரும்ப  இரைத்து போடும் சூழ்நிலை நேரவில்லை.. அடுத்த தரம் இந்த பொறுப்பில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகிறது என்று பார்க்க எனக்கே ஆசையாக இருக்கிறது. 🙂

ஜெயா.

ஹாங்காங் பயண அனுபவங்கள் வந்து கொண்டே இருக்கின்றது, இது அதை விட சுவாரசியமாகவும் சின்னதாகவும் இருந்ததால் இதை எழுதிவிட்டேன்.